YouVersion Logo
Search Icon

உபாகமம் 10

10
புதிய கற்பலகைகள்
1“அந்த நேரத்தில், கர்த்தர் என்னிடம், ‘நீ முதலில் வைத்திருந்ததைப்போன்று இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏறி என்னிடம் வா. ஒரு மரப்பெட்டியையும் செய்து எடுத்துக்கொள். 2நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் உள்ள அதே வார்த்தைகளை நான் இந்தப் புதிய கற்பலகைகளின் மீது எழுதுவேன். பின் நீ அவ்விரு கற்பலகைகளையும் அந்த மரப் பெட்டிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.’
3“அதன்படி நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தேன். முதலில் வைத்திருந்ததைப் போல் இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். பின் நான் மலையின் மீது ஏறிச் சென்றேன். இரண்டு கற்பலகைகளையும் கையில் வைத்திருந்தேன். 4முன்னர் நீங்கள் அனைவரும் கூட்டமாக கூடிவந்த நாளில், மலையில் அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடுப் பேசிய அந்த பத்துக் கட்டளைகளையும் அவர் அப்போது எழுதித் தந்ததின்படியே இந்தப் பலகைகளிலும் எழுதினார். பின் கர்த்தர் அந்த இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் தந்தார். 5மலையில் இருந்து திரும்பிக் கீழே இறங்கி வந்தேன். நான் செய்திருந்த மரப் பெட்டிக்குள் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படியே அப்பெட்டியில் அவைகளை வைத்தேன். இன்றுவரையிலும் அந்தக் கற்பலகைகள் அந்தப் பெட்டிக்குள்ளேயே உள்ளன.”
6(இஸ்ரவேல் ஜனங்கள் பெனெயாக்கானுக்கு அடுத்த பேரோத்திலிருந்து மோசாராவிற்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் மரித்துவிட்டான். அவனை அடக்கம் செய்தார்கள். ஆரோனின் குமாரன் எலெயாசார் ஆரோனின் இடத்தில் ஆசாரியனாக ஊழியம் செய்தான். 7பின் இஸ்ரவேல் ஜனங்கள் அங்கிருந்து குத்கோதாவுக்கு சென்றனர். அங்கிருந்து ஆறுகள் ஓடும் தேசமான யோத்பாத்துக்கும் சென்றனர். 8அந்த நேரத்தில் கர்த்தர் மற்ற கோத்திரத்திலிருந்து லேவி குடும்பத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார். லேவி குடும்பத்தை தமது சிறப்புப் பணிகளுக்காக பிரித்தெடுத்துக்கொண்டார். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கர்த்தருக்கு முன் பணியாற்றும் ஆசாரியர்களாக இருந்தனர். கர்த்தருடைய நாமத்தால் ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியும், ஆராதனை செய்தும் வந்தனர். அவர்கள் இன்று வரையிலும் இந்தச் சிறப்புப் பணிகளைச் செய்து வருகின்றார்கள். 9இதனாலேயே மற்ற கோத்திரத்தினர் பெற்ற நிலப்பங்கினைப் போல் லேவியின் கோத்திரம் பெறவில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தபடி கர்த்தர் தாமே லேவியருக்கு சொத்தும் சுதந்திரமுமாக இருப்பார்.)
10“நான் முன்பு தங்கியதைப்போல மலையின் மேலே 40 நாட்கள் இரவும், பகலுமாய் தங்கியிருந்தேன். கர்த்தர் இந்த முறையும் நான் வேண்டியதை கேட்டு அருளினார். நான் வேண்டியபடியே கர்த்தர் உங்களை அழிக்காமல்விட்டார். 11கர்த்தர் என்னிடம், ‘நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடி, அந்தத் தேசத்தில் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு, அவர்களுக்கு முன் தலைமையேற்றுப் பயணப்பட்டுப் போ’ என்றார்.
கர்த்தரின் உண்மையான விருப்பம்
12“இப்போதும், இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து உண்மையிலேயே விரும்புவது என்ன? கர்த்தர் உங்களிடம் விரும்புவது, நீங்கள் அவருக்கும் அவர் சொன்னவற்றுக்கும் மதிப்பளித்து அதன்படி செய்ய வேண்டும். தேவன் விரும்புவது, நீங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதையும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உங்கள் முழுமனதோடும், உங்களின் முழு ஆத்மதிருப்தியுடனும் சேவைச் செய்வதே. 13ஆகையால், நான் இன்று உங்களுக்கு வழங்குகின்ற கர்த்தருடைய கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களின் நன்மைக்கென்றே இந்தக் கட்டளைகளும், சட்டங்களும் உள்ளன.
14“எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை. 15கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் மீது அன்பு வைத்திருந்தார். அவர்கள்மீது அதிகமாக அன்பு வைத்ததினாலேயே உங்களையும், உங்கள் சந்ததியினரையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களாக இன்றும் கருதி அன்பு காட்டுகிறார். மற்ற எல்லா ஜனங்களும் இருந்தாலும் உங்களை தேவன் பிரித்தெடுத்தார். இன்றளவும் நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறீர்கள்.
16“உங்களின் பிடிவாத குணத்தை விட்டுவிடுங்கள். உங்களின் உள்ளங்களை கர்த்தருக்குக் கொடுங்கள். 17ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கர்த்தாதி கர்த்தரும், தேவாதி தேவனும் ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். 18அநாதைக் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் ஆதரவாகவும் அன்பு செலுத்துபவராகவும் தேவன் அருள் செய்கிறார். அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள்.
20“உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். அவரைவிட்டு ஒரு போதும் விலகாதீர்கள். நீங்கள் எப்போது வாக்களித்தாலும் நமது தேவனுடயை நாமத்தை பயன்படுத்த வேண்டும். 21நீங்கள் நமது தேவனையே போற்றிப் புகழவேண்டும். கர்த்தரே உங்கள் தேவன். அவரே உங்கள் தேவன் முன்பு இந்த அற்புதங்களையும் மகத்துவங்களையும் உங்களுக்காச் செய்தார். நீங்கள் அனைவரும் உங்கள் கண்களால் அவர் செய்த அனைத்தையும் பார்த்தீர்கள். 22உங்கள் முற்பிதாக்களில் எழுபது பேரே எகிப்திற்குள் சென்றார்கள். ஆனால் இன்றோ உங்கள் தேவனாகிய கர்த்தர் வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களைப்போல் உங்களை மிகப்பெரிய ஜனங்கள் சமுதாயமாக உருவாக்கியுள்ளார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in