YouVersion Logo
Search Icon

எஸ்தரின் சரித்திரம் 2

2
எஸ்தர், இராணி ஆகிறாள்
1அகாஸ்வேரு ராஜா தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான். 2பிறகு ராஜாவின் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள், “ராஜாவுக்கு அழகான இளம் கன்னிகளைத் தேட வேண்டும். 3ராஜா தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் ராஜாவின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் ராஜாவின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். 4பிறகு ராஜாவின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். ராஜாவும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான்.
5இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் குமாரன். யாவீர், கீசின் குமாரன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். 6மொர்தெகாய் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத ராஜாவாகிய எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். 7மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் குமாரத்தியாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை குமாரத்தியாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.
8ராஜாவின் கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, ராஜாவின் பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். 9யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். ராஜாவின் பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். 10எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். 11ஒவ்வொரு நாளும் ராஜாவின் பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.
12ராஜா அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். 13ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, ராஜாவிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் ராஜாவின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். 14மாலையில், அப்பெண் ராஜாவின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் ராஜாவினுடைய பிரதானி. அவன் ராஜாவின் ஆசைப் பெண்களின் அதிகாரி. ராஜா விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் ராஜாவிடம் செல்லக் கூடாது. பிறகு ராஜா அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம்.
15எஸ்தருக்கு ராஜாவிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் ராஜாவின் பிரதானி. ராஜாவின் பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு குமாரத்தி. அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் குமாரத்தி) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். 16எனவே, எஸ்தர் அரண்மனைக்கு ராஜா அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.
17ராஜா, மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு ராஜா எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய இராணியாகச் செய்தான். 18ராஜா எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய ராஜா.
மொர்தெகாய் ஒரு தீய திட்டத்தைப் பற்றி அறிகிறான்
19மொர்தெகாய் ராஜாவின் வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான். 20எஸ்தர் தான் யூதகுலத்தை சேர்ந்தவள் என்பதை அதுவரை இரகசியமாக வைத்திருந்தாள். அவள் தனது குடும்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு செய்யும்படி மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தான். அவள் மொர்தெகாய்க்குக் கீழ்ப்படிந்தாள்.
21மொர்தெகாய் ராஜாவின் வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு ராஜாவின் வாசல் காவல் அதிகாரிகள் ராஜா மீது கோபங்கொண்டனர். அவர்கள் ராஜா அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர். 22ஆனால், மொர்தெகாய் அவர்களது திட்டத்தை அறிந்துக்கொண்டு எஸ்தர் இராணியிடம் கூறினான். பிறகு, இராணி எஸ்தர் அதனை ராஜாவிடம் கூறினாள். அவள் இத்தீய திட்டத்தை அறிந்து சொன்னவன் மொர்தெகாய் என்றும் கூறினாள். 23பிறகு இந்த காரியம் சோதிக்கப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மையென அறியப்பட்டது. ராஜாவைக் கொல்ல சதித்திட்டமிட்ட இரு காவலர்களும் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டனர். இவை அனைத்தும் ராஜாவுக்கு முன்பாக ராஜாவின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in