YouVersion Logo
Search Icon

லூக்கா 12

12
எச்சரிக்கைகளும் புத்திமதிகளும்
1இதற்கிடையே, ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அப்போது இயேசு, முதலில் தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தம் குறித்து, அதாவது அவர்களது வெளிவேடத்தைக் குறித்துக் கவனமாயிருங்கள். 2மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளிப்படுத்தப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் தெரியவராமல் போவதுமில்லை. 3நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து காதோடு காதாய் இரகசியமாய் பேசியது, கூரையின் மேலிருந்து அறிவிக்கப்படும்.
4“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உடலைக் கொல்லுகின்றவர்களுக்குப் பயப்பட வேண்டாம். அதற்குமேல், அவர்களால் உங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. 5ஆயினும், நீங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொலை செய்த பின்பு, நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவருக்கே பயப்படுங்கள். 6இரண்டு காசுக்கு#12:6 இரண்டு காசுக்கு – இதன் அர்த்தம் குறைந்த மதிப்புள்ள நாணயம் ஐந்து சிட்டுக் குருவிகள் விற்கப்படுகின்றன அல்லவா? ஆயினும், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை. 7உங்கள் தலைமுடிகளெல்லாம் எண்ணிக்கை செய்யப்பட்டுள்ளன. எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள்.
8“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மனுமகனும் ஏற்றுக்கொள்வார். 9ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை புறக்கணிக்கின்றவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக புறக்கணிக்கப்படுவான். 10யாராவது மனுமகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை பேசினால், அது மன்னிக்கப்படும். ஆனால், எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது மன்னிக்கப்பட மாட்டாது.
11“நீங்கள் ஜெபஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டு வரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, எவற்றைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள். 12ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்ல வேண்டும் என்பதை, பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
மூடனான பணக்காரனின் உவமை
13கூடியிருந்த மக்களில் ஒருவன் அவரிடம், “போதகரே, உரிமைச் சொத்தில் எனக்குரியதைப் பிரித்துக் கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
14அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார். 15பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லாவிதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
16மேலும் அவர், அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. 17அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
18“பின்பு அவன், ‘ஒரு காரியம் செய்யலாம்: என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைப்பேன். 19அதன்பின்பு, நான் என் ஆத்துமாவிடம், பல வருடங்களுக்குப் போதுமான பொருட்கள் உனக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன. நீ ஓய்வெடுத்து, சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
20“அப்போது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுக்கப்படும். அப்போது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
21“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கின்றது” என்றார்.
கவலைப்பட வேண்டாம்
22பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எதை உண்போம் என்று உங்கள் வாழ்வைக் குறித்தும், எதை அணிவோம் என்று உங்கள் உடலைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். 23ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் மேலானவை. 24காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைப்பதுமில்லை, அறுவடை செய்வதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனாலும், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கின்றார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்புமிக்கவர்களாய் இருக்கின்றீர்களே! 25கவலைப்படுவதால், உங்களில் எவனாவது தன் வாழ்நாளுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டிக்கொள்ள முடியுமா? 26எனவே இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்ய முடியாதிருக்கும்போது, மற்றைய காரியங்களைக் குறித்து ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27“காட்டுப் பூக்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்பதுமில்லை; ஆயினும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப் போல் உடை அணிந்ததில்லை. 28விசுவாசம் குறைந்தவர்களே! இன்றிருந்து நாளை நெருப்பில் போடப்படும் காட்டுப் புல்லை இறைவன் இவ்விதம் அணிவித்தால், எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு அணிவிப்பார். 29எதை உண்ணுவோம், எதைக் குடிப்போம் என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக் குறித்து கவலைப்படாதிருங்கள். 30ஏனெனில், இறைவனை அறியாத உலகத்தார் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவையெல்லாம் உங்களுக்கு அவசியம் என்று அறிந்திருக்கிறார். 31நீங்களோ அவருடைய அரசைத் தேடுங்கள். அப்போது இவைகளும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும்.
