YouVersion Logo
Search Icon

ஒபதியா 1

1
ஏதோம் தண்டிக்கப்படும்
1இது ஒபதியாவின் தரிசனம். என் கர்த்தராகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைப் பற்றி இதனைக் கூறுகிறார்.
நாங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து ஒரு அறிக்கையைக் கேட்டோம்.
ஒரு தூதுவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்.
அவர், “நாம் போய் ஏதோமுக்கு எதிராகச் சண்டையிடுவோம்” என்று கூறினார்.
கர்த்தர் ஏதோமிடம் பேசுகிறார்
2“ஏதோமே, நான் உன்னை மிகவும் சிறிய நாடாக்குவேன்.
ஜனங்கள் உன்னை மிகவும் வெறுப்பார்கள்.
3உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது.
கன்மலை உச்சியிலுள்ள குகைகளில் நீ வசிக்கிறாய்.
உன் வீடு மலைகளின் உச்சியில் உள்ளது.
எனவே நீ உனக்குள்ளேயே,
‘எவராலும் என்னைத் தரைக்குக் கொண்டு வரமுடியாது’” என்கிறாய்.
ஏதோம் கீழே கொண்டு வரப்படும்
4தேவனாகிய கர்த்தர்:
“நீ கழுகைப் போன்று உயரப்போனாலும் நட்சத்திரங்களுக்கிடையில் உன் கூட்டைக் கட்டினாலும்,
நான் அங்கிருந்து உன்னைக் கீழே கொண்டு வருவேன்” என்று கூறுகிறார்.
5“நீ உண்மையில் அழிக்கப்படுவாய்.
திருடர்கள் உன்னிடம் வருவார்கள்.
கள்ளர்கள் இரவில் வருவார்கள்.
அத்திருடர்கள் தாம் விரும்புகிற அனைத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
வேலைக்காரர்கள் உங்கள் வயல்களில் திராட்சையைப் பறிக்கும்போது
சில திராட்சைப் பழங்களை விட்டுவைப்பார்கள்.
6ஆனால் பகைவன் ஏசாவினுடைய மறைக்கப்பட்ட கருவூலங்களைத் தீவிரமாகத் தேடுவான்.
அவர்கள் அவையனைத்தையும் கண்டுப்பிடிபார்கள்.
7உன் நண்பர்களான அனைத்து ஜனங்களும்
நாட்டை விட்டு வெளியேற உன்னை வற்புறுத்துவார்கள்.
உன்னோடு சமாதானமாக உள்ள ஜனங்கள் (நல்ல நண்பர்கள்) தந்திரம் செய்து
உன்னைத் தோற்கடிப்பார்கள்.
உன் நண்பர்கள் உனக்காக ஒரு கண்ணியைத் திட்டமிடுகிறார்கள்.
‘அவன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை!’”
என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
8கர்த்தர் கூறுகிறார்:
“அந்த நாளில், நான் ஏதோமிலுள்ள ஞானிகளை அழிப்பேன்.
ஏசாவின் மலைகளில் உள்ள புத்திமான்களை அழிப்பேன்.
9தேமானே, உனது பலவான்கள் பயப்படுவார்கள்.
ஏசாவின் மலையில் உள்ள ஒவ்வொருவரும் அழிக்கப்படுவார்கள்.
அநேக ஜனங்கள் கொல்லப்படுவார்கள்.
10நீ அவமானத்தால் மூடப்பட்டிருப்பாய்.
நீ என்றென்றைக்கும் அழிக்கப்படுவாய்.
ஏனென்றால், நீ உனது சகோதரனான யாக்கோபுடன் கொடூரமாக இருந்தாய்.
11நீ இஸ்ரவேலின் பகைவரோடு சேர்ந்தாய்.
அந்நியர்கள் இஸ்ரவேலின் கருவூலங்களை எடுத்துச் சென்றார்கள்.
அயல்நாட்டுகாரர்கள் இஸ்ரவேலின் நகரவாசலில் நுழைந்தனர்.
அந்த அயல் நாட்டுக்காரர்கள் எருசலேமின் எந்தப் பகுதி அவர்களுக்கு வரும் என்று சீட்டுப்போட்டனர்.
அவர்களில் நீயும் ஒருவனாக உன் பங்கைப் பெறக் காத்திருந்தாய்.
