லூக் 22

22
அத்தியாயம் 22
யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்ளுதல்
1பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று. 2அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள். 3அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான். 5அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். 6அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
இறுதி கர்த்தருடைய பந்தி
7பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. 8அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார். 9அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். 10அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், 11அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். 12அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 13அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 14நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள். 15அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். 16தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 17அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; 18தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். 20போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார். 21பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. 22தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார். 23அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். 24அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. 25அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். 26உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். 27பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். 28மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. 29ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். 30நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார். 31பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். 32நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். 33அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். 34அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். 36அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். 37அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். 38அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
ஒலிவமலையில் இயேசுவின் ஜெபம்
39பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள். 40அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி, 41அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 42பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். 43அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான். 44அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது. 45அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு: 46நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
இயேசு கைதுசெய்யப்படுதல்
47அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான். 48இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். 49அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். 50அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான். 51அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார். 52பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. 53நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார்.
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
54அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான். 55அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். 56அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள். 57அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான். 58சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான். 59ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். 60அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது. 61அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து, 62வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
காவலாளிகள் இயேசுவைக் கேலிசெய்தல்
63இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து, 64அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, 65மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
இயேசு விசாரிக்கப்படுதல்
66விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: 67நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். 68நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள். 69இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார். 70அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். 71அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

S'ha seleccionat:

லூக் 22: IRVTam

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió