YouVersion Logo
Search Icon

யோவான் 12

12
இயேசுவின் பாதத்தில் நறுமணத் தைலம் ஊற்றுதல்
1பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான். 2அங்கே அவர்கள் இயேசுவுக்கு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். இயேசுவுடனே உணவுப் பந்தியில் அமர்ந்திருந்தவர்களிடையே லாசருவும் இருந்தான். 3அப்போது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் வாசனைத் தைலத்தில் அரை லீட்டர்#12:3 அரை லீட்டர் – கிரேக்க மொழியில் ஒரு லிட்ரா கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த வாசனைத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது.
4ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனும், பின்னர் அவரைக் காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்து, 5“இந்த வாசனைத் தைலத்தை முந்நூறு தினாரி#12:5 முந்நூறு தினாரி – இதன் பெறுமதி சுமார் ஒரு வருட சம்பளம். பணத்துக்கு விற்று, அதை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை?” என்றான். 6அவன் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததனால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு.
7ஆனால் இயேசுவோ, “அவளைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். என்னை அடக்கம் பண்ணும் நாளுக்கென்றே, அவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள். 8ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்.#12:8 உபா. 15:11 ஆனால் நானோ, எப்போதும் உங்களுடன் இருக்கப் போவதில்லை” என்றார்.
9இதற்கிடையில் இயேசு அங்கே இருக்கின்றார் என்று யூதர்கள் அறிந்து, ஒரு பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல, இறந்தோரிலிருந்து உயிருடன் அவர் எழுப்பிய லாசருவையும் பார்ப்பதற்காக வந்தார்கள். 10எனவே தலைமை மதகுருக்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள். 11ஏனெனில் லாசருவின் பொருட்டு யூதர்களில் பலர் இயேசுவிடம் போய், அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
இயேசுவின் ஊர்வலம்
12மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள், இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். 13அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு, அவரைச் சந்திக்கப் புறப்பட்டு,
“ஓசன்னா!”#12:13 சங். 118:25,26
“கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
என்று ஆர்ப்பரித்தார்கள்.
14இயேசு ஒரு கழுதைக்குட்டியைத் தேடி, அதன்மீது உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது:
15“சீயோன் மகளே, பயப்படாதே;
இதோ உன்னுடைய அரசர்
கழுதைக்குட்டியின் மேல் வருகின்றார்.”#12:15 சக. 9:9
16ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்படுத்தப்பட்ட பின்பே, இவையெல்லாம் அவரைக் குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.
17இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து அழைத்து, அவனை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டத்தினர் தொடர்ந்து அந்தச் செய்தியைப் பரப்பி வந்தார்கள். 18அவர் இப்படிப்பட்ட ஒரு அற்புத அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதனால், அநேகர் அவரைச் சந்திப்பதற்குப் போனார்கள். 19அப்போது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதிருக்கிறதே. பாருங்கள்! உலகமே அவனுக்குப் பின்னால் போகின்றது” என்றார்கள்.
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
20பண்டிகையிலே ஆராதிப்பதற்காகப் போனவர்களிடையே சில கிரேக்கர்கள் இருந்தார்கள். 21அவர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்” என்றார்கள். இந்த பிலிப்பு, கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். 22பிலிப்பு போய் அந்திரேயாவுக்கு இதைச் சொன்னான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவிடம் இதைச் சொன்னார்கள்.
23அப்போது இயேசு, “மனுமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது. 24நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது தனியொரு விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும். 25தன் வாழ்வை நேசிக்கின்றவன், அதை இழந்து விடுவான். ஆனால் இந்த உலகத்திலே தன் வாழ்வை வெறுக்கின்றவனோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வான். 26எனக்குப் பணி செய்கின்றவன் எவனோ, அவன் என்னைப் பின்பற்ற வேண்டும். நான் எங்கே இருக்கின்றேனோ என்னுடைய ஊழியக்காரனும் அங்கே இருப்பான். எனக்குப் பணி செய்கின்றவனை என் பிதா கனம் பண்ணுவார்.
27“இப்போது என் உள்ளம் கலங்கி இருக்கின்றது. நான் என்ன சொல்வேன்? ‘பிதாவே, இந்தத் துன்ப வேளையிலிருந்து என்னை காத்துக்கொள்ளும்’ என்று சொல்வேனோ? இல்லையே, இந்தக் காரணத்திற்காகத்தானே நான் வந்தேன்; இதற்காகவே நான் இவ்வேளைக்குள் போகப் போகின்றேன். 28‘பிதாவே உம்முடைய பெயரை மகிமைப்படுத்தும்!’ ” என்றார்.
அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதைத் திரும்பவும் மகிமைப்படுத்துவேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. 29அங்கு கூடியிருந்த மக்கள் அதைக் கேட்டு, “வானத்தில் முழக்கம் உண்டாகியது” என்றார்கள். வேறு சிலரோ, “ஒரு இறைதூதன் அவருடனே பேசினான்” என்றார்கள்.
30இயேசுவோ, “இந்தக் குரல் எனக்காக அல்ல, உங்களுக்காகவே தொனித்தது. 31இதுவே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும் வேளையாக இருக்கின்றது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி வெளியே துரத்தப்படுவான். 32ஆனால் நானோ, இந்தப் பூமியிலிருந்து மேலே உயர்த்தப்படும்போது#12:32 மேலே உயர்த்தப்படும்போது – சிலுவை மரத்தில் அறையப்பட்டு மேலே உயர்த்தப்படுவதை குறிக்கின்றது., எல்லா மனிதர்களையும் என்னிடமாய் கவர்ந்துகொள்வேன்” என்றார். 33அவர் சந்திக்கவிருக்கும் மரணம் எவ்விதமான மரணம் என்பதை உணர்த்தவே அவர் இதைச் சொன்னார்.
34அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், “மேசியா என்றென்றுமாய் இருப்பார் என்றே நீதிச்சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மனுமகன் மேலே உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மனுமகன்?” என்றார்கள்.
35அப்போது இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலத்திற்கே வெளிச்சம் உங்களோடு இருக்கப் போகின்றது. இருள் உங்களை மூடிக்கொள்ளும் முன்னதாக, வெளிச்சம் உங்களுடன் இருக்கும்போதே, நீங்கள் அதில் நடந்துகொள்ளுங்கள். இருளிலே நடக்கின்றவன், தான் எங்கே போகின்றான் என்று அறியாதிருக்கிறான். 36வெளிச்சம் உங்களிடம் இருக்கும்போதே, அந்த வெளிச்சத்தில் நம்பிக்கை வையுங்கள். அப்போது நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருப்பீர்கள்” என்றார். இயேசு இவைகளைச் சொன்ன பின்பு, அவர் அவர்களைவிட்டுச் சென்று மறைந்துகொண்டார்.
யூதர்களின் அவிசுவாசம்
37இயேசு இத்தனை அற்புத அடையாளங்களை எல்லாம் அவர்களது கண்களுக்கு முன்னால் செய்த போதிலும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 38இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாக கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது:
“ஆண்டவரே, எங்களுடைய செய்தியை நம்பியவர் யார்?
கர்த்தருடைய வலிய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?”#12:38 ஏசா. 53:1
என்று அவன் கூறியிருக்கிறான்.
39இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது:
40“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார்.
அவர்களுடைய இருதயத்தையோ மரத்துப் போகச் செய்தார்.
இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காண முடியவும் இல்லை.
தங்கள் இருதயங்களினால் விளங்கிக்கொள்ள முடியவும் இல்லை.
நான் அவர்களைக் குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வர முடியவும் இல்லை.”#12:40 ஏசா. 6:10
41ஏசாயா, இயேசுவின் மகிமையைக் கண்டு, அவரைக் குறித்து பேசியதால் இதைச் சொன்னார்.
42ஆயினும் யூத அதிகாரிகளில் பலரும் அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் பொருட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தைக் குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால், யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள். 43ஏனெனில், அவர்கள் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அதிகமாக விரும்பினார்கள்.
44அப்போது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “ஒருவன் என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவன் என்னில் மட்டுமல்ல, என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறான். 45அவன் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவன் காண்கின்றான். 46என்னில் விசுவாசம் வைக்கின்றவன், தொடர்ந்து இருளில் இராதவாறே, நான் இந்த உலகத்திற்கு ஒளியாய் வந்திருக்கிறேன்.
47“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் நியாயம் தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயம் தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன். 48என்னை நிராகரித்து, என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயம் தீர்க்கும் ஒன்று உண்டு; நான் பேசிய வார்த்தையே, கடைசி நாளில் அவனை நியாயம் தீர்க்கும். 49ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்ல வேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார். 50அவருடைய கட்டளை, நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா, நான் எதைச் சொல்ல வேண்டும் என்றாரோ அவற்றை நான் அப்படியே சொல்கின்றேன்” என்றார்.

Currently Selected:

யோவான் 12: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in