YouVersion Logo
Search Icon

மத்தேயு 21

21
எருசலேமுக்குள் இயேசுவின் ஊர்வலம்
1அவர்கள் எருசலேமை நெருங்கிச் சேர்ந்தபோது, ஒலிவமலைக்கு அருகிலுள்ள பெத்பகே ஊருக்கு வந்தார்கள். அப்போது இயேசு, சீடர்களில் இருவரை அனுப்பிச் சொன்னதாவது: 2“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். போனவுடன் ஒரு கழுதையும், அதனுடன் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள். 3யாராவது உங்களுக்கு ஏதாவது சொன்னால், நீங்கள் அவனிடம், ‘இவை ஆண்டவருக்கு தேவைப்படுகின்றன’ என்று சொல்லுங்கள். அவன் அவற்றை உடனே அனுப்பி விடுவான்” என்றார்.
4இறைவாக்கினன் மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி இது நடைபெற்றது:
5“சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்:
உன் அரசர் உன்னிடம் வருகின்றார்,
தாழ்மையுள்ள அவர் கழுதையின் மேலும்,
கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் அமர்ந்து வருகின்றார்.”#21:5 சக. 9:9
6சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு சொல்லியிருந்தபடியே செய்தார்கள். 7அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்து, அதன்மீது தங்கள் மேலாடைகளைப் போட்டதும், இயேசு ஏறி உட்கார்ந்தார். 8ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினர், வீதியில் தங்களது மேலாடைகளை விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வீதியில் பரப்பினார்கள். 9அவருக்கு முன்னாலும், பின்னாலும் சென்ற மக்கள் கூட்டத்தினர்:
“தாவீதின் மகனுக்கு ஓசன்னா!”#21:9 சங். 118:25,26
“கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“உன்னதத்தில் ஓசன்னா!”
என்று சத்தமிட்டார்கள்.
10இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள்.
11அதற்கு மக்கள் கூட்டத்தினர், “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்த இறைவாக்கினர்” எனப் பதிலளித்தார்கள்.
ஆலயத்தில் இயேசு
12இயேசு ஆலய வளாகத்துக்குள் சென்று, அங்கே விற்றுக் கொண்டும், வாங்கிக் கொண்டும் இருந்த எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயமாற்று செய்வோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். 13இயேசு அவர்களிடம், “எனது வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது.#21:13 ஏசா. 56:7 ஆனால் நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்”#21:13 எரே. 7:11 என்றார்.
14பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் ஆலயத்தில் இருந்த அவரிடம் வந்தார்கள். அவர் அவர்களைக் குணமாக்கினார். 15அவர் செய்த இந்த ஆச்சரியமான காரியங்களையும், சிறு பிள்ளைகள் ஆலய வளாகத்துக்குள் இருந்து, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று ஆரவாரம் செய்வதையும் தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து,
16“இந்தப் பிள்ளைகள் சொல்வது உமக்குக் கேட்கின்றதா?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.
இயேசு அதற்கு பதிலாக, “ஆம்,
“ ‘சிறு பிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்’#21:16 சங். 8:2
என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார்.
17அதன்பின் அவர் அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து வெளியேறி பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவைக் கழித்தார்.
பட்டுப்போன அத்தி மரம்
18மறுநாள் அதிகாலையில், அவர் பட்டணத்திற்குத் திரும்பி வருகையில் பசியாயிருந்தார். 19வீதி அருகே ஒரு அத்தி மரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்போது அவர், “நீ இனி ஒருபோதும் பழம் கொடாதிருப்பாயாக!” என்று அதற்குச் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப் போயிற்று.
20சீடர்கள் இதைக் கண்டு வியப்படைந்து, “இவ்வளவு சீக்கிரம் இந்த அத்தி மரம் எப்படி பட்டுப் போயிற்று?” என்று கேட்டார்கள்.
21இயேசு அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்தி மரத்துக்குச் செய்யப்பட்டது போல உங்களாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய் கடலிலே விழு’ என்று சொன்னால், அதுவும் அப்படியே நடக்கும். 22நீங்கள் விசுவாசித்தால், மன்றாடுதலில் எவற்றைக் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார்.
இயேசுவின் அதிகாரத்தைக் குறித்த கேள்வி
23இயேசு ஆலய முற்றத்திற்குள் சென்று அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அப்போது தலைமை மதகுருக்களும் சமூகத் தலைவர்களும் அவரிடம் வந்து அவரிடம், “எந்த அதிகாரத்தைக்கொண்டு, நீர் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள்.
24அதற்கு இயேசு, “நானும் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கின்றேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தைக்கொண்டு நான் இவற்றைச் செய்கின்றேன் என்று உங்களுக்குச் சொல்வேன்” என்றார். 25“யோவானின் ஞானஸ்நானம் எங்கிருந்து வந்தது? அது பரலோகத்திலிருந்தா அல்லது மனிதரிடமிருந்தா?” என்று கேட்டார்.
