YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 17

17
இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்
1“யூதா ஜனங்களின் பாவம், அவர்களால்
அழிக்க முடியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.
அந்தக் கல்தான் அவர்களது இதயம்.
அப்பாவங்கள் அவர்களது பலிபீடங்களில் உள்ள கொம்புகளில் வெட்டப்பட்டுள்ளன.
2அவர்களின் பிள்ளைகள் அஷேரா தேவதைக்காக
அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்களை நினைவுக்கொள்வார்கள்.
அவர்கள் அஷேராவிற்குச் சமர்பிக்கப்பட்ட மரத்தூண்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் பச்சை மரங்களுக்குக் கீழேயும், பாறைகளுக்கு மேலேயும் உள்ள பீடங்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
3சிறந்த நாடுகளில் உள்ள மலைகளில் மேலே
உள்ளவற்றை அவர்கள் நினைக்கிறார்கள்.
யூதாவின் ஜனங்களுக்கு பல கருவூலங்கள் உள்ளன.
நான் மற்ற ஜனங்களுக்கு அவற்றைக் கொடுப்பேன்.
ஜனங்கள், உங்கள் நாட்டிலுள்ள அனைத்து மேடைகளையும் அழிப்பார்கள்.
நீங்கள் அந்த இடங்களில் சிலைகளைத் தொழுதுகொண்டீர்கள், அது ஒரு பாவம்.
4நான் கொடுத்த நாட்டை நீங்கள் இழப்பீர்கள்.
உங்கள் பகைவர்கள் உங்களை சிறைபிடிக்க நான் அனுமதிப்பேன்.
நீங்கள் அறியாத தேசத்தில் அவர்களது அடிமைகளாக இருப்பீர்கள்.
ஏனென்றால், நான் கோபத்தோடு இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பைப்போன்றது.
நீங்கள் என்றென்றும் எரிக்கப்படுவீர்கள்.”
ஜனங்களிடம் நம்பிக்கை மற்றும் தேவனிடம் நம்பிக்கை
5கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“மற்ற ஜனங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைக்கின்றவர்களுக்கு தீமை ஏற்படும்.
மற்ற ஜனங்களை பலத்துக்காகச் சார்ந்திருக்கிறவர்களுக்குத் தீமை ஏற்படும்.
ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தினார்கள்.
6அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே உள்ள புதரைப் போன்றவர்கள்.
அப்புதர் ஜனங்களே வாழாத வனாந்தரத்திலே உள்ளது.
அப்புதர் வெப்பமும் வறட்சியும் உள்ள பூமியில் உள்ளது.
அப்புதர் கெட்ட மண்ணில் உள்ளது.
அப்புதர் தேவனால் தர முடிகிற நல்லவற்றைப்பற்றி அறியாதது.
7ஆனால், கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
ஏனென்றால், கர்த்தர் நம்பத்தகுந்தவர் என்பதை காட்டுவார்.
8அந்த மனிதன் தண்ணீர்க்கரையில் நடப்பட்ட மரத்தைப்போன்ற பலத்தோடு இருப்பான்.
அந்த மரம் தண்ணீரைக் கண்டுக்கொள்கிற வேர்களை உடையதாக இருக்கும்.
அந்த மரம் கோடைகாலம் வரும்போது உலர்ந்து போவதில்லை.
அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும்.
மழைப் பெய்யாத ஆண்டுகளில் அது கவலைப்படுவதில்லை.
அந்த மரம் எப்பொழுதும் பழங்களை உற்பத்தி செய்யும்.
9“ஒருவனின் இருதயம் மிகவும் தந்திரமானது!
இருதயம் மிகவும் சுகவீனம் அடையக் கூடும்.
உண்மையில் எவரும் ஒருவனின் இருதயத்தை புரிந்துகொள்வதில்லை.
10ஆனால், நானே கர்த்தர்.
என்னால் ஒருவனின் இருதயத்தைப் பார்க்கமுடியும்.
நான் ஒருவனின் மனதை சோதிக்கமுடியும்.
ஒவ்வொருவனிடமும் என்ன இருக்கிறது என்பதை என்னால் முடிவு செய்யமுடியும்.
என்னால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சரியான கூலியைக் கொடுக்கமுடியும்.
11சில நேரங்களில் ஒரு பறவை, தான் இடாத
முட்டையைக் குஞ்சு பொரிக்க வைக்கும்.
ஏமாற்றி பொருள் சம்பாதிக்கிற ஒவ்வொருவனும்
இப்பறவையைப் போன்றவன்.
அவனது வாழ்க்கை பாதியில் இருக்கும்போதே
அவன் அப்பணத்தை இழப்பான்.
அவனது வாழ்வின் இறுதியில்,
அவன் ஒரு முட்டாளாக இருந்தான் என்பது தெளிவாகும்.”
