மத்தேயு 20
20
திராட்சைத் தோட்ட வேலையாட்கள் பற்றிய உவமை
1“பரலோக அரசு, தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கென கூலியாட்களை அமர்த்த, அதிகாலையிலே புறப்பட்டுச் சென்ற, நிலச்சொந்தக்காரன் ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது. 2அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக ஒரு தினாரி#20:2 ஒரு தினாரி என்பது கூலியாளின் ஒரு நாள் சம்பளம். பணம் கொடுப்பதற்கு இணங்கி, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான்.
3“விடிந்த பின்பு, சுமார் காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறு சிலர் சந்தை கூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான். 4அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான். 5அப்படியே அவர்களும் போனார்கள்.
“அவன் திரும்பவும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் சுமார் மூன்று மணியளவிலும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்பு போலவே செய்தான். 6மாலை சுமார் ஐந்து மணியளவில் அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையுமின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதும் ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
7“அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள்.
“அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள்’ என்றான்.
8“மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களை அழைத்து, கடைசியாக வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுடைய கூலியைக் கொடு’ என்றான்.
9“மாலை ஐந்து மணிக்குப் பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழுநாளுக்குரிய ஒரு தினாரி பணத்தை கூலியாகப் பெற்றார்கள். 10எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலி கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களும், தலா ஒரு தினாரி பணத்தையே நாள் கூலியாகப் பெற்றார்கள். 11அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். 12அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார்கள். நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; அப்படியிருக்க நீர் அவர்களை எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள்.
13“அவனோ அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு தினாரி பணத்துக்கு வேலை செய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா? 14உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்தது போலவே, நான் கொடுக்க விரும்புகிறேன். 15எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கின்றேன் என்பதற்காக நீ பொறாமை அடையலாமா?’ என்றான்.
16“அப்படியே கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
இயேசு தமது மரணத்தைத் திரும்பவும் முன்னறிவித்தல்
17இயேசு எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக்கொண்டு போய், அவர்களுக்குச் சொன்னதாவது: 18“இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் தலைமை மதகுருக்களிடத்திலும், நீதிச்சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை மரணதண்டனைக்கு உட்படுத்துவார்கள். 19அவரை ஏளனம் செய்து சாட்டையினால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, அவரை யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆயினும் அவர் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்திருப்பார்.”
ஒரு தாயின் வேண்டுகோள்
20அப்போது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய், இயேசுவிடம் தனது மகன்களை அழைத்துக்கொண்டு வந்து, முழந்தாழிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள்.
21அவர் அவளிடம், “நீ விரும்புவது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்க வேண்டும்”#20:21 ஒரு அரசனின் வலது பக்க, இடது பக்க ஆசனங்கள் அரசனுக்கு அடுத்த முக்கியமானவர்களுக்கு கொடுக்கப்படுவது வழமை. என்றாள்.
22இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கவிருக்கும் கிண்ணத்திலிருந்து#20:22 கிண்ணத்திலிருந்து என்பது வேதனையான அனுபவத்தைக் குறிக்கிறது நீங்களும் குடிக்க முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள்.
23அப்போது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது கிண்ணத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனாலும் எனது வலது பக்கத்தில் உட்காருவதையோ, இடது பக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
24இதைக் கேட்ட மற்ற பத்துப் பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள். 25இயேசு அவர்கள் அனைவரையும் தம்மிடமாய் அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26ஆனால் நீங்களோ அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்க வேண்டும்; 27முதன்மையாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும். 28அப்படியே, மனுமகனும் மற்றவர்களிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், அநேகரை மீட்கும் கட்டணமாகத்#20:28 மீட்கும் கட்டணமாக – கிரேக்க மொழியில் ஒரு போர்க் கைதியை அல்லது அடிமையை விடுதலை செய்ய செலுத்தும் கட்டணம் தனது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.
கண் பார்வையற்ற இருவர் பார்வை பெறுதல்
29இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகையில், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். 30அந்த வீதியின் அருகே பார்வையற்ற இருவர் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாய் போகின்றார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஆண்டவரே, தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமிட்டார்கள்.
31மக்கள் கூட்டத்தினரோ அவர்களை அதட்டி அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவர்களோ, “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.
32நடந்து சென்று கொண்டிருந்த இயேசு நின்று, அவர்களை அழைத்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்து விடும்” என்றார்கள்.
34இயேசு அவர்கள்மீது அனுதாபங்கொண்டு, அவர்களுடைய கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
Currently Selected:
மத்தேயு 20: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.