YouVersion Logo
Search Icon

நீதிமொழி 30

30
ஆகூரின் வார்த்தைகள்
1யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு.
அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது:
“இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன்,
ஆனால் நான் வெற்றிபெற முடியும்.
2நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல;
ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை.
3நான் ஞானத்தைக் கற்கவில்லை,
பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை.
4மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்?
தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்?
வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்?
பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்?
அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன?
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
5“இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது;
அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர்.
6அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே,
கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார்.
7“யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்;
நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும்.
8மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்;
எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம்,
ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும்.
9இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு
‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்;
அல்லது நான் ஏழையாகி, திருடி
என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும்.
10“வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே;
அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய்.
11“தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும்,
தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு;
12தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும்,
தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு;
13எப்பொழுதும் கண்களில் பெருமையும்
ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு;
14கூர்மையான வாள் போன்ற பற்களையும்
தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு;
அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும்,
மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள்.
15“இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர்.
“ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை,
‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு:
16பாதாளம்,
மலட்டுக் கருப்பை,
தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.
17“தன் தந்தையை ஏளனம் செய்து,
தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை
பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும்,
கழுகுகள் அவற்றைத் தின்னும்.
18“எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை,
நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை:
19ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும்,
பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும்,
நடுக்கடலிலே கப்பலின் வழியும்,
இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை.
20“ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே:
அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு,
‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள்.
21“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை,
நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை:
22அரசனாகிவிடும் வேலைக்காரன்,
மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும்,
23யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண்,
தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே.
24“பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு,
ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை:
25எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்;
ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன;
26குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே;
ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன.
27வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை,
ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன;
28பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம்,
ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது.
29“வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை,
கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு:
30மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை;
31கர்வத்துடன் நடக்கும் சேவல்,
வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்;
தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.
32“நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால்,
அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால்,
உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்!
33பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும்,
மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும்,
கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in