YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 39

39
எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
1நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
2நான் பேச மறுத்தேன்.
நான் எதையும் கூறவில்லை.
ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
3நான் மிகவும் கோபமடைந்தேன்.
அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
4கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
5கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!
6நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.
7எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
நீரே என் நம்பிக்கை!
8கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
9நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.
12கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in