YouVersion Logo
Search Icon

லூக்கா 7

7
நூற்றுக்குத் தளபதியின் விசுவாசம்
1இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின்பு, அவர் கப்பர்நகூமுக்குச் சென்றார். 2அங்கே நூற்றுக்குத் தளபதியின்#7:2 நூற்றுக்குத் தளபதி என்பது நூறு காலாட் படையினருக்கு தளபதி. வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தறுவாயில் இருந்தான். இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானின் மதிப்புக்குரியவனாய் இருந்தான். 3நூற்றுக்குத் தளபதி இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். எனவே இயேசு வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரிடம் கேட்டுக்கொள்வதற்காக, யூதர்களின் சமூகத் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பினான். 4அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவரிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு, “நீர் இதை அந்த அதிகாரிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். 5ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெபஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். 6எனவே இயேசு அவர்களுடன் போனார்.
நூற்றுக்குத் தளபதியின் வீட்டிற்குச் சமீபமாய் இயேசு வந்து கொண்டிருக்கையில், அவன் தனது நண்பர்களை அவரிடம் அனுப்பி, அவர்களுக்கூடாகச் சொன்னதாவது: “ஆண்டவரே! நீர் சிரமப்பட வேண்டாம், நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. 7உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை கட்டளையிடும், அப்போது என் வேலைக்காரன் குணமடைவான். 8ஏனெனில், நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட ஒருவனாய் இருக்கின்றேன்; எனக்குக் கீழேயும் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் இவனைப் பார்த்து ‘போ’ என்றால் இவன் போகின்றான்; அவனைப் பார்த்து ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்.”
9இயேசு இதைக் கேட்டபோது, அவனைக் குறித்து வியப்படைந்தவராய், தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும்கூட கண்டதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார். 10அப்போது, இயேசுவிடம் அனுப்பப்பட்ட மனிதர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டார்கள்.
விதவையின் மகன்
11இதற்குப் பின்பு இயேசு, நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும், பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் போனார்கள். 12அவர் பட்டணத்து வாசலுக்குச் சமீபமாய் வந்தபோது மரணித்த ஒருவனை சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். ஒரு விதவைத் தாய்க்கு இவன் ஒரே மகன். அவளுடன் பட்டணத்திலிருந்து மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். 13ஆண்டவர் அவளைக் கண்டபோது, அவள் மீது மனம் உருகி, “அழாதே” என்று சொன்னார்.
14பின்பு அவர் போய், பாடையைத் தொட்டார். அதைச் சுமந்துகொண்டு நடந்தவர்கள் நின்றார்கள். அவர், “நான் உனக்குச் சொல்கின்றேன், வாலிபனே, எழுந்திரு!” என்றார். 15இறந்தவன் உயிர் பெற்று எழுந்து, பேசத் தொடங்கினான். இயேசு அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.
16அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவி செய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள். 17இயேசு செய்தவற்றைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திலும் பரவியது.
இயேசுவும் யோவான் ஸ்நானகனும்
18யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரை அழைத்து, 19“வரப் போகின்ற மேசியா நீர்தானா? இல்லாவிட்டால் இன்னொருவர் வரும்வரை எதிர்பார்த்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, ஆண்டவர் இயேசுவிடம் அவர்களை அனுப்பினான்.
20அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப் போகின்ற மேசியா நீர்தானா? இல்லாவிட்டால் இன்னொருவர் வரும்வரை எதிர்பார்த்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.
21அதேவேளை வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பீடிக்கப்பட்டிருந்ததான பலரை இயேசு குணமாக்கினார்; கண் பார்வையற்ற பலருக்கும் அவர் பார்வை கொடுத்தார். 22எனவே அவர் அந்த தூதுவர்களிடம், “நீங்கள் திரும்பிப் போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கின்றார்கள், தொழுநோயாளர் குணமடைகிறார்கள், செவிப்புலனற்றோர் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 23என் பொருட்டு இடறி விழாதவன்#7:23 இடறி விழாதவன் என்றால் என் செய்கைகளால், விசுவாச நடையில் தடுமாற்றம் அடையாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
24யோவானின் தூதுவர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களிடம் யோவானைக் குறித்து இயேசு பேசத் தொடங்கினார்: “எதைப் பார்க்க பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் ஆடும் ஒரு நாணற் புல்லைப் பார்க்கவா? 25இல்லையென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடையணிந்த ஒரு மனிதனைப் பார்க்கவா? இதோ, விலையுயர்ந்த உடை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளில் அல்லவோ இருக்கின்றார்கள். 26அப்படியானால் எதைப் பார்ப்பதற்குப் போனீர்கள்? ஒரு இறைவாக்கினனையா? ஆம், அவர் ஒரு இறைவாக்கினனிலும் மேலானவர் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். 27இவனைக் குறித்தே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதுவனை அனுப்புவேன்,