12தொடக்கத்திலிருந்தே, தேவனுக்கு நமது ஆலயமே
மகிமையான சிங்காசனமாக இருந்தது.
இது மிக முக்கியமான இடமாகும்.
13கர்த்தாவே, இஸ்ரவேலர்களின் நம்பிக்கையே நீர்தான்.
கர்த்தாவே, நீர் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றைப் போன்றவர்.
ஒருவன் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தினால்
அவன் இகழப்பட்டு அவனது வாழ்வு குறுகியதாக்கப்படும்.
எரேமியாவின் மூன்றாவது முறையீடு
14கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்தினால்
நான் உண்மையில் சுகமாவேன்.
என்னைக் காப்பாற்றும்,
நான் உண்மையில் காப்பாற்றப்படுவேன்.
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
15யூதாவின் ஜனங்கள் என்னிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார்கள்.
அவர்கள் “எரேமியா, கர்த்தரிடமிருந்து வந்த செய்தி என்ன?
அச்செய்தி எப்பொழுது நிறைவேறும்?” என்கின்றனர்.
16கர்த்தாவே, நான் உம்மை விட்டு ஓடிப்போகவில்லை.
நான் உம்மைப் பின்தொடர்ந்தேன்.
நீர் விரும்புகிற மேய்ப்பனாக நான் இருந்தேன்.
ஒரு பயங்கரமான நாள் வருவதை நான் விரும்பவில்லை.
கர்த்தாவே, நான் சொன்னவற்றை நீர் அறிவீர்.
எல்லாம் நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.
17கர்த்தாவே, என்னை அழித்து விடாதீர்.
துன்பக் காலத்தில் நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
18ஜனங்கள் என்னைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்களை அவமானப்படும்படி செய்யும்.
என்னை மனந்தளரவிடாதீர்.
அந்த ஜனங்களை பயப்படச் செய்யும்.
ஆனால் என்னை பயப்படச் செய்யாதிரும்.
எனது பகைவர்களுக்கு அந்தப் பயங்கரமான நாளை வரப்பண்ணும்.
அவர்களை உடையும், அவர்களை மீண்டும் உடையும்.
ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தல்
19கர்த்தர் என்னிடம் இவற்றைச் சொன்னார்: “எரேமியா, யூதாவின் ராஜாக்கள் வந்துபோகிற எருசலேமின் ஜனங்கள் வாசலுக்குப்போய் நில். எனது வார்த்தையை ஜனங்களிடம் கூறு. பிறகு எருசலேமின் மற்ற வாசல்களுக்கும் போ. அதே செயலைச் செய்.”
20அந்த ஜனங்களிடம் சொல்: “கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள்! யூதாவின் ராஜாக்களே, கேளுங்கள்! யூதாவின் ஜனங்களே, கேளுங்கள்! இந்த வாசல்கள் வழியாக எருசலேமிற்குள் வருகின்ற ஜனங்களே, என்னை கவனியுங்கள்! 21கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள். 22ஓய்வுநாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே சுமையைத் தூக்கி வராதீர்கள். அந்த நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். நீங்கள் ஓய்வுநாளை ஒரு பரிசுத்த நாளாக்க வேண்டும். நான் இதே கட்டளையை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தேன். 23ஆனால் உங்கள் முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் என் மீது கவனம் செலுத்தவில்லை. உங்கள் முற்பிதாக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். நான் அவர்களைத் தண்டித்தேன். ஆனால் அது அவர்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் என்னை கவனிக்கவில்லை. 24ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. ஓய்வு நாளில் நீங்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக சுமையைக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக்க வேண்டும். அந்நாளில் எவ்வித வேலையும் செய்யாமல் இருப்பதே ஓய்வுநாளை பரிசுத்தமான நாளாக வைப்பதாகும்.
25“‘நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ராஜாக்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த ராஜாக்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்! 26யூதாவின் நகரங்களில் இருந்து ஜனங்கள் எருசலேமிற்கு வருவார்கள். எருசலேமிற்கு அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்கள் வாழும் நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். மேற்கு மலை அடிவாரங்களிலிருந்தும், மலை நாடுகளிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். நெகேவிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். அந்த ஜனங்கள் எல்லோரும் தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும், ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வருவார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு அவர்கள் இந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டு வருவார்கள்.
27“‘ஆனால், நீங்கள் என்னை கவனிக்காமலும் அடிபணியாமலும் இருந்தால் பிறகு தீயவை நிகழும். ஓய்வுநாளில் நீங்கள் எருசலேமிற்குள் சுமைகளைக் கொண்டு வந்தால் பின் நீங்கள் அந்நாளைப் பரிசுத்தப்படுத்தவில்லை. எனவே, உங்களால் அணைக்க முடியாத ஒரு தீயை பற்றவைப்பேன். எருசலேமின் வாசலிலிருந்து அந்த நெருப்பு தொடங்கும். அது அரண்மனைகள்வரை பற்றி எரியும்.’”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in