YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 38

38
கோகுக்கு விரோதமான செய்தி
1கர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2“மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு. 3கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன். 4நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள். 5பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள். 6கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள்.
7“‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக்கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு. 8நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். 9ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’”
10எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்குவீர்கள். 11நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை! 12நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’
13“சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’”
14தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய். 15நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய். 16எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூட வரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’”
17எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப்பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.”
18எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன். 19நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன். 20அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!”
21எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள். 22நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன். 23பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in