அவன் உமக்கு முன்பாக உம்முடைய வழியை ஆயத்தப்படுத்துவான்.’#7:27 மல். 3:1
28நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இதுவரை பிறந்தவர்களுள்#7:28 இதுவரை பிறந்தவர்களுள் – கிரேக்க மொழியில் பெண்களிடம் பிறந்தவர்களுள் என்றுள்ளது யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை. ஆயினும் இறைவனுடைய அரசில் மிகச் சிறியவனாய் இருக்கின்றவன் யோவானிலும் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.
29வரி சேகரிப்போர் உட்பட எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று ஏற்றுக்கொண்டார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். 30ஆனால் பரிசேயரும் நீதிச்சட்ட நிபுணர்களுமோ, யோவானிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்களாய் தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள்.
31இயேசு தொடர்ந்து கூறியதாவது, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்த, இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப் போல் இருக்கின்றார்கள்? 32அவர்கள் சந்தை கூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் அழைத்து,
“ ‘நாங்கள் உங்களுக்காக சந்தோஷக் குழல் ஊதினோம்,
நீங்கள் நடனமாடவில்லை;
நாங்கள் ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் அழவில்லை’
என்று சொல்கின்ற சிறுவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
33யோவான் ஸ்நானகன் நல்ல உணவை உண்ணாதவனும், திராட்சை ரசம் குடிக்காதவனுமாய் வந்தான். அவனைப் பார்த்து, ‘அவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று சொல்கின்றீர்கள். 34மனுமகனாகிய நானோ நல்ல உணவை உண்பவனாகவும், பானம் பருகுகிறவனாகவும் வந்தேன். என்னைப் பார்த்து, ‘இவனோ உணவுப் பிரியன், குடிகாரன், வரி சேகரிப்போருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கின்றீர்கள். 35ஆயினும் ஞானம் சரியானது என்பது, அதை ஏற்று நடக்கின்றவர்கள் எல்லோராலும் நிரூபிக்கப்படும்”#7:35 கிரேக்க மொழியில் ஞானம் அதன் பிள்ளைகளால் நிரூபிக்கப்படும் என்றுள்ளது. என்றார்.
பாவியான பெண் இயேசுவுக்கு வாசனைத் தைலம் பூசுதல்
36பரிசேயரில் ஒருவன், தன்னுடன் விருந்து உண்ணும்படி இயேசுவை அழைத்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப் போய், பந்தியில் உட்கார்ந்திருந்தார். 37அந்தப் பட்டணத்தில் பாவ வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, வாசனைத் தைலம் நிறைந்த ஒரு வெள்ளைக் கல் குடுவையுடன் அவள் அங்கு வந்தாள். 38அவள், அவருக்குப் பின்னே அழுதுகொண்டு அவருடைய பாதத்தின் அருகே நின்று, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால் நனைக்கத் தொடங்கினாள். அதன்பின், அவள் அவர் பாதங்களைத் தன் தலைமுடியினால் துடைத்து, அவற்றை முத்தம் இட்டு, வாசனைத் தைலத்தை அவருடைய பாதங்களில் பூசினாள்.
39அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடும் இவள் யார், இவள் எப்படிப்பட்ட பெண் என்பதை அறிந்திருப்பாரே. இவள் ஒரு பாவியல்லவா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
40இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
அவன், “போதகரே சொல்லும்” என்றான்.
41அப்போது அவர், “வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒருவனிடம், இரண்டு பேர் கடன் பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு தினாரி#7:41 ஐந்நூறு தினாரி – ஒரு தினாரி ஒரு நாளுக்குரிய சம்பளம் மத். 20:2 பணம் கொடுக்க வேண்டியிருந்தது. மற்றவன் ஐம்பது தினாரி பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 42இரண்டு பேரிடத்திலுமே திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே நீக்கிவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார்.
43அதற்கு சீமோன், “அதிக கடன் நீக்கப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான்.
இயேசு அவனிடம், “நீ சரியாக நிதானித்துச் சொன்னாய்” என்றார்.
44பின்பு அவர், அந்தப் பெண்ணின் பக்கமாகத் திரும்பி, சீமோனுக்குச் சொன்னதாவது: “நீ இந்தப் பெண்ணைப் பார்க்கின்றாய் அல்லவா? நான் உனது வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ, தன்னுடைய கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமுடியினால் அவற்றைத் துடைத்தாள். 45நீ என்னை முத்தம் இடவில்லை, ஆனால் இந்தப் பெண்னோ, நான் இங்கு உள்ளே வந்ததிலிருந்து, என் பாதங்களை ஓயாமல் முத்தம் இட்டாள். 46நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவளோ, என் பாதங்களில் வாசனைத் தைலத்தை ஊற்றினாள். 47எனவே நான் உனக்குச் சொல்கின்றேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அதனால் இவள் என்மீது அதிகமாய் அன்பு செலுத்துகிறாள். ஆனால் சிறிதளவாய் மன்னிப்பைப் பெற்றவன், சிறிதளவாகவே அன்பு காட்டுகிறான்” என்றார்.
48அதன்பின்பு இயேசு அவளிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
49அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கும் இவர் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
50இயேசு அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்துடனே போ” என்றார்.

Currently Selected:

லூக்கா 7: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in