YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 30

30
1“ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
இளைஞர்கள் கூட என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
அவர்களின் தந்தைகளை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப் பட்டிருப்பேன்.
2அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
3அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பாலைவனத்தின் உலர்ந்த அழுக்கை உண்கிறார்கள்.
4அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
மரத்தின் வேர்களை அவர்கள் தின்றார்கள்.
5அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.
6அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.
7அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.
8தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!
9“இப்போது அந்த மனிதர்களின் குமாரர்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.
10அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்.
அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!
11தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
12அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
அவர்கள் என் பாதங்களை அகல தள்ளிவிட்டார்கள்.
நான் தாக்கப்படும் நகரத்தைப்போல் இருக்கிறேன்.
என்னைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் என் சுவர்களுக்கெதிராக அழுக்குகளைக் கட்டுகிறார்கள்.
13அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
14அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள்.
உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
15நான் பயத்தால் நடுங்குகிறேன்.
காற்று பொருள்களைப் பறக்கடிப்பதைப்போல அந்த இளைஞர்கள் என் மகிமையைத் துரத்திவிடுகிறார்கள்.
என் பாதுகாப்பு ஒரு மேகத்தைப்போன்று மறைகிறது.
16“இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
நான் விரைவில் மடிவேன்.
துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.
18தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.
19தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.
20“தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.
21தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
22தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
23நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.
24“ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.
25தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.
26நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
27நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.
28நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
29நான் காட்டு நாய்களைப்போலவும்
நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
30என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
31துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.
துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in