YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 19

19
1யூதாவின் ராஜாவாகிய யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான். 2யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் யோசபாத்தை சந்திக்க வந்தான். அவனது தந்தையின் பெயர் அனானி. அவன் ராஜாவிடம், “ஏன் கெட்டவர்களுக்கு உதவினாய்? கர்த்தரை வெறுப்பவர்கள் மேல் ஏன் அன்பு செலுத்தினாய். அதனால் தான் கர்த்தர் உன் மீது கோபமாக இருக்கிறார். 3ஆனால் உனது வாழ்வில் சில நன்மைகளும் உள்ளன. நீ விக்கிரகங்களை அழித்தாய். நீ மனப்பூர்வமாகத் தேவனைப் பின்பற்றவேண்டும் என்று எண்ணினாய்” என்றான்.
யோசபாத் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறான்
4யோசபாத் எருசலேமில் வாழ்ந்தான். பெயர்செபா நகரம் முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனங்களுடன் சேர்ந்து வாழும் பொருட்டு, மீண்டும் யோசபாத் வெளியேறினான். அந்த ஜனங்களை அவன் அவர்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான். 5யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான். 6யோசபாத் நீதிபதிகளிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஜனங்களுக்காக நியாயந்தீர்க்கவில்லை. கர்த்தருக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது கர்த்தர் உங்களோடு இருக்கிறார். 7இப்போது உங்களில் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பயப்படவேண்டும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நமது தேவனாகிய கர்த்தர் நியாயமானவர். அவர் அநீதியானவற்றை யாருக்கும் செய்யமாட்டார். மேலும் தனது நியாயத்தீர்ப்புகளை மாற்றிக்கொள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்றான்.
8எருசலேமில், யோசபாத் சில லேவியர்களையும் ஆசாரியர்களையும், இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் சிலரையும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் எருசலேமில் உள்ள ஜனங்களின் சிக்கல்களை தேவனுடைய சட்டத்தால் சரி செய்யவேண்டும். 9யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், “நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும். 10உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
11“அமரியா தலைமை ஆசாரியன். கர்த்தரைப் பற்றிய காரியங்களில் அவன் உங்களுக்கு மேலாக இருப்பான். ராஜாவைப் பற்றிய விவகாரங்களில் செபதியா உங்களுக்கு உயர்ந்தவனாக இருப்பான். செபதியாவின் தந்தையின் பெயர் இஸ்மவேல். செபதியா யூதா கோத்திரத்தின் தலைவனாக இருக்கிறான். லேவியர்கள் உங்களுக்கு எழுத்தாளர்களாக சேவை செய்வார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உறுதியாக இருங்கள். சரியானவற்றைச் செய்கின்ற ஜனங்களோடு கர்த்தர் துணை இருப்பாராக” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in