YouVersion Logo
Search Icon

செப்பனியா 2

2
யூதாவும் எருசலேமும் தேசங்களுடன் நியாயந்தீர்க்கப்பட்டன
யூதா மனந்திரும்ப அழைத்தல்
1யூதாவே, வெட்கங்கெட்ட தேசமே,
ஒன்றுசேருங்கள், ஒன்றாய் சேருங்கள்,
2நியமிக்கப்பட்ட காலம் வருமுன்பும்,
அந்த நாள் பதரைப்போல் வாரிக்கொள்ளப்படும் முன்பும்,
யெகோவாவின் பயங்கர கோபம்
உங்கள்மேல் இறங்கும் முன்பும்,
யெகோவாவின் கடுங்கோபத்தின் நாள்
வரும் முன்பும் ஒன்றுசேருங்கள்.
3நாட்டில் தாழ்மையுள்ளோரே,
யெகோவாவின் கட்டளைகளைச் செய்கிறவர்களே,
நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் தேடுங்கள்.
நியாயத்தைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
அப்பொழுது ஒருவேளை யெகோவாவின் கோபத்தின் நாளிலே நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
பெலிஸ்தியாவுக்கு எதிரானது
4காசா கைவிடப்படும்,
அஸ்கலோன் பாழாக விடப்படும்.
அஸ்தோத் நண்பகலில் வெறுமையாக்கப்படும்,
எக்ரோன் வேரோடு பிடுங்கப்படும்.
5கடற்கரை அருகே வாழும் கிரேத்திய மக்களே,
உங்களுக்கு ஐயோ கேடு;
பெலிஸ்தியரின் நாடாகிய கானானே,
யெகோவாவின் வார்த்தை உனக்கு எதிராக இருக்கிறது.
“நான் உன்னை அழிப்பேன்,
ஒருவரும் அங்கு தப்பியிருக்கமாட்டார்கள்.”
6கிரேத்தியர் வாழும் கடற்கரை நாடு,
இடையர்களுக்கும் செம்மறியாடுகளின்
தொழுவங்களுக்கும் உரிய இடமாகும்.
7அது யூதா குடும்பத்தில் மீதியாயிருப்பவர்களுக்கு உரியதாகும்.
அங்கு அவர்கள் மேய்ச்சலைக் கண்டுகொள்வார்கள்.
அவர்கள் மாலை வேளைகளில்,
அஸ்கலோனிலுள்ள வீடுகளில் படுத்திருப்பார்கள்.
அவர்களின் இறைவனாகிய யெகோவா,
அவர்களில் கரிசனையாயிருப்பார்;
அவர்கள் இழந்த செல்வங்களை அவர்களுக்குத் திரும்பவும் கொடுப்பார்.
மோவாபியருக்கும், அம்மோனியருக்கும் எதிரானது
8மோவாபியரின் இழிவுகளையும்,
அம்மோனியரின் நிந்தனைகளையும் நான் கேட்டேன்.
அவர்கள் என் மக்களை இழிவாய் பேசி,
அவர்களின் நாட்டிற்கெதிராக பயமுறுத்தல்களை ஏற்படுத்தினார்கள்.
9ஆகவே, இஸ்ரயேலின் இறைவனாகிய
சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது,
நான் வாழ்வது நிச்சயம்போலவே,
மோவாப் நாடு சோதோமைப் போலவும்,
அம்மோனியரின் நாடு கொமோராவைப் போலாவதும் நிச்சயம்.
அவை என்றென்றும் களைகள் வளரும் இடமாகவும்,
உப்புப் பள்ளங்களாகவும், பாழிடமாகவும் காணப்படும்.
என் மக்களில் மீதியாயிருப்போர் அவர்களைக் கொள்ளையடிப்பார்கள்.
என் நாட்டில் தப்பியவர்கள் அவர்கள் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொள்வார்கள்.
10சேனைகளின் யெகோவாவின் மக்களை இகழ்ந்து,
கேலி செய்த அவர்களின் அகந்தைக்குப் பதிலாக,
அவர்களுக்குக் கிடைப்பது இதுவே.
11யெகோவா நாட்டிலுள்ள தெய்வங்களையெல்லாம் அழிக்கும்போது,
அவர் அவர்களுக்கு ஒரு பெரும் பயங்கரமாய் இருப்பார்.
அப்பொழுது பூமியெங்குமுள்ள நாடுகளும் யெகோவாவை ஆராதிப்பார்கள்.
ஒவ்வொருவரும் தன்தன் சொந்த நாட்டிலிருந்து அவரை வழிபடுவார்கள்.
கூஷ்
12எத்தியோப்பியரே,
நீங்களும் என் வாளுக்கு இரையாவீர்கள்.
அசீரியாவுக்கு எதிரானது
13அவர் தன் கையை வடக்கிற்கு எதிராக நீட்டி,
அசீரியாவை அழிப்பார்,
நினிவேயை அவர் முற்றிலும் பாழாக்கி,
பாலைவனத்திற்கு ஒப்பான பாழ்நிலமாக்குவார்.
14அங்கே ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் படுத்திருக்கும்.
எல்லா விதமான விலங்குகளும் அங்கே படுத்திருக்கும்.
பாலைவன ஆந்தையும், கீச்சிடும் ஆந்தையும்
அதன் தூண்களில் தங்கியிருக்கும்.
அவற்றின் சத்தம் ஜன்னல்களின் வழியாக எதிரொலிக்கும்.
வாசல்களில் இடிபாடுகள் குவிந்து கிடக்கும்.
கேதுரு மரத்தினாலான உத்திரங்கள் வெளியே தெரியும்.
15“நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.”
என தனக்குள் சொல்லிக்கொண்டு,
பாதுகாப்புடன் கவலையின்றி வாழ்ந்த நினிவே நகரம் இதுவோ.
இது எவ்வளவாய்ப் பாழடைந்து,
காட்டு மிருகங்களுக்குப் தங்குமிடமாயிற்று!
அதைக் கடந்துசெல்கிறவர்கள்,
கைகளைத் தட்டி,
கேலி செய்வார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in