32“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் இருக்கின்றார். 33உங்கள் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள். பழையதாய்ப் போகாத பணப்பைகளை உங்களுக்கென இவ்விதமாய் உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தை பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை. 34ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கின்றதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
விழிப்பாயிருங்கள்
35“பணி செய்வதற்கு ஆயத்தமாய் உங்கள் உடையை அணிந்துகொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள். 36திருமண விருந்திலிருந்து திரும்பி வரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால், அவன் வந்து கதவைத் தட்டும்போது, உடனடியாக கதவைத் திறக்க முடியும். 37எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாய் காணப்படும் வேலைக்காரர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பணி செய்வதற்கான உடையை எஜமான் அணிந்துகொண்டு, தன் வேலைக்காரர்களை உணவுப் பந்தியில் உட்காரச் செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணி செய்வான். 38அந்த எஜமான் இரவின் இரண்டாம் காவல் நேரத்திலோ#12:38 இரண்டாம் காவல் நேரத்திலோ – நள்ளிரவு அல்லது மூன்றாம் காவல் நேரத்திலோ#12:38 மூன்றாம் காவல் நேரத்திலோ – அதிகாலை நேரம் தாமதித்து வந்தாலும்கூட, அப்பொழுதும் ஆயத்தமாய் காணப்படும் வேலையாட்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 39எனவே திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீடு உடைக்கப்படுவதற்கு அவன் இடமளிக்க மாட்டான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 40அதைப்போலவே, நீங்களும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்திலேயே மனுமகன் வருவார்” என்றார்.
41அப்போது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத்தான் சொல்கின்றீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கின்றீரோ?” என்று கேட்டான்.
42ஆண்டவர், அதற்கு மறுமொழியாக, “அந்த நிர்வாகியைப் போன்று உண்மையும் ஞானமும் உள்ளவன் யார்? அவனையே அந்த எஜமான், ஏற்ற வேளையில் தன்னுடைய வேலைக்காரருக்கு உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான். 43எஜமான் திரும்பி வரும்போது, தனது கடமையை அப்படியே செய்துகொண்டிருக்கும் நிர்வாகி நன்மை பெறுவான். 44நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தன்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான். 45ஆயினும் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்ட காலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடித்து, தானே உண்டு குடித்து வெறிகொள்ளத் தொடங்கினால், 46அந்த நிர்வாகியின் எஜமான், அவன் எதிர்பார்க்காத ஒரு நாளிலும், அவன் அறியாத நேரத்திலும் வருவான். எஜமான் வந்து, அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, நம்பத் தகுதியற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளி விடுவான்.
47“தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும் தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருக்கும் வேலைக்காரனுக்கு, அநேக அடிகள் அடிக்கப்படும். 48ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய் தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கின்றவனுக்கோ, சில அடிகளே அடிக்கப்படும். எவனிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்; அப்படியே அதிகம் ஒப்படைக்கப்பட்டவனிடம், இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
சமாதானம் அல்ல பிரிவினை
49“பூமியிலே நெருப்பை பற்ற வைக்கவே நான் வந்தேன்; அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். 50ஆயினும், நான் கட்டாயமாக பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று இருக்கின்றது. அது நிறைவேறும் வரை நான் அனுபவிக்கும் மனக்கஷ்டமோ அதிகம். 51பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வருகை தந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன். 52இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்று பேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டு பேர் மூன்று பேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். 53தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராக தாயும், மருமகளுக்கு எதிராக மாமியும், மாமிக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
காலங்களைப் பற்றிய விளக்கம்
54அவர் கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழுகின்றதை நீங்கள் காணும்போது, உடனே நீங்கள், ‘இதோ மழை பெய்யப் போகின்றது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது. 55தெற்கிலிருந்து காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப் போகின்றது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கின்றது. 56வெளிவேடக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் கொடுக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி?
57“சரியானது எது என்று, உங்களை நீங்களே நிதானிக்காமல் இருக்கின்றீர்களே, ஏன்? 58நீங்கள் உங்கள் எதிரியுடனே நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள கடும் முயற்சி செய்யுங்கள்; இல்லாவிட்டால், அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக் கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையில் போடவும் கூடும். 59நான் உங்களுக்குச் சொல்கின்றேன், தண்டப் பணத்தின் கடைசி நாணயத்தை செலுத்தித் தீர்க்கும்வரை, நீங்கள் அங்கிருந்து வெளியே வர மாட்டீர்கள்” என்றார்.

Currently Selected:

லூக்கா 12: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in