YouVersion Logo
Search Icon

யோவான் 8

8
1இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
2அதிகாலையிலே அவர் திரும்பவும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றி ஒன்றுகூடினார்கள். அவர் அவர்களுக்குப் போதிப்பதற்காக உட்கார்ந்தார். 3தகாத உறவில்#8:3 தகாத உறவில் – திருமண உறவுக்கு உண்மையற்ற விதத்திலான முறைகேடான நடத்தை ஈடுபட்டபோது பிடிபட்ட ஒரு பெண்ணை நீதிச்சட்ட ஆசிரியரும், பரிசேயரும் அப்போது அங்கு கொண்டுவந்து, அங்கிருந்த எல்லோருக்கும் நடுவில் அவளை நிறுத்தினார்கள். 4அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் தகாத உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிபட்டாள். 5இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று, நீதிச்சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்போது நீர் என்ன சொல்கின்றீர்?” என்றார்கள். 6இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருவதற்கான, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.
ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார். 7அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததனால், அவர் நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் எவனாவது பாவம் இல்லாதவனாய் இருந்தால், அவன் முதலாவதாக இவள் மேல் கல்லெறியட்டும்” என்றார். 8அவர் திரும்பவும் குனிந்து தரையில் எழுதினார்.
9அப்போது, இதைக் கேட்ட முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவில் நின்று கொண்டிருந்தாள். 10இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “பெண்ணே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
11அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள்.
அப்போது இயேசு அவளிடம், “நானும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்க மாட்டேன். போ, இனிமேல் பாவம் செய்யாதே” என்றார்.
உலகின் வெளிச்சம்
12திரும்பவும் இயேசு மக்களுடன் பேசத் தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்காமல், வாழ்வளிக்கும் வெளிச்சத்தைப் பெற்றிருப்பான்” என்றார்.
13அப்போது பரிசேயர்கள் அவரிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றாயே; உனது சாட்சி உண்மையானதல்ல” என்றார்கள்.
14இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன் என்றும், நான் எங்கே போகின்றேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ, நான் எங்கிருந்து வந்தேன் என்றும், எங்கே போகின்றேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள். 15நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கின்றீர்கள்; நானோ ஒருவனையும் நியாயம் தீர்ப்பதில்லை. 16அப்படியே நான் நியாயம் தீர்த்தால், எனது தீர்ப்பு சரியானதாகவே இருக்கும். ஏனெனில், நான் தனியாக நியாயம் தீர்ப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனே இருக்கின்றார். 17இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த நீதிச்சட்டத்திலே எழுதியிருக்கிறது. 18நான் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றேன்; என்னை அனுப்பிய பிதாவும் எனக்கு சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
19அப்போது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள்.
அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கின்றீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையும்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார். 20அவர் ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகின்ற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆயினும் ஒருவனும் அவரைக் கைது செய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
இயேசு யார் என்ற சர்ச்சை
21திரும்பவும் இயேசு அவர்களிடம், “நான் போகின்றேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆயினும் நீங்கள் உங்கள் பாவத்திலேயே மரணமடைவீர்கள். நான் போகின்ற இடத்திற்கு உங்களால் வர முடியாது” என்றார்.
22அப்போது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றானா? அதனால்தான், ‘நான் போகின்ற இடத்திற்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கின்றானோ?” என்று கேட்டார்கள்.
23அவர் தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல. 24நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரணிப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; ‘நானே அவர்’ என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் மரணமடைவீர்கள்” என்றார்.
25அப்போது அவர்கள் அவரிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்லி வருகின்றேனே. 26உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிப்பதற்கும், என்னிடம் அநேக காரியங்கள் உள்ளன. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். அவரிடமிருந்து கேட்டதையே நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன்” என்றார்.
27அவர் பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகின்றார் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. 28எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மனுமகனை மேலே உயர்த்திய பின்பு, நானே அவர் என்பதையும், சுயமாக நான் ஒன்றையும் செய்வதில்லை என்பதையும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கின்றேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். 29என்னை அனுப்பியவர் என்னுடனே இருக்கின்றார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்போதும் செய்கின்றேன்” என்றார். 30அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
ஆபிரகாமின் பிள்ளைகள்
31இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள். 32அப்போது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
33அப்போது அவர்கள் அவரிடம், “நாங்கள் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க, நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
34அதற்கு இயேசு பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன். பாவம் செய்கின்ற ஒவ்வொருவனும், பாவத்திற்கு அடிமையாய் இருக்கின்றான். 35குடும்பத்தில் அடிமை ஒருவன் நிரந்தரமாக இருப்பதில்லை; ஆனால் ஒரு மகனோ, அந்தக் குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாய் இருக்கின்றான். 36ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள். 37நீங்கள் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உங்கள் உள்ளத்தில் எனது வார்த்தைக்கு இடமில்லாததால், நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றீர்கள். 38எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கின்றீர்கள்” என்றார்.
39அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள்.
இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால், ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள். 40ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த உண்மையை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே. 41நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கின்றீர்கள்” என்றார்.
அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் முறைகேடான பாலுறவினால் பிறந்தவர்கள் அல்ல. இறைவனே எங்களுக்கிருக்கும் ஒரே பிதா” என்றார்கள்.
42அப்போது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்போது இங்கே இருக்கின்ற நான், இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை. அவரே என்னை அனுப்பினார். 43நான் சொல்வதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்? நான் சொல்வதைக் கேட்பதற்கு நீங்கள் மனதற்றவர்களாய் இருப்பதே அதற்குக் காரணம். 44நீங்கள் உங்கள் தகப்பனான பிசாசுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கின்றான். அவனுக்குள் உண்மையில்லாததால் அவன் உண்மையில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகின்றான். ஏனெனில் அவன் ஒரு பொய்யனும் பொய்களின் தகப்பனுமாக இருக்கின்றான். 45நானோ உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், ஆனாலும் நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள். 46நான் பாவம் செய்தேனென்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்? 47எவன் இறைவனுக்கு உரியவனாய் இருக்கின்றானோ, அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கின்றான். நீங்களோ இறைவனுக்கு உரியவர்களாய் இல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கின்றீர்கள்” என்றார்.
தம்மைப் பற்றிய இயேசுவின் உரிமை
48அப்போது யூதர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பேய் பிடித்தவன் என்று, நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.
49அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம் பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள். 50நான் எனது சுயமகிமையைத் தேடவில்லை; ஆயினும் எனக்காக அந்த மகிமையைத் தேடுகின்ற ஒருவர் இருக்கின்றார். அவரே நியாயம் தீர்க்கின்றவர். 51நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எவனாவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் ஒருபோதும் மரணத்தைக் காண மாட்டான்” என்றார்.
52அப்போது யூதர், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று இப்போது நாங்கள் நன்றாய் தெரிந்து கொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, எவனாவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் ஒருபோதும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கின்றாய். 53நீ எங்கள் தந்தை ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் இறந்தார், அப்படியே இறைவாக்கினரும் இறந்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.
54இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கின்ற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர். 55நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப் போலவே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன். 56உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தார்; அதைக் கண்டு அவர் சந்தோஷப்பட்டார்” என்றார்.
57அப்போது யூதர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
58அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னரே நான் இருக்கின்றேன்” என்றார். 59இதைக் கேட்டவுடன், அவர்மீது எறிவதற்காக அவர்கள் கற்களை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இயேசுவோ தம்மை மறைத்துக்கொண்டு ஆலயப் பகுதியைவிட்டு வெளியேறினார்.

Currently Selected:

யோவான் 8: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in