யோவா 5
5
அத்தியாயம் 5
பெதஸ்தா குளத்தில் சுகமாக்குதல்
1இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. 3அவைகளிலே குருடர்கள், முடவர்கள், வாதநோய் உள்ளவர்கள் முதலான வியாதி உள்ளவர்கள் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான். 5முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். 6படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். 8இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. 10ஆதலால் யூதர்கள் சுகமாக்கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வுநாளாக இருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான். 12அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். 14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார். 15அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
குமாரன் மூலமாக நித்தியஜீவன்
16இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்திக் கொலைசெய்ய வகைதேடினார்கள். 17இயேசு அவர்களைப் பார்த்து: என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன் என்றார். 18அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதும் அல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றும் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாக வகைதேடினார்கள். 19அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் பார்க்கிறது எதுவோ, அதையே அன்றி, வேறு ஒன்றையும் தாமாக செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். 20பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாக இருந்து, தாம் செய்கிறவைகளை எல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைவிட பெரிதான செயல்களையும் அவருக்குக் காண்பிப்பார். 21பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்கு விருப்பமானவர்களை உயிர்ப்பிக்கிறார். 22அன்றியும் பிதாவைக் மதிப்பதுபோல எல்லோரும் குமாரனையும் மதிக்கும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவரையும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 23குமாரனைக் மதிக்காதவன் அவரை அனுப்பின பிதாவையும் மதிக்காதவனாக இருக்கிறான். 24என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 26ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார். 27அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்; 29அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். 30நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது.
இயேசுவைக்குறித்த சாட்சிகள்
31 என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி உண்மையாக இருக்காது. 32என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி உண்மையான சாட்சி என்று அறிந்திருக்கிறேன். 33நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான். 34நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனிதர்களுடைய சாட்சி இல்லை, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள். 36யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 37என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை. 38அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை. 39வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. 41நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை. 42உங்களில் தேவஅன்பு இல்லை என்று உங்களை அறிந்திருக்கிறேன். 43நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். 44தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? 45பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினைக்காதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். 46நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. 47அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
S'ha seleccionat:
யோவா 5: IRVTam
Subratllat
Comparteix
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.