YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 10

10
சேபாவின் இராணி சாலொமோனைப் பார்க்க வருதல்
1சேபாவின் இராணி சாலொமோனின் புகழைப்பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள். 2ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள். 3சாலொமோன் அனைத்துக்கும் விடை சொன்னான். எந்தக் கேள்வியும் அவனுக்குப் பதிலளிக்க கஷ்டமாக இல்லை. 4அவள் சாலொமோனிடம் அறிவுத் திறனைக் கண்டுகொண்டாள். அவன் கட்டிய அரண்மனையின் அழகையும் பார்த்தாள். 5ராஜாவின் மேஜையில் இருந்த உணவுப்பொருட்களையும் பார்த்தாள். அவள் அதிகாரிகளின் கூட்டத்தையும் பார்வையிட்டாள். அரண்மனையில் வேலைக்காரர்களும் நன்றாக உடை அணிந்திருப்பதைக் கவனித்தாள். அவள் ஆலயத்தில் அவன் அளித்த விருந்துகளையும் பலிகளையும் பார்த்தாள். இவையெல்லாம் உண்மையில் அவளுக்கு வியப்பை உண்டாக்கி அவளது பெருமூச்சை வரவழைத்தது.
6எனவே இராணி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை. 7நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும். 8உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்! 9உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிக்கிறேன்! உங்களை இஸ்ரவேலின் ராஜாவாக்கியதில் அவர் திருப்தியடைவார். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பெரிதும் நேசிக்கிறார். அதனால்தான் உங்களை அவர்களின் ராஜா ஆக்கினார். நீங்கள் சட்டங்களைப் பின்பற்றி ஜனங்களிடம் அன்பாய் இருக்கிறீர்கள்” என்றாள்.
10பிறகு இராணி சாலொமோனுக்கு 9,000 பவுண்டு பொன்னைக் கொடுத்தாள். அவள் மேலும் மணப் பொருட்களையும் நகைகளையும் கொடுத்தாள். அதுவரை இஸ்ரவேலில் யாரும் பெற்றிராத அளவிற்கு சாலொமோனுக்கு மணப்பொருட்களைக் கொடுத்தாள்.
11ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவந்தன. அவை சிறப்புமிக்க மரத் துண்டுகளையும் நகைகளையும் கொண்டு வந்தன. 12சாலொமோன் இம்மரத்தடிகளை ஆலயத்திலும் அரண்மனையிலும் உதவிக்காகப் பொருத்தினான். அவற்றை இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்தினான். இஸ்ரவேலருக்கு இதுவரை எவரும் இது போன்ற மரத்தைக் கொண்டுவந்ததில்லை, இதுவரைப் பர்ர்த்ததுமில்லை.
13பிறகு சாலொமோன் ஒரு ராஜா இன்னொரு நாட்டு ராஜாவுக்கு கொடுப்பது போன்று சேபா நாட்டு இராணிக்கு பரிசுகளைக் கொடுத்தான். மேலும் அவள் விருப்பப்படி கேட்டதையெல்லாம் கொடுத்தான். அதன்பின், இராணியும் வேலைக்காரர்களும் தம் நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.
14ஒவ்வொரு ஆண்டும் சாலொமோன் ராஜா 79,920 பவுண்டு தங்கத்தைப் பெற்றான். 15அவன் தர்ஷீசிலிருந்து பெற்ற தங்கத்திற்கு மேலாக அவன் வியாபாரிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடமிருந்தும், அரேபிய ராஜாக்களிடமிருந்தும், நாட்டு ஆளுநர்களிடமிருந்தும் பொன்னைப் பெற்றான்.
16சாலொமோன் ராஜா அடித்தப் பொன் தகட்டால் 200 கேடயங்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 15 பவுண்டு தங்கமுடையதாக இருந்தது. 17அதோடு 300 சின்ன கேடயங்களையும் செய்தான். அது ஒவ்வொன்றும் 4 பவுண்டு எடையுள்ளது. ராஜா அவற்றை, “லீபனோனின் காடு” என்ற கட்டிடத்தில் வைத்தான்.
18சாலொமோன் ராஜா தந்தத்தினால் ஒரு சிங்காசனத்தைச் செய்தான். அதனைப் பொன் தகட்டால் மூடினான். 19அதில் ஏறிச்செல்ல 6 படிகள் இருந்தன. அதன் பின் பகுதியின் உச்சியில் வட்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் கை வைப்பதற்கான பிடிமானங்கள் இருந்தன. 20அதன் அருகில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் 12 சிங்கங்கள் நின்றன. எந்த அரசாங்கத்திலும் இதுபோல் அமைக்கப்படவில்லை. 21ராஜாவின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!
22ராஜாவுக்கு வியாபாரத்தின்பொருட்டு வேறு தேசங்களுக்கு அனுப்பப்பட்ட பல தர்ஷீசின் கப்பல்களும் இருந்தன. இவையனைத்தும் ஈராமின் கப்பல்கள், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அவை பொன், வெள்ளி, யானைத்தந்தம், விலங்குகள் போன்றவற்றை பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரும்.
23பூமியிலே சாலொமோன் மிகப் பெரிய ராஜாவாக விளங்கினான். அவன் மற்றவர்களைவிட செல்வத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினான். 24எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் சாலொமோனைப் பார்க்க விரும்பினார்கள். தேவன் கொடுத்த ஞானத்தை அவன் மூலம் கேட்க விரும்பினார்கள். 25ஒவ்வொரு ஆண்டும் ஜனங்கள் ராஜாவைப் பார்க்கவந்தனர். ஒவ்வொருவரும் அவனுக்குப் பரிசுகளையும் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கம், வெள்ளி, துணி, ஆயுதம், மணப் பொருள், குதிரை, கோவேறு கழுதை எனக் கொண்டு வந்தனர்.
26எனவே சாலொமோனுக்கு ஏராளமான இரதங்களும் குதிரைகளும் இருந்தன. அவனிடம் 1,400 இரதங்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. இதற்கென்று ஒரு தனி நகரத்தையே உருவாக்கினான். அவன் சில இரதங்களை எருசலேமில் வைத்திருந்தான். 27அவன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக் கிடந்தது, கேதுரு மரங்கள் மலைப்பகுதியில் உள்ள காட்டத்தி மரங்களைப் போல மிகுதியாக வளர்ந்திருந்தன. 28எகிப்திலிருந்தும் குவையிலிருந்தும் ராஜா சாலொமோன் குதிரைகளை வரவழைத்தான். வியாபாரிகள் அவற்றைக் கொண்டுவந்தனர். 29எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு இரதம் 15 பவுண்டு வெள்ளியும், ஒரு குதிரை 3 3/4 பவுண்டு வெள்ளியும், மதிப்புடையதாக இருந்தது. சாலொமோன் இரதங்களையும், குதிரைகளையும் ஏத்தியர் மற்றும் சீரியர்களுக்கு விற்பனை செய்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in