YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 17

17
ஆராமுக்கு தேவனுடைய செய்தி
1தமஸ்குவிற்கான துயரச் செய்தி இது. தமஸ்குவுக்கு இவையனைத்தும் நிகழும் என்று கர்த்தர் கூறுகிறார்:
“தமஸ்கு இப்பொழுது நகரமாக இருக்கிறது.
ஆனால் தமஸ்கு அழிக்கப்படும்.
அழிக்கப்பட்டக் கட்டிடங்கள் மட்டுமே தமஸ்குவில் இருக்கும்.
2ஆரோவேரின் நகரங்களைவிட்டு ஜனங்கள் விலகுவார்கள்.
காலியான அந்தப் பட்டணங்களில் ஆட்டு மந்தைகள் சுதந்திரமாகத் திரியும்.
அவற்றைத் தொந்தரவு செய்ய அங்கே யாரும் இருக்கமாட்டார்கள்.
3எப்பிராயீமின் (இஸ்ரவேல்) அரணான நகரங்கள் அழிக்கப்படும்.
தமஸ்குவில் உள்ள அரசு முடிந்துவிடும்.
இஸ்ரவேலுக்கு ஏற்பட்ட அனைத்தும் சீரியாவிற்கு ஏற்படும்.
முக்கியமான ஜனங்கள் அனைவரும் வெளியே எடுத்துச்செல்லப்படுவார்கள்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவை அனைத்தும் நிகழும்” என்று கூறினார்.
4“அந்தக் காலத்தில், யாக்கோபின் (இஸ்ரவேல்) செல்வம் அனைத்தும் போய்விடும்.
யாக்கோபு நோய்வாய்ப்பட்டதினால் பெலவீனமும் மெலிவும் கொண்ட மனிதனைப்போலாவான்.
5“அந்தக் காலம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே தானிய அறுவடை நடைபெறுவதுபோல் இருக்கும். வேலைக்காரர்கள் வயலில் வளர்ந்த செடிகளை சேகரிக்கிறார்கள். பிறகு அவர்கள் செடிகளிலிருந்து தானியக் கதிர்களை வெட்டுகிறார்கள். பிறகு அவர்கள் தானியத்தைச் சேகரிக்கின்றனர்.
6“ஜனங்கள் ஒலிவமரத்தில் அறுவடை செய்வதுபோன்று அந்தக் காலம் இருக்கும். ஜனங்கள் ஒலிவ மரத்திலிருந்து ஒலிவக் காய்களைப் பறிப்பார்கள். மரத்தின் உச்சியில் சில ஒலிவக் காய்களை அவர்கள் விட்டுவைப்பார்கள். நான்கு அல்லது ஐந்து ஒலிவக் காய்களை அவர்கள் உயரத்திலுள்ள கிளைகளில் விட்டுவிடுவார்கள். இதுபோலவே அந்த நகரங்களுக்கும் ஏற்படும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
7அந்தக் காலத்தில், ஜனங்கள் தங்களைப் படைத்த தேவனை நோக்கிப் பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பார்க்கும். 8அவர்களால் செய்யப்பட்ட பலிபீடங்களுக்குத் திரும்பமாட்டார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு தங்களால் அமைக்கப்பட்ட சிறப்பான தோட்டங்களுக்கும், பலிபீடங்களுக்கும் போகமாட்டார்கள்.
9அந்தக் காலத்தில், கோட்டை நகரங்கள் எல்லாம் காலியாகும். இஸ்ரவேல் ஜனங்கள் வருவதற்கு முன்னால் அந்தத் தேசத்தில் மலைகளும் காடுகளும் இருந்தது போன்று அந்த நகரங்கள் இருக்கும். கடந்த காலத்தில், அனைத்து ஜனங்களும் ஓடிப்போனார்கள். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு வந்துகொண்டு இருந்தனர். வரும்காலத்தில் மீண்டும் இந்தத் தேசம் காலியாகும். 10இது நிகழும், ஏனென்றால், உங்களைப் பாதுகாக்கிற தேவனை நீங்கள் மறந்துவிட்டீர்கள். உங்கள் பாதுகாப்புக்குரிய இடமாக இருக்கும் தேவனை நீங்கள் நினைக்கவில்லை.
வெகு தொலைவிலுள்ள இடங்களிலிருந்து நீ சில நல்ல திராட்சைக் கொடிகளைக் கொண்டுவந்தாய். நீ அவற்றை நட்டு வைக்கலாம். ஆனால் அவை வளராது. 11ஒரு நாள் உன் திராட்சைக் கொடிகளை நடுவாய். அவற்றை வளர்க்க முயல்கிறாய். மறுநாள் அக்கொடிகள் வளரத் தொடங்கும். ஆனால் அறுவடைக் காலத்தில் அச்செடிகளிலிருந்து பழங்களைப் பறிக்க செல்வாய். ஆனால் அனைத்தும் மரித்துப்போனதை காண்பாய். அனைத்து செடிகளையும் ஒரு நோய் அழித்துவிடும்.
12ஏராளமான ஜனங்களை விசாரித்துக் கேள்!
அவர்கள் உரத்து கடல் இரைச்சலைப்போன்று அலறிக்கொண்டிருக்கிறார்கள்.
சத்தத்தைக் கேள், இது கடலில் அலைகள் மோதிக்கொள்வதைப்போன்றிருக்கும்.
13ஜனங்களும் அந்த அலைகளைப்போன்று இருப்பார்கள்.
தேவன் அந்த ஜனங்களிடம் கடுமையாகப் பேசுவார்.
அவர்கள் வெளியே ஓடிப்போவார்கள்.
ஜனங்கள் காற்றால் துரத்தப்படுகிற பதரைப்போன்று இருப்பார்கள்.
ஜனங்கள் புயலால் துரத்தப்படுகிற துரும்பைப்போன்று இருப்பார்கள்.
காற்று அடிக்கும்போது பதர்கள் வெளியேறும்.
14அந்த இரவு, ஜனங்கள் அஞ்சுவார்கள்.
காலைக்கு முன்னால், எதுவும் விடுபடாது.
எனவே, நம் பகைவர்கள் எதனையும் பெறமாட்டார்கள்.
அவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள்.
ஆனால் அங்கு எதுவும் இராது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in