YouVersion Logo
Search Icon

சகரியா 6

6
நான்கு இரதங்கள்
1பின்னர் நான் சுற்றி திரும்பினேன். நான் மேலே பார்த்தேன். நான் நான்கு இரதங்கள் இரண்டு வெண்கல மலைகளுக்கிடையில் செல்வதைக் கண்டேன். 2சிவப்புக் குதிரைகள் முதல் இரதத்தை, இழுத்துக்கொண்டு சென்றன. இரண்டாவது இரதத்தை கருப்புக் குதிரைகள் இழுத்துக்கொண்டு சென்றன. 3வெள்ளைக் குதிரைகள், மூன்றாவது இரதத்தை இழுத்துச் சென்றன. சிவப்புப் புள்ளிகளை உடைய குதிரைகள், நான்காவது இரதத்தை இழுத்துச் சென்றன. 4பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஐயா, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
5தூதன், “இவை நான்கு காற்றுகள். இவை இப்பொழுதுதான் உலகம் முழுவதற்கும் ஆண்டவராக இருக்கிறவரிடத்திலிருந்து வந்திருக்கின்றன. 6கருப்புக் குதிரைகள் வடக்கே செல்லும். சிவப்புக் குதிரைகள் கிழக்கே செல்லும். வெள்ளைக் குதிரைகள் மேற்கே செல்லும். சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் தெற்கே செல்லும்” என்றான்.
7சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் புறப்பட்டுப்போய் பூமியில் அவைகளுக்கான பகுதிகளைக் காண ஆவலாய் இருந்தன. எனவே தூதன் அவைகளிடம், “பூமி முழுவதும் போங்கள்” என்றான். எனவே அவை பூமியில் தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன.
8பின்னர் கர்த்தர் என்னைக் கூப்பிட்டார். அவர், “பார், வடக்கே செல்லும் குதிரைகள் பாபிலோனில் தம் வேலையை முடித்துவிட்டன. அவை எனது ஆவியை அமைதிபடுத்திவிட்டன. இப்பொழுது நான் கோபமாக இல்லை!” என்றார்.
ஆசாரியன் யோசுவா ஒரு கிரீடத்தைப் பெறுகிறான்
9பின்னர், நான் கர்த்தரிடமிருந்து இன்னொரு செய்தியைப் பெற்றேன். அவர், 10“எகல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனின் சிறை கைதிகளாய் இருந்து வந்திருக்கின்றனர். அம்மனிதர்களிடமிருந்து வெள்ளியையும், தங்கத்தையும் பெறு. பிறகு செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குப் போ. 11அந்தப் பொன்னையும் வெள்ளியையும் பயன்படுத்தி கிரீடம் செய். அந்தக் கிரீடத்தை யோசுவாவின் தலையில் வை. (யோசுவா தலைமை ஆசாரியனாக இருந்தான். யோசுவா யோத்சதாக்கின் குமாரன்) பிறகு யோசுவாவிடம் இவற்றைச் சொல். 12சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘கிளை என்று அழைக்கப்படும் மனிதன் இருக்கிறார்.
அவர் பலத்துடன் வளருவார்.
அவர் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவார்.
13அவர் கர்த்தருடைய ஆலயத்தைக்கட்டி,
அதற்குரியப் பெருமையைப் பெறுவார்.
அவர் தனது சிங்காசனத்தில் அமர்ந்து ஆள்பவனாவார்.
ஒரு ஆசாரியன் அவனருகில் நிற்பான்.
இவ்விரண்டு பேரும் சேர்ந்து சமாதானத்துடன் பணிசெய்வார்கள்.’
14அவர்கள் இந்தக் கிரீடத்தை ஜனங்களுக்கு நினைவூட்டுவதற்காக ஆலயத்தில் வைப்பார்கள். அந்தக் கிரீடம் எல்தாய், தொபியா, யெதயா, செப்பனியாவின் குமாரன் யோசுவா ஆகியோருக்கு நினவூட்டும் சின்னமாக இருக்கும். யோசியா, இது ராஜாவின் வல்லமை தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.”
15தொலைத்தூரத்தில் வாழும் ஜனங்களும் வந்து அங்கு ஆலயம் கட்டுவார்கள். பின்னர் கர்த்தர் என்னை உங்களுக்காக அனுப்பினார் என்பதை உணர்வீர்கள். கர்த்தர் சொல்லுகிறபடி நீங்கள் செய்தால் இவை நிகழும்.

Currently Selected:

சகரியா 6: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in