YouVersion Logo
Search Icon

மாற்கு 7

7
சுத்தமும் அசுத்தமும்
1ஒரு நாள் எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியரில் சிலரும் இயேசுவைச் சுற்றி கூடி நின்றார்கள். 2இயேசுவின் சீடர்களில் சிலர் கைகழுவாமல் அசுத்தமான கைகளினால் உணவு உண்பதை அவர்கள் கண்டார்கள். 3பரிசேயரும், யூதர் அனைவரும் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி கைகளைக் கழுவினாலன்றி உணவு உண்ண மாட்டார்கள். 4சந்தை கூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவிக்கொள்ளாமல் அவர்கள் உணவு உண்பதில்லை. அதைவிட செம்புகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக சம்பிரதாய முறைகளையும் கைக்கொண்டார்கள்.
5எனவே பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி நடந்துகொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் அசுத்தமான கைகளினால் உணவு உண்கிறார்களே” என்றார்கள்.
6அதற்கு அவர், “வெளிவேடக்காரராகிய உங்களைக் குறித்து ஏசாயா சரியாகத்தான் இறைவாக்கு உரைத்திருக்கிறார். அதென்னவெனில்:
“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்.
ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.
7அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கின்றார்கள்;
அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’#7:7 ஏசா. 29:13
என்பதாக எழுதப்பட்டுள்ளது.
8நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதரின் சம்பிரதாய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
9மேலும், அவர் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சம்பிரதாய முறைகளைக் கைக்கொள்வதற்காக#7:9 கைக்கொள்வதற்காக – சில மொழிபெயர்ப்பில், நிலைநாட்ட என்றுள்ளது இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் திறமைசாலிகள். 10ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்றும்,#7:10 யாத். 20:12; உபா. 5:16 ‘தனது தகப்பனையாவது தாயையாவது சபிக்கிறவன் கொல்லப்பட வேண்டும்’#7:10 யாத். 21:17; லேவி. 20:9 என்றும் சொல்லியிருக்கின்றார். 11ஆனால் நீங்களோ ஒருவன் தன் தகப்பனையோ தாயையோ பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய உதவியை இறைவனுக்கு காணிக்கையாக#7:11 காணிக்கையாக – கிரேக்க மொழியில் கொர்பான் என்றுள்ளது. அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள். 12அதன் பிறகு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எதையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. 13இவ்விதமாய் நீங்கள் கைக்கொண்டுவரும் சம்பிரதாய முறையினால் இறைவனுடைய வார்த்தையை செல்லுபடியற்றதாக்குகிறீர்கள். அத்துடன் நீங்கள் இதுபோன்று வேறு அநேக காரியங்களையும் செய்கின்றீர்கள்” என்றார்.
14மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் கவனித்துக் கேட்டு, நான் சொல்வதை விளங்கிக்கொள்ளுங்கள். 15மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும் அவனுக்குள்ளே போவதனால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால் மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகின்றவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன. 16காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார்.#7:16 சில மூலப் பிரதிகளில் இந்த வசனம் காணப்படுவதில்லை. 4:23.
17பின்பு மக்கள் கூட்டத்தைவிட்டு அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அவருடைய சீடர்கள், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடம் கேட்டார்கள். 18அவர் அவர்களிடம், “நீங்களும் புரிந்துகொள்வதில் மந்தமானவர்களா? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகின்றவை அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? 19ஏனெனில் அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல் அவனுடைய வயிற்றுக்குள் போய் அவனது உடலைவிட்டு வெளியேறி விடுகிறது அல்லவா?” என்றார். (இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களுமே தீட்டற்றவை என்று அறிவித்தார்.)
20அவர் தொடர்ந்து: “ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியே வருவதே அவனை அசுத்தப்படுத்தும். 21ஏனெனில், மனிதருடைய இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், முறைகேடான பாலுறவு, களவு, கொலை, 22தகாத உறவு, பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்றவை வருகின்றன. 23தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதனை அசுத்தப்படுத்துகின்றன” என்றார்.
சீரோபேனிக்கியாப் பெண்ணின் விசுவாசம்
24இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப்புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆயினும், அவரால் மறைவாய் இருக்க முடியவில்லை. 25அவரைக் குறித்து கேள்விப்பட்ட ஒரு பெண் உடனே அவரிடம் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது சிறிய மகளை ஒரு தீய ஆவி பிடித்திருந்தது. 26சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த கிரேக்கப் பெண் தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பேயைத் துரத்திவிடும்படி, இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள்.
27அவர் அவளிடம், “முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார்.
28அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆயினும் மேசையின் கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத் துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள்.
29அப்போது அவர் அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பேய் உன் மகளைவிட்டுச் சென்றுவிட்டது” என்றார்.
30அப்படியே அவள் வீட்டிற்குப் போய் தனது பிள்ளை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். அந்தப் பேய் அவளைவிட்டுப் போயிருந்தது.
செவிப் புலனற்றவனும் வாய் பேச இயலாதவனுமான ஒரு மனிதன் குணமடைதல்
31அதற்குப் பின்பு இயேசு, தீருவின் சுற்றுப்புறத்தைவிட்டுப் புறப்பட்டு சீதோன் வழியாகப் போய் தெக்கப்போலி#7:31 தெக்கப்போலி அதாவது, பத்து பட்டணங்கள் பிரதேசத்திலுள்ள கலிலேயாக் கடல் பகுதியை அடைந்தார். 32அங்கே காது கேளாதவனும் பேச்சுக் குறைபாடு உள்ளவனுமாயிருந்த ஒருவனை சிலர் அவரிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவன்மீது இயேசு தமது கைகளை வைக்க வேண்டுமென்று அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
33அப்போது அவர் மக்கள் கூட்டத்திலிருந்து அவனைத் தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துப் போய், அவனுடைய காதுகளுக்குள் தமது விரல்களை வைத்தார். பின்பு அவர் துப்பி அவனது நாவைத் தொட்டார். 34அவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் வானத்தை நோக்கிப் பார்த்து, “எப்பத்தா!” என்றார். அதன் அர்த்தம் “திறக்கப்படுவாயாக” என்பதாகும். 35உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாகப் பேசத் தொடங்கினான்.
36இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர் சொல்ல வேண்டாம் என்று எவ்வளவு அதிகமாய்ச் சொன்னாரோ, அவ்வளவு அதிகமாய் அந்தச் செய்தியை அவர்கள் பரப்பினார்கள். 37மக்களோ வியப்படைந்து மலைத்துப் போனவர்களாக, “அவர் எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார். அவர் செவிப்புலனற்றவர்களைக் கேட்கவும், பேச முடியாதவர்களைப் பேசவும் வைக்கிறாரே” என்றார்கள்.

Currently Selected:

மாற்கு 7: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in