YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 49

49
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
1எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
13மூடரான மனிதருக்கும்,
தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது.
14எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர்.
கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன்.
அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும்.
15ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார்.
கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்!
16சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
17அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள்.
அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது.
18மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும்.
தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும்.
19அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும்.
அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை.
20ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது.
மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in