அவர்கள் இதைக் குறித்துத் தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள்: “அது பரலோகத்திலிருந்து வந்தது” என்று நாம் சொன்னால், பின் ஏன் நீங்கள் யோவானை விசுவாசிக்கவில்லை? என்று கேட்பார். 26“மனிதரிடமிருந்து” என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது. ஏனெனில் இந்த பாமர மக்கள் எல்லோரும் யோவானை ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொள்கின்றார்கள்.
27எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு இயேசு, “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
இரண்டு மகன்களின் உவமை
28பின்பு இயேசு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனிடம், ‘மகனே, நீ போய் இன்று திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்’ என்றான்.
29“அவனோ, ‘நான் போக மாட்டேன்’ என்றான், ஆயினும் பின்பு மனம் வருந்தி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு வேலை செய்யச் சென்றான்.
30“பின்பு அந்த தகப்பன் தனது மற்ற மகனிடம் போய், அதேவிதமாகச் சொன்னான். அதற்கு அவன், ‘அப்பா, நான் போகின்றேன்’ என்றான், ஆனாலும் அவன் போகவில்லை.
31“இவர்கள் இருவரில், யார் தகப்பன் விரும்பியதைச் செய்தவன்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “மூத்த மகனே” என்று பதிலளித்தார்கள்.
அப்போது இயேசு அவர்களிடம், “ஆம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், வரி சேகரிப்பவர்களும் விலைமாதர்களும் உங்களுக்கு முன்னதாகவே இறைவனின் அரசிற்குள் போகின்றார்கள். 32ஏனெனில் நீதியின் வழியை உங்களுக்குக் காட்டுவதற்கு, யோவான் உங்களிடம் வந்தான். நீங்கள் அவனை நம்பவில்லை. ஆனால் வரி சேகரிப்பவர்களும் விலைமாதர்களுமோ அவனை நம்பினார்கள். அதைக் கண்ட பின்பும்கூட, நீங்கள் மனம் வருந்தி உங்கள் எண்ணத்தை மாற்றி அவனை நம்பவில்லை.
குத்தகைக்காரர்களின் உவமை
33“மேலும் ஒரு உவமையைக் கேளுங்கள்: நிலச்சொந்தக்காரன் ஒருவன், ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, பழங்களைப் பிழியும் தொட்டியையும், ஒரு காவற் கோபுரத்தையும் கட்டினான். பின்பு அவன், அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டான். 34அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் தனது வேலைக்காரரை குத்தகைக்காரரிடம் அனுப்பினான்.
35“குத்தகைக்காரர்களோ அவனுடைய வேலையாட்களைப் பிடித்து, ஒருவனை அடித்து, இன்னொருவனைக் கொலை செய்து, மற்றவனைக் கல்லால் எறிந்தார்கள். 36பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பியவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, இவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள். 37‘அவர்கள் என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனையும் அவர்களிடம் அனுப்பினான்.
38“ஆனால் குத்தகைக்காரர்களோ, மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு வாரிசு. வாருங்கள், இவனைக் கொலை செய்து, இவனுடைய உரிமைச் சொத்தை நாம் எடுத்துக்கொள்வோம்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். 39அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலை செய்தார்கள்.
40“ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் வரும்போது, அந்த குத்தகைக்காரர்களை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார்.
41அதற்கு அவர்கள், “அவன் அந்தக் கொடியவர்களுக்கு, அதேவித கொடுமையான மரணதண்டனை கொடுத்து, அறுவடையின்போது தனக்குரிய விளைச்சலின் பங்கை ஒழுங்காகக் கொடுக்கக் கூடிய, வேறு குத்தகைக்காரருக்கு தனது திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள்.
42இயேசு அவர்களிடம்,
“ ‘கட்டடம் கட்டுகிறவர்கள் வேண்டாம் என்று நிராகரித்த
கல்லே கட்டடத்தின் மிக முக்கியமான கல்#21:42 முக்கியமான கல் – கிரேக்க மொழியில் மூலைக்குத் தலைக்கல் என்றுள்ளது. ஆயிற்று;
கர்த்தரே இதைச் செய்தார்.
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது’#21:42 சங். 118:22,23
என்பதை நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?
43“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அதற்கேற்ற பலன்களைத் தரும் மக்களுக்குக் கொடுக்கப்படும். 44இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் துண்டுதுண்டாக நொருங்கிப் போவான். இந்தக் கல் எவன் மேலாவது விழுந்தால், அது அவனை நசுக்கி விடும்” என்றார்.
45தலைமை மதகுருக்களும், பரிசேயரும் இயேசுவின் உவமைகளைக் கேட்டபோது, அவர் தங்களைக் குறித்தே பேசுகின்றார் என்று அறிந்துகொண்டார்கள். 46எனவே, அவர்கள் அவரைக் கைது செய்ய வழி தேடினார்கள். ஆனாலும் பொதுமக்கள் அவரை ஒரு இறைவாக்கினர் என்று எண்ணியிருந்தபடியால், அப்படிச் செய்ய பயந்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in