YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 2

2
இஸ்ரவேலின் குமாரர்கள்
1ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், 2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் ஆகியோர் இஸ்ரவேலின் குமாரர்களாவார்கள்.
யூதாவின் குமாரர்கள்
3ஏர், ஓனான், சேலா ஆகியோர் யூதாவின் குமாரர்கள். இந்த மூன்றுபேரும் பத்சூவா பெற்ற பிள்ளைகள். இவள் கானான் நாட்டுப் பெண். யூதாவின் முதல் குமாரனான ஏர், கெட்டவனாக இருப்பதைக் கர்த்தர் கண்டார். அதனால் கர்த்தர் அவனை கொன்றுவிட்டார். 4யூதாவின் மருமகளான தாமார் அவனுக்குப் பாரேஸ், சேரா எனும் இருவரைப் பெற்றாள். ஆக யூதாவுக்கு 5 குமாரர்கள் இருந்தார்கள்.
5எஸ்ரோனும் ஆமூலும், பாரேசின் குமாரர்களாவார்கள். 6சேராவுக்கு 5 குமாரர்கள். சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா ஆகியோர் ஆவார்கள்.
7சிம்ரியின் குமாரன் கர்மீ. கர்மீயின் குமாரன் ஆகார். ஆகார் இஸ்ரவேலுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தவன். இவன் போரில் சில பொருட்களை எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் தேவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
8அசரியா ஏத்தானின் குமாரன்.
9யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.
ராமின் சந்ததியினர்
10ராம், அம்மினதாபின் தந்தை ஆவார். அம்மினதாப், நகசோனின் தந்தை ஆவார். நகசோன், யூத ஜனங்களின் பிரபு. 11நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை. 12போவாஸ் ஓபேதின் தந்தை. ஓபேத் ஈசாயின் தந்தை. 13ஈசாய் எலியாபின் தந்தை. இவன் அவனது மூத்த குமாரன். இவனது இரண்டாவது குமாரன் அபினதாப். இவனது மூன்றாவது குமாரன் சிம்மா. 14இவனது நான்காவது குமாரன் நெதனெயேல், இவனது ஐந்தாவது குமாரன் ரதாயி. 15இவனது ஆறாவது குமாரன் ஓத்சேம், ஏழாவது குமாரன் தாவீது. 16செருயாளும் அபிகாயிலும் இவர்களது சகோதரிகள். செருயாளிற்கு அபிசாய், யோவாப், ஆசகேல் என மூன்று குமாரர்கள். 17அபிகாயில் அமாசாவின் தாய், இஸ்மவேலனாகிய யெத்தேர் அமாசாவின் தந்தை.
காலேப்பின் சந்ததியினர்
18காலேப் எஸ்ரோனின் குமாரன். காலேபிற்கு பிள்ளைகளும் அசுபா என்ற மனைவியும் இருந்தனர். அசுபா எரீயோத்தின் குமாரத்தி. ஏசேர், சோபாப், அர்தோன் ஆகியோர் அவனது பிள்ளைகளாவார்கள். 19அசுபா மரித்ததும் காலேப் எப்ராத்தை மணந்துக் கொண்டான். இருவருக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவர்கள் அவனுக்கு ஊர் என்று பெயரிட்டனர். 20ஊர் ஊரியின் தந்தையானான். ஊரி பெசலெயேலின் தந்தையானான்.
21பின்னர், எஸ்ரோனுக்கு அறுபது வயது ஆனதும், அவன் மாகீரின் குமாரத்தியை மணந்துக் கொண்டான். மாகீர் கிலெயாத்தின் தந்தை. எஸ்ரோன் மாகீரின் மகளோடு பாலின உறவுகொண்டான். அவள் செகூப்பை பெற்றாள். 22செகூப் யாவீரின் தந்தை. யாவீருக்கு கிலேயாத் நிலத்தில் 23 நகரங்கள் இருந்தன. 23ஆனால் கேசூரும் ஆராமும் யாவீரின் ஊர்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றுள் ஜாயிர் நகர் மற்றும் கேனாத் நகரும் அதனைச் சுற்றியுள்ள 60 சிற்றூர்களும் அடங்கும். இந்நகரங்களும் ஊர்களும் கிலேயாத்தின் தந்தையான, மாகீரின் குமாரர்களுக்கு உரியவை.
24எஸ்ரோன் எப்ராத்தாவில் உள்ள ஊரான காலேப்பில் மரித்தான். மரித்த பிறகு, அவன் மனைவியான அபியாள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனது பெயர் அசூர். அவன் தெக்கொவாவின் தந்தை.
யெர்மெயேலின் சந்ததியினர்
25யெர்மெயேல் எஸ்ரோனின் முதல் குமாரன். யெர்மெயேலுக்கு ராம், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் ராம் மூத்த குமாரன். 26யெர்மெயேலுக்கு, அத்தாராள் எனும் பேருடைய இன்னொரு மனைவியும் இருந்தாள். இவள் ஓனாமின் தாய்.
27யெர்மெயேலின் மூத்தகுமாரனான ராமிற்குப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மாஸ், யாமின், எக்கேர் ஆகியோராகும்.