12நீ உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
ஜனங்கள் யூதாவை அழிக்கும்போது நீ மகிழ்ந்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக்கூடாது.
நீ அவர்களின் துன்பத்தில் வீண் புகழ்ச்சி கொண்டாய்.
நீ அதனைச் செய்திருக்கக்கூடாது.
13நீ என் ஜனங்களின் நகரவாசலில் நுழைந்து அவர்களின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
அவர்களின் துன்பநேரத்தில் நீ அவர்களுடைய கருவூலங்களை எடுத்துக்கொண்டாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
14சாலைகள் சந்திக்கும் இடத்தில் நீ நின்று
தப்பிச் செல்ல முயல்கிறவர்களை அழித்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
நீ உயிரோடு தப்பியவர்களைக் கைது செய்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
15கர்த்தருடைய நாள் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வருகிறது.
நீ மற்றவர்களுக்குத் தீமை செய்தாய்.
அத்தீமைகள் உனக்கு ஏற்படும்.
அதே தீமைகள் உன் சொந்த தலை மேலேயே விழும்.
16ஏனென்றால் எனது பரிசுத்தமான மலையில் நீ குடித்ததுபோல,
மற்ற நாட்டு ஜனங்களும்
உன்னில் குடித்துப் புரளுவார்கள்.
நீ என்றுமே இருந்ததில்லை என்பதுபோன்று எனது முடிவு வரும்.
17ஆனால் சீயோன் மலையின் மேல் தப்பிப் பிழைத்தோர் இருப்பார்கள்.
அவர்கள் எனது சிறப்பான ஜனங்களாக இருப்பார்கள்.
யாக்கோபின் நாடு தனக்குரியவற்றைத்
திரும்ப எடுத்துக்கொள்ளும்.
18யாக்கோபின் குடும்பம் நெருப்பைப் போன்றிருக்கும்.
யோசேப்பின் நாடானது சுவாலையைப் போன்றிருக்கும்.
ஆனால் ஏசாவின் நாடு சாம்பலைப் போன்றிருக்கும்.
யூதா ஜனங்கள் ஏதோமை எரிப்பார்கள்.
யூதா ஜனங்கள் ஏதோமை அழிப்பார்கள்.
அதன் பிறகு ஏசாவின் நாட்டில் தப்பிப் பிழைத்தோர் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.”
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் இதைக் கூறினார்.
19பிறகு ஏசா மலைமீது,
நெகேவ் ஜனங்கள் வாழ்வார்கள்.
மலை அடிவாரத்திலுள்ள ஜனங்கள் பெலிஸ்தியர்களின் நிலங்களை எடுத்துக்கொள்வார்கள்.
எப்பிராயீம் மற்றும் சமாரியா நாடுகளில்
அந்த ஜனங்கள் வாழ்வார்கள்.
கீலேயாத் பென்யமீனுக்கு உரியதாகும்.
20இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டவர்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் சாரிபாத் வரையுள்ள கானான் நாட்டை எடுத்துக்கொள்வார்கள்.
யூதா ஜனங்கள் எருசலேமை விட்டு வெளியேறி சேப்பாராதத்தில் வாழும்படி வற்புறுத்தப்படுவார்கள்.
ஆனால் அவர்கள் நெகேவ் நகரங்களை எடுத்துக்கொள்வார்கள்.
21விடுவிக்கிக்கப்பட்டவர்கள் சீயோன் மலைக்குப்போய்
ஏசா மலையில் வாழும் ஜனங்களை நியாயம்தீர்த்து ஆட்சி செய்வார்கள்.
இராஜ்யம் கர்த்தருக்கு உரியதாகும்.

Currently Selected:

ஒபதியா 1: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in