YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 32

32
எலிகூ விவாதத்தில் பங்குக்கொள்கிறான்
1அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். 2ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் குமாரன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான். 3யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை. 4எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான். 5யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான். 6எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்:
“நான் இளைஞன், நீங்கள் முதியவர்கள்.
ஆகவேதான் நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல அஞ்சினேன்.
7நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும்.
முதியோர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பல காரியங்களைக் கற்றிருக்கிறார்கள்’ என்று சிந்தித்தேன்.
8ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மூச்சு ஜனங்களைப் புரிய வைக்கிறது.
9முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர்.
சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.
10“எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்!
நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்வேன்.
11நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
யோபுவுக்கு நீங்கள் கூறிய பதில்களைக் கேட்டேன்.
12நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன்.
உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை.
அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.
13நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது.
மனிதரல்ல, தேவன் யோபுவின் விவாதங்களுக்குப் பதில் கூறவேண்டும்.
14யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை.
எனவே நீங்கள் மூவரும் பயன்படுத்திய விவாதங்களை நான் பயன்படுத்தமாட்டேன்.
15“யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள்.
அவர்கள் மேலும் கூற எதுவுமில்லை.
அவர்களிடம் வேறு பதில்கள் இல்லை.
16யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன்.
ஆனால் இப்போது அவர்கள் அமைதியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உம்மோடு விவாதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள்.
17எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன்.
ஆம், நான் நினைப்பதை உமக்குக் கூறுவேன்.
18நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது.
நான் அவற்றைக் கொட்டிவிடப் போகிறேன்.
19திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன்.
உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.
20எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன்.
நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
21பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும்.
அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன்.
நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
22நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது.
நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in