28ஓனாவிற்கு சம்மாய், யாதா என்ற பிள்ளைகள் இருந்தனர். சம்மாயிற்கு நாதாப், அபிசூர் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
29அபிசூரின் மனைவியின் பெயர் அபியாயேல், அவர்களுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அக்பான், மோளித் என்பவை அவர்களின் பெயர்.
30சேலேத்தும், அப்பாயிமும் நாதாப்பின் குமாரர்கள். சேலேத் பிள்ளைப்பேறு இல்லாமலேயே மரித்துப் போனான்.
31அப்பாயீமின் குமாரன் இஷி, இஷியின் குமாரன் சேசான், சேசானின் குமாரன் அக்லாய்
32யாதா சம்மாயின் சகோதரன், யெத்தெரும் யோனத்தானும் யாதாவின் குமாரர்கள், யெத்தெர் பிள்ளைப்பேறு இல்லாமலே மரித்துப்போனாள்.
33பேலேத்தும் சாசாவும் யோனத்தானின் குமாரர்கள். இதுவே யெர்மெயேலின் குடும்பப் பட்டியலாகும்.
34சேசானுக்கு குமாரர்கள் இல்லை. அவனுக்கு குமாரத்திகளே இருந்தனர். சேசாறுக்கு எகிப்திலுள்ள யர்கா என்ற பேருள்ள வேலைக்காரன் இருந்தான். 35சேசான் யர்காவைத் தன் குமாரத்தி மணந்துகொள்ளும்படி அனுமதித்தான். அவர்களுக்கு ஒரு குமாரன் இருந்தான். அவனது பெயர் அத்தாயி.
36அத்தாயி நாதானின் தந்தை, நாதான் சாபாத்தின் தந்தை, 37சாபாத் எப்லாலின் தந்தை, எப்லால் ஓபேத்தின் தந்தை, 38ஓபேத் ஏகூவின் தந்தை, ஏகூ அசரியாவின் தந்தை, 39அசரியா ஏலேத்ஸின் தந்தை, ஏலேத்ஸ் எலெயாசாவின் தந்தை, 40எலெயாசா சிஸ்மாயின் தந்தை, சிஸ்மாய் சல்லூமின் தந்தை, 41சல்லூம் எக்கமியாவின் தந்தை, எக்கமியா எலிசாமாவின் தந்தை.
காலேபின் குடும்பம்
42காலேப் யெர்மெயேலின் சகோதரன். காலேபின் முதல் குமாரன் மேசா. மேசா சீப்பின் தந்தை. மேசாவின் மற்றொரு குமாரன் மெரேசா. மெரேசா எப்ரோனின் தந்தை.
43கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா ஆகியோர் எப்ரோனின் குமாரர்கள். 44செமாராகிமின் தந்தை. ராகிம் யோர்க்கேயாமின் தந்தை. ரெக்கேம் சம்மாயின் குமாரன். 45சம்மாய் மாகோனின் தந்தை, மாகோன் பெத்சூரின் தந்தை.
46காலேபின் வேலைக்காரியாக எப்பாள் இருந்தாள். அவள் ஆரான், மோசா, காசே ஆகியோரின் தாய். ஆரான் காசேசின் தந்தை.
47ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் ஆகியோர் யாதாயின் குமாரர்கள்.
48மாகா காலேப்பின் இன்னொரு வேலைக்காரி. அவள் சேபேர் திர்கானா ஆகியோரின் தாயானாள். 49மாகா, சாகாப், சேவா ஆகியோருக்கும் தாயானாள். சாகாப் மத்மன்னாவின் தந்தையானான். சேவா மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தந்தையானான். காலேபின் குமாரத்தி அக்சாள்.
50இது காலேபின் சந்ததியாரின் விபரமாகும். ஊர், காலேபின் முதல் குமாரன். அவன் எப்ராத்தானிடம் பிறந்தான். கீரியாத் யாரீமை உருவாக்கிய சோபால், 51பெத்லெகேமை உருவாக்கிய சல்மா, பெத்காதேரை உருவாக்கிய ஆரேப்பு ஆகியோர் ஊரின் குமாரர்கள் ஆவார்கள்.
52சோபால் கீரியாத்யாரீமினை உருவாக்கியவன். இது சோபாலின் சந்ததியாரின் விபரம். ஆராவோ, ஆசியம் மெனுகோத்தின் பாதியளவு ஜனங்களும் 53கீரியாத்யாரீமின் கோத்திரங்களும் எத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோர் ஆவார்கள். மிஸ்ராவியரிடமிருந்து சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
54இது சல்மா சந்ததியின் விபரமாகும்: பெத்லேகேம், நேத்தோபாத், அதரோத், பெத்யோவாப் ஆகிய நகர ஜனங்களும் மானாத்தியரில் பாதி ஜனங்களும் சோரியரில் பாதி ஜனங்களும், 55யாபேசில் குடியிருந்த எழுத்தாளர்களின் குடும்பங்கள், திராத்தியரும், சிமாத்தியரும் சுக்காத்தியரும் ஆவர். பெத்ரேகாப்பின் தந்தையான அம்மாத்திலிருந்து வந்த கேனியர்களே கணக்கர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in