YouVersion Logo
Search Icon

உபாகமம் 14

14
இஸ்ரவேலர் தேவனின் விசேஷ ஜனங்கள்
1“நீங்கள் எல்லோரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள். உங்களில் ஒருவன் மரித்ததற்காக நீங்கள் உங்களை கீறிக்கொள்ளாமலும், மொட்டையடித்து சவரம் செய்யாமலும் இருப்பீர்களாக. 2ஏனென்றால் நீங்கள் மற்ற ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த உலகில் உள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே தமது சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
இஸ்ரவேல் ஜனங்கள் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவுகள்
3“கர்த்தர் வெறுக்கின்ற எந்தப் பொருளையும் நீங்கள் உண்ணக்கூடாது. 4நீங்கள் உண்ணத்தகுந்த மிருகங்களாவன: மாடுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, 5மான், வெளிமான், கலைமான், வரையாடு, புள்ளிமான், சருகுமான், புல்வாய், ஆகியனவாகும். 6நீங்கள் கால்களில் விரிகுளம்புகளுடைய மிருகங்களையும், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கின்ற மிருகங்களையும், அசைபோடுகின்ற சகல மிருகங்களையும உண்ணலாம். 7ஆனால் ஒட்டகங்களையும், முயல்களையும் குழிமுயல்களையும் உண்ணக் கூடாது. இவைகள் அசைபோடும் மிருகங்களாக இருந்தாலும் அவைகளுக்கு விரிகுளம்புகள் இல்லை. ஆகவே அந்த மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமான உணவாகும். 8நீங்கள் பன்றிகளை உண்ணக்கூடாது. அவை விரிகுளம்பு உள்ளதாய் இருந்தாலும் அசை போடாது. ஆகவே இவை உங்களுக்கு சுத்தமான உணவு இல்லை. இவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. இவற்றின் மரித்த உடலைக்கூட தொடக்கூடாது.
9“நீங்கள் துடுப்பும், செதில்களும் உள்ள எந்த வகையான மீனையும் உண்ணலாம். 10ஆனால் துடுப்புகளும். செதில்களும் இல்லாத தண்ணீருக்குள் வசிக்கும் எதையும் உண்ணக்கூடாது. இவை உங்களுக்கான சுத்தமான உணவு அல்ல.
11“சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் உண்ணலாம். 12ஆனால் கழுகுகள், கருடன்கள், கடலுராஞ்சிகள் ஆகியவற்றையும், 13பைரி, வல்லூற்று எவ்வகை பருந்தும், 14எந்த வகையான காகங்களும், 15தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவிதமான டேகையும், 16ஆந்தை, கோட்டான், நாரைகள், 17கூழக் கடா, குருகு, தண்ணீர்க் காகம், 18கொக்கு, சகலவித ராஜாளியும், புழுக்கொத்தி, வௌவால், ஆகியவற்றை உண்ணக்கூடாது.
19“பறப்பனவற்றில் எல்லா வகையான ஊர்வன யாவும் சுத்தமற்றவை. ஆகவே அவற்றை உண்ணக் கூடாது. 20ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம்.
21“தானாக மரித்துப்போன எந்த விலங்கையும் உண்ண வேண்டாம். நீங்கள் அவற்றை உங்கள் ஊரிலுள்ள வழிப்போக்கருக்குக் கொடுத்துவிடலாம், அவர்கள் அதனை உண்ணலாம். அல்லது அந்நியருக்கு விற்றுவிடலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் அவற்றை உண்ணக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள்.
“வெள்ளாட்டுக் குட்டியை, அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.
பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது
22“உங்கள் வயல்களின் எல்லா விளைச்சலிலுமிருந்து பத்தில் ஒரு பங்கை வருடந்தோறும் தனியாக எடுத்து வையுங்கள். 23அதை நீங்கள் கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்ட சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருக்க நீங்கள் அங்கே செல்ல வேண்டும். அந்த இடத்தில் உங்களது தானியத்திலும், உங்களது திராட்சைரசத்திலும், உங்கள் எண்ணெயிலும் எடுத்துவைத்த பத்தில் ஒரு பங்கையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலையீற்றையும் கொண்டுவந்து கர்த்தர் உங்களுக்கு நியமிக்கும் தேவாலயத்தில் உண்டு மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதையளிக்கும்படி எப்பொழுதும் நினைவாயிரு. 24ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கின்றபோது தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட இடமானது நீங்கள் குடியிருக்கிற இடத்திலிருந்து, மிகத் தொலைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பத்தில் ஒரு பங்கு காணிக்கைப் பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல இயலாமல் போகலாம். அப்படி நடக்குமென்றால் 25நீங்கள் ஒதுக்கிவைத்த பங்குப் பொருட்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவேண்டும். 26தேவாலயத்திற்கு வந்த பின்பு, நீங்கள் உங்கள் தேவைக்கேற்ற மாடுகள், ஆடுகள், திராட்சைரசம் போன்ற உணவுப் பொருட்களை அந்த பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம், பின்பு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்டு மகிழலாம். 27உங்கள் நகரில் வசிக்கின்ற லேவியரை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (அவர்களுக்கும் உங்கள் உணவை பகிர்ந்தளியுங்கள்) ஏனெனில், அவர்களுக்கு உங்களைப் போன்று எந்த சொத்தும் சுதந்திரமும் கிடையாது.
28“மூன்று ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் அந்த ஆண்டு உங்களுக்குக் கிடைத்த பலன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை ஒதுக்கி வைக்கவேண்டும். மற்ற ஜனங்கள் பயன்படுத்தக் கூடிய உங்கள் பட்டணங்களில் அந்த உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருங்கள். 29இந்த உணவுப் பொருட்கள் லேவியர்களுக்கு சொந்தம் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கென்று சொந்தமான எந்த நிலமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உங்கள் ஊரில் தேவை உள்ள ஜனங்களுக்கும் ஆகும். அது அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும், உரியது, அவர்கள் வந்து உண்டு திருப்தி அடையட்டும். இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in