YouVersion Logo
Search Icon

உபாகமம் 18

18
ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல்
1“லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியர்களாக சேவை செய்வார்கள். தகன பலியாக கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும். 2இந்த லேவியர்கள், மற்ற கோத்திரங்கள் வைத்திருப்பதைப்போன்று எவ்வித பங்கும், சுதந்திரமும் பெற்றிருப்பவர்கள் அல்ல. கர்த்தர் அவர்களுக்குக் கூறியதுபோல் கர்த்தரே அவர்களது சொத்து.
3“நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். 4நீங்கள் அறுவடை செய்த முதல் பலன்களின் ஒரு பகுதியையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் தானியங்கள், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதல் பலன்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் ஆடுகளில் கத்தரிக்கும் முதல் பங்கான ஆட்டு ரோமங்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். 5ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாக் கோத்திரங்களையும் பார்த்து அவர்களிலிருந்து, லேவியரையும் அவர்களது சந்ததியினரையும் என்றென்றும் ஆசாரிய சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார்.
6“உங்களில் வசிக்கின்ற ஒவ்வாரு லேவியனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் பணி செய்வான். ஆனால், அவன் மேலும் அதிக நேரம் அங்குப் பணியாற்ற விரும்பினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் பணி செய்யலாம். இஸ்ரவேலில் எந்த ஊர்களிலும், எந்தப் பகுதிகளிலும் வசித்து வருகின்ற யாதொரு லேவியனும் அவன் வசிக்கிக்கின்ற வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வரலாம். எந்த நேரத்திலும் அங்கு வந்து சேவை செய்யலாம். 7அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம். 8இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான்.
இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது
9“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள். 10உங்கள் குமாரர்களையோ, குமாரத்திகளையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். 11மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. 12உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். 13நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி
14“நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார். 15உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 16தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.
17“கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே. 18நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். 19அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்.
பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி
20“ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். 21‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், 22கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in