YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21

21
பவுல் எருசலேமுக்குப் போகிறான்
1நாங்கள் அனைவரும் மூப்பர்களிடமிருந்து விடைபெற்றோம். பின் கடற்பயணம் துவங்கினோம். நேராகக் கோஸ் தீவிற்குச் சென்றோம். மறுநாள் ரோது தீவிற்குச் சென்றோம். ரோதுவிலிருந்து நாங்கள் பத்தாராவுக்குப் போனோம். 2சீப்புரு பகுதிக்குப் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்றை பத்தாராவில் கண்டோம். நாங்கள் அக்கப்பலில் ஏறி, கடலில் பயணப்பட்டோம்.
3சீப்புரு தீவினருகே நாங்கள் கடற்பயணம் செய்தோம். வடதிசையில் நாங்கள் அதைப்பார்க்க முடிந்தது. ஆனால் நாங்கள் அங்கு நிற்கவில்லை. நாங்கள் சிரியா நாட்டிற்குப் பயணமானோம். தீரு நகரத்தில் சில சரக்குகளை இறக்கும் பொருட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. 4தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர். 5ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம். 6பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
7தீருவிலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து பித்தொலோமாய் நகருக்குச் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர்களை வாழ்த்தினோம், அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்தோம். 8மறுநாள் நாங்கள் பித்தொலோமாயை விட்டுப் புறப்பட்டு செசரியா நகரத்திற்குப் போனோம். நாங்கள் பிலிப்புவின் வீட்டிற்குச் சென்று, அவனோடு தங்கினோம். நற்செய்தியைக் கூறும் வேலையை பிலிப்பு செய்து வந்தான். ஏழு உதவியாளரில் அவனும் ஒருவன். 9அவனுக்குத் திருமணமாகாத நான்கு பெண்கள் இருந்தனர். தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் அப்பெண்களுக்கு இருந்தது.
10பல நாட்கள் நாங்கள் அங்கிருந்த பிறகு அகபு என்னும் தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11அவன் எங்களிடம் வந்து பவுலின் கச்சையை#21:11 கச்சை பவுலின் கச்சை. அகபு எருசலேமில் உள்ள யூதர்கள் பவுலைக் கைது செய்வார்கள் என்று தீர்க்கதரிசனம் கூறினான். வாங்கினான். பின்பு அகபு அக்கச்சையால் தனது கைகளையும் கால்களையும் கட்டினான். அகபு, “இக்கச்சையைக் கட்டுகிற மனிதனை இவ்வாறே எருசலேமில் யூதர்கள் கட்டுவார்கள். பின் அவனை யூதரல்லாத மனிதரிடம் ஒப்படைப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கூறுகிறார்” என்றான்.
12நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம். 13ஆனால் பவுல், “ஏன் நீங்கள் அழுதுகொண்டிருக்கிறீர்கள்? ஏன் என்னை இத்தனை கவலை கொள்ளச் செய்கிறீர்கள்? நான் எருசலேமில் கட்டப்படுவதற்குத் தயாராக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக இறப்பதற்கும் நான் தயாராக உள்ளேன்” என்றான்.
14பவுலை வற்புறுத்தி அவனை எருசலேமுக்குப் போகாதிருக்கச் செய்ய எங்களால் இயலவில்லை. எனவே அவனை வேண்டுவதை நாங்கள் நிறுத்திவிட்டு, “கர்த்தர் விரும்புவது நடக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்றோம்.
15இதன் பிறகு நாங்கள் தயாராகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பவுல் யாக்கோபைச் சந்தித்தல்
17எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.
20மூப்பர்கள் இவற்றைக் கேட்டபோது, அவர்கள் தேவனை வாழ்த்தினர். பின் அவர்கள் பவுலை நோக்கி, “சகோதரரே, ஆயிரக்கணக்கான யூதர்கள் விசுவாசிகளாக மாறியதை நீங்கள் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை முக்கியமானதாக நினைக்கிறார்கள். 21உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.
22“நாங்கள் என்ன செய்வோம்? நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள#21:24 தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள தங்கள் பொருத்தனை முடிந்துவிட்டதைக் காட்டும் அடையாளம். முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.
25“யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம்,
‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள்,
பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.
பவுல் கைதுசெய்யப்படுகிறார்
26பின்பு பவுல் அந்த நான்கு மனிதர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். மறுநாள் பவுல் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கேற்றான். பின் அவன் தேவாலயத்துக்குச் சென்றான். தூய்மைப்படுத்தும் சடங்கு முடிய வேண்டிய காலத்தைப் பவுல் பிறருக்கு அறிவித்தான். கடைசி நாளில் ஒவ்வொரு மனிதனுக்காகவும் ஒரு காணிக்கை கொடுக்கப்படும்.
27ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். 28அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். 29பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.
30எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. 31மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். 32உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.
33அதிகாரி பவுலிடம் சென்று அவனைக் கைது செய்தான். இரண்டு விலங்குகளால் பவுலைக் கட்டுமாறு அதிகாரி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின் அதிகாரி, “இம்மனிதன் யார்? இவன் செய்த தவறு என்ன?” என்று கேட்டான். 34அங்கிருந்தோரில் சிலர் ஒன்றைக் கூக்குரலிடவும் பிறர் வேறொன்றைக் கூக்குரலிடவும் செய்தனர். குழப்பமாகவும், கூச்சலாகவும் இருந்தமையால் அதிகாரி நடந்த உண்மையை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதிகாரி வீரர்களிடம் பவுலைப் படைக்கூடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுமாறு கூறினான். 35-36எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.
37வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா? 38அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.
39பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.
40பவுல் மக்களிடம் பேச அதிகாரி அனுமதித்தான். எனவே பவுல் படிகளில் ஏறி நின்றான். மக்கள் அமைதியாக இருக்கும்படியாகக் கைகளால் சைகை செய்தான். மக்கள் அமைதியடைந்ததும் பவுல் அவர்களோடு பேசினான். அவன் யூதமொழியைப் பயன்படுத்தினான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in