YouVersion Logo
Search Icon

மத்தேயு 13

13
விதைப்பவனைப் பற்றிய உவமை
1அதே நாளில், இயேசு வீட்டை விட்டு வெளியே போய், கடலோரமாக#13:1 கடலோரமாக – கிரேக்க மொழியில் சில இடங்களில் கலிலேயாக் கடல் ஏரி என்றும் சொல்லப்படுகிறது. உட்கார்ந்திருந்தார். 2அப்போது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடி வந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள். 3அவர் அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகளாகச் சொன்னார்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். 4அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதை ஓரத்தில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. 5சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும், 6வெயில் அதிகமான போதோ, பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்து போயின. 7வேறு சில விதைகள் முட்செடிகளின் நடுவிலே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை மூடி நெருக்கிப் போட்டன. 8ஆனால் வேறு சில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. 9காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.
10அப்போது சீடர்கள் அவரிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலமாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.
11அவர் அதற்கு, “பரலோக அரசின் இரகசியங்களைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கோ, அது கொடுக்கப்படவில்லை. 12இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிரம்பி வழியுமளவுக்கு பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடமிருந்து அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலமாகப் பேசுகின்றேன்:
“ ‘அவர்கள் கண்டும் அதை அறியாதவர்களாகவும்
கேட்டும் அதை புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.’
14ஏசாயா கூறிய இறைவாக்கு அவர்களில் நிறைவேறுகிறது:
“ ‘நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்;
நீங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டீர்கள்.
15ஏனெனில் இந்த மக்களின் இருதயம் சுரணையற்றுப் போயிற்று;
அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கின்றார்கள்,
தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் கண்களால் பார்த்திருப்பார்கள்.
காதுகளால் கேட்டிருப்பார்கள்.
இருதயத்தால் அறிந்து உணர்ந்திருப்பார்கள்.
அவர்கள் என்னிடமாய் திரும்பியிருப்பார்கள். நான் அவர்களைக் குணமாக்கியிருப்பேன்.’#13:15 ஏசா. 6:9,10
16உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன. 17நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் நீங்கள் பார்ப்பதைக் காண ஆவலாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பதை அவர்கள் கேட்கவும் ஆவலாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
18“ஆகையால் இப்போது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: 19எவராவது இறைவனின் அரசைப் பற்றிய செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதையருகே விதைகள் விழுந்ததைக் குறிக்கும். 20கற்பாறையின் மீது விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ, வார்த்தையைக் கேட்டு, அதை உடனே மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள். 21ஆயினும் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டங்களும் துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாக விழுந்து போகின்றார்கள். 22முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கிறார்கள், ஆனாலும் உலக வாழ்வின் கவலைகளும் செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும் அவர்கள் கேட்ட அந்த வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. அதனால் அது பலனற்றுப் போகின்றது. 23விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ, வார்த்தையைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்கின்றவர்கள். இவர்கள் முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுக்கின்றார்கள்.”
களைகளைப் பற்றிய உவமை
24இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது. 25எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுச் சென்றான். 26கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்போது களைகளும் காணப்பட்டன.
27“வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28“அதற்கு அவன், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான்.
“வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.
29“அதற்கு அவன், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கி விடக் கூடும். 30அறுவடை வரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்போது நான் அறுவடை செய்கின்றவர்களிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதன்பின் கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்’ என்றான்.”
கடுகு விதையின் உவமை
31அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒரு மனிதன் தனது நிலத்தில் நட்ட கடுகு விதையைப் போன்றது. 32அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.
33அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, புளிப்பூட்டும் பதார்த்தத்திற்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் மிகவும் அதிகளவான#13:33 அதிகளவான என்பது மூன்றுபடி மாவு. ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் கலந்து வைத்தாள். அது மாவு முழுவதற்கும் புளிப்பூட்டியது” என்றார்.
34இயேசு இந்தக் காரியங்களையெல்லாம், கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை. 35இறைவாக்கினன் மூலமாகக் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின:
“நான் உவமைகளால் என் வாயைத் திறப்பேன்.
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”#13:35 சங். 78:2
களைகளைப் பற்றிய உவமையின் விளக்கம்
36அதன்பின் அவர், மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
37அவர் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மனுமகன். 38வயல் என்பது உலகம். நல்ல விதை, இறையரசின் பிள்ளைகள். களைகள், தீயவனின் பிள்ளைகள். 39அவற்றை விதைக்கிற பகைவன், பிசாசு. அறுவடை என்பது, உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள், இறைதூதர்கள்.
40“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுவது போல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். 41மனுமகன் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் போய் அவரது அரசில் இருக்கின்ற பாவத்திற்குக் காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கின்ற எல்லோரையும் ஒன்றுசேர்த்து, 42எரியும் சூளைக்குள் எறிந்து விடுவார்கள். அங்கே அழுகையும், வேதனையான பற்கடிப்பும் இருக்கும். 43அப்போது நீதிமான்களோ, தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப் போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
மறைந்திருக்கும் புதையல்
44“பரலோக அரசு, ஒருவன் ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலைக் கண்டுபிடித்து, அதைத் திரும்பவும் மறைத்து வைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது. எனவே அவன் போய் தனது மனமகிழ்ச்சியின் பொருட்டு, தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான்.
45“மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் சிறந்த முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கின்றது. 46பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
வலையின் உவமை
47“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லாவிதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. 48வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். மோசமானவற்றையோ எறிந்துவிட்டார்கள். 49இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைதூதர்கள் வந்து நீதிமான்களிலிருந்து தீமையானவர்களைப் பிரித்தெடுத்து, 50அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்து விடுவார்கள். அங்கே அழுகையும், வேதனையான பற்கடிப்பும் இருக்கும்.
51“இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக் கொண்டீர்களா?” என்று இயேசு கேட்டார்.
அவர்கள், “ஆம்” என பதிலளித்தார்கள்.
52“ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு நீதிச்சட்ட ஆசிரியனும், தனது களஞ்சிய அறையிலிருந்து, புதியவைகளையும் பழையவைகளையும் வெளியே கொண்டுவருகின்ற, ஒரு வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.
கனம் பெறாத இறைவாக்கினர்
53இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்த பின், அங்கிருந்து சென்றார். 54அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர்கள் வியப்புற்று, “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள். 55அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு,#13:55 யோசே எனப்பட்ட யோசேப்பு சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா? 56இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கின்றார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி, 57அவரை ஏற்றுக்கொள்ளாது எரிச்சலும் கோபமும் அடைந்தார்கள்.
அப்போது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினனுக்கு அவனது சொந்த ஊரிலும், அவனது சொந்த வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதிப்புக் கிடைக்கிறது” என்றார்.
58அவர்களுடைய விசுவாசக் குறைவின் காரணமாக, அவர் அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in