YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 7

7
இயேசு ஒரு வேலைக்காரனைக் குணமாக்குதல்
(மத்தேயு 8:5-13; யோவான் 4:43-54)
1இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். 2கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான். 3அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். 4அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான். 5அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர்.
6எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். 7அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான். 8உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான்.
9இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார்.
10இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர்.
மரித்தவன் எழுப்பப்படுதல்
11மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். 12நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே குமாரனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். 13கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். 14பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். 15இறந்துபோன குமாரன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.
16எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள்.
17இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று.
யோவானின் கேள்வி
(மத்தேயு 11:2-19)
18இவை அனைத்தையும் குறித்து யோவானின் சீஷர்கள் யோவானுக்குக் கூறினர். தன் சீஷர்களில் இருவரை யோவான் அழைத்தான். 19“நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவர் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள கர்த்தரிடம் அவர்களை யோவான் அனுப்பினார்.
20அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள்.
21அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார். 22யோவானின் சீஷர்களை நோக்கி இயேசு, “இங்கு நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் கூறுங்கள். குருடர்கள் குணமடைந்து பார்க்கிறார்கள். முடவர்கள் குணமடைந்து நடக்கிறார்கள். தொழுநோயாளிகள் நலம் பெறுகின்றனர். செவிடர்கள் நலம் பெற்றுக் கேட்கிறார்கள். மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி ஏழைகளுக்குச் சொல்லப்படுகிறது. 23என்னை ஏற்றுக்கொள்ளுகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்!” என்றார்.
24யோவானின் தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இயேசு யோவானைக் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்: “நீங்கள் வனாந்தரத்துக்கு எதைப் பார்க்கச் சென்றீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? 25நீங்கள் எதைப் பார்க்கும்படியாக வெளியே சென்றீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்த மனிதனையா? அழகிய மெல்லிய ஆடைகள் அணிந்த மக்கள் ராஜாக்களின் உயர்ந்த அரண்மனைகளில் வாழ்வார்கள். 26உண்மையாகவே யாரைப் பார்க்கச் சென்றீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், யோவான் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மிகவும் சிறந்தவன். 27இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது:
“‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன்.
அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’#மல்கி. 3:1
28நான் உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் பிறந்த எந்த மனிதனைக் காட்டிலும் யோவான் பெரியவன். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் முக்கியத்துவம் குறைந்தவன் கூட யோவானைக் காட்டிலும் பெரியவன்.”
29(யோவானின் போதனைகளை மக்கள் கேட்டபோது தேவனின் போதனைகள் நல்லவை என்று ஒத்துக்கொண்டனர். வரி வசூலிப்பவர்களும் அதனை ஆமோதித்தனர். இம்மக்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர். 30ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.)
31“இக்காலத்து மக்களைப்பற்றி நான் என்ன கூறட்டும்? அவர்களை எதனோடு ஒப்பிடட்டும்? அவர்கள் எதைப் போன்றவர்கள்? 32இக்காலத்து மக்கள் சந்தையில் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போன்றவர்கள். ஒரு கூட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் பிற சிறுவர்களை அழைத்து,
“‘நாங்கள் உங்களுக்காக இசை இசைத்தும்
நீங்கள் ஆடவில்லை.
நாங்கள் சோகப்பாடல் பாடியும்
நீங்கள் துக்கம் அடையவில்லை’
என்று கூறுவதுபோல் உள்ளனர்.
33யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள். 34மனித குமாரன் பிறரைப் போன்று உண்பவராகவும், திராட்சை இரசம் பருகுபவராகவும் வந்தார். நீங்கள், ‘அவரைப் பாருங்கள். அவர் தேவைக்கும் மிகுதியாக உண்டு, மிகுதியாக திராட்சை இரசம் பருகுகிறார். அவர் வரிவசூலிப்பவர்களுக்கும் தீயோருக்கும் நண்பராக இருக்கிறார்’ என்கிறீர்கள். 35ஆனால் ஞானமானது அதன் செய்கைகளால் சரியானதென விளங்கும்” என்றார்.
பரிசேயனான சீமோன்
36பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை அழைத்தான். இயேசு பரிசேயனின் வீட்டுக்குள் சென்று மேசையில் அமர்ந்தார்.
37அப்போது நகரத்தில் பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். பரிசேயனின் வீட்டில் இயேசு உணவு உண்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே அலங்கரிக்கப்பட்ட ஜாடி ஒன்றில் நறுமணத் தைலத்தை அவள் கொண்டு வந்தாள். 38அவள் இயேசுவின் பாதத்தருகே, அழுதுகொண்டே நின்றாள். அவளது கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அவளது தலைமயிரால் இயேசுவின் பாதங்களைத் துடைத்து உலரவைத்தாள். அவரது பாதங்களைப் பலமுறை முத்தமிட்டு நறுமண தைலத்தைப் பாதங்களில் பூசினாள்.
39தனது வீட்டுக்கு இயேசுவை அழைத்த பரிசேயன் இதைக் கண்டான். அவன் தனக்குள், “உண்மையாகவே இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடுகிற பெண் ஒரு பாவி என்பதை அறிந்திருப்பார்” என்று நினைத்தான்.
40இயேசு பரிசேயனை நோக்கி, “சீமோனே! நான் உனக்குச் சிலவற்றைக் கூறவேண்டும்” என்றார்.
சீமோன், “போதகரே, சொல்லுங்கள், கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
41“இரண்டு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே மனிதனிடம் கடன் வாங்கினர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிப் பணம் கடன் வாங்கியிருந்தான். மற்றொருவன் ஐம்பது வெள்ளிப்பணம் கடனாக வாங்கியிருந்தான். 42பணம் இல்லாததால் இருவராலும் கடனை அடைக்க முடியாமல் போயிற்று. கடன் கொடுத்த மனிதன் இருவரிடமும் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறினான். இப்போது கடன் பெற்றிருந்த இருவரில் யார் அதிக அளவில் கடன் கொடுத்த மனிதனை நேசிப்பார்கள்?” என்று கேட்டார் இயேசு.
43சீமோன், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதனே அதிக நேசம் கொண்டவனாக இருப்பான் என எண்ணுகிறேன்” என்று பதில் கூறினான்.
இயேசு சீமோனை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார். 44பின்பு அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி சீமோனிடம், “இந்த பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தபோது என் பாதங்களைக் கழுவுவதற்கு நீ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவித் தன் தலை மயிரால் என் பாதங்களைத் துடைத்து உலர்த்தினாள். 45நீ என்னை முத்தமிடவில்லை. நான் உள்ளே வந்ததிலிருந்து அவள் என் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். 46நீ என் தலையில் எண்ணெயால் தடவவில்லை. ஆனால் அவள் என் பாதங்களை நறுமண தைலத்தால் தடவினாள். 47அவளுடைய கணக்கற்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். அவள் காட்டிய மிகுந்த அன்பே இதைத் தெளிவாக்குகிறது. மன்னிக்கப்பட வேண்டியதன் தேவையைச் சற்றே உணர்ந்தவன் மன்னிப்படையும்போது சிறிதளவு அன்பையே உணர்வான்” என்றார்.
48பின் இயேசு அவளை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
49மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள்.
50இயேசு அப்பெண்ணை நோக்கி, “நீ விசுவாசித்ததால் பாவங்களினின்று விடுதலையடைந்தாய். நிம்மதியோடு போ” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in