Logo YouVersion
Ikona vyhledávání

மத்தேயு 16

16
அடையாளம் கேட்டல்
1பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து#16:1 வானத்திலிருந்து – கிரேக்க மொழியில் பரலோகம் மற்றும் வானம் இவ்விரண்டிற்கும் ஒரே வார்த்தையாகும் தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தார்கள்.
2அவர் அதற்கு பதிலாக, “மாலை வேளையாகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘வானிலை நன்றாக இருக்கும்’ என்று சொல்கின்றீர்கள். 3காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல் காற்று வீசும்’ என்று சொல்கின்றீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்குத் தெரிகிறது, ஆனால் காலங்களின் அடையாளங்களைப் புரிந்துகொள்ள உங்களால் முடியவில்லையே. 4கொடுமையும் இறை துரோகமும்#16:4 இறை துரோகமும் – கிரேக்க மொழியில். தகாத உறவு. இது இறைவனுக்கு துரோகம் செய்வதைக் குறிக்கும். நிறைந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கின்றார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்று சொன்னார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தம்
5அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள். 6இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார்.
7அப்போது அவர்கள், “இது நாம் அப்பம் கொண்டுவராதபடியினால்தான்” என்று அர்த்தப்படுத்தி தங்களுக்குள்ளே கலந்தாலோசிக்க ஆரம்பித்தார்கள்.
8அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசியதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, உணவு இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகின்றீர்கள். 9நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மிகுதியை எத்தனை கூடைகள் நிறைய சேர்த்தீர்கள் என்று நினைவில்லையா? 10அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மிகுதியை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள் என்பது நினைவில்லையா? 11இப்படியிருக்க நான் உணவைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை, நீங்கள் விளங்கிக்கொள்ளாமல் போனது எப்படி? பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்தே விழிப்பாயிருங்கள்” என்றார். 12அப்பத்திற்கு புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக் குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்போது விளங்கிக் கொண்டார்கள்.
பேதுருவின் அறிக்கை
13இயேசு செசரியா-பிலிப்பு பிரதேசத்துக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மனுமகனை, யார் என்று மக்கள் சொல்கின்றார்கள்?” என்று கேட்டார்.
14அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்றும் சொல்கின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.
15அப்போது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
16அதற்கு சீமோன் பேதுரு, “நீர் மேசியா, உயிருள்ள இறைவனின் மகன்” என்றான்.
17அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால்#16:17 மனிதனால் – கிரேக்க மொழியில், மாம்சமும் இரத்தமும் என்றுள்ளது வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கின்ற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. 18நான் உனக்குச் சொல்கின்றேன்: நீ பேதுரு,#16:18 கிரேக்க மொழியில், பேதுரு என்ற சொல்லும், பாறையைக் குறிக்கும் சொல்லும் ஒரே உச்சரிப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பாறையின் மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள மாட்டாது. 19நான் உனக்கு பரலோக அரசின் சாவிகளைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார். 20அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களிடம், தான் மேசியா என்பதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என கடுமையாகக் கட்டளையிட்டார்.
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
21அந்த வேளையிலிருந்து, இயேசு தமது சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போக வேண்டும் என்றும், சமூகத் தலைவர்களாலும் தலைமை மதகுருக்களாலும் நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.
22அப்போது பேதுரு, அவரை தனியே அழைத்துக்கொண்டு போய், “ஆண்டவரே, இது உமக்கு நேரிட இறைவன் அனுமதியாமல் இருப்பாராக!#16:22 கிரேக்க மொழியில், இறைவன் உமக்கு இரக்கம் செய்வாராக என்றுள்ளது. இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
23ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “எனக்குப் பின்னால் போ சாத்தானே! நீ எனக்கு இடறல் ஏற்படுத்தும் தடையாய் இருக்கின்றாய்; நீ இறைவனுக்கு ஏற்றவிதமாய் சிந்திக்காமல், மனிதனுக்கு ஏற்றவிதமாய் சிந்திக்கிறாய்” என்றார்.
24இதன்பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “எவனாவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தனது சிலுவையை எடுத்துக்கொண்டு,#16:24 சிலுவையை எடுத்துக்கொண்டு – கிரேக்க மொழியில் சிலுவையை சுமந்து என்றுள்ளது. இது ரோம மரணதண்டனை முறை. இதன் அர்த்தம், மரணத்தையும் துன்பத்தையும் அனுபவிக்க சீடர்கள் தயாராக வேண்டும் என்பதாகும். என்னைப் பின்பற்ற வேண்டும். 25தனது உயிரை#16:25 இந்த கிரேக்க சொல்லுக்கு உயிரை என்றும், ஆத்துமா என்றும் இரு அர்த்தங்கள் உண்டு. தனக்கென்று காத்துக்கொள்கின்றவன், அதை இழந்து போவான். ஆனால் தனது உயிரை எனக்காக இழக்கிறவன், அதைக் காத்துக்கொள்வான். 26ஏனெனில், ஒருவன் உலகம் முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டாலும், தனது ஆத்துமாவை இழந்து போனால், அதனால் அவனுக்குப் பலன் என்ன? அல்லது ஒருவன் தனது ஆத்துமாவுக்கு மாற்றீடாக எதைக் கொடுக்கலாம்? 27ஆகவே மனுமகன் தமது தூதர்களுடன் தமது பிதாவின் மகிமையில் வரும்போது, ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதி கொடுப்பார்.
28“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுமகன் தமது அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.

Zvýraznění

Sdílet

Kopírovat

None

Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas