யோவா 11

11
அத்தியாயம் 11
லாசருவின் மரணம்
1மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான். 2கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான். 3அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். 4இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். 5இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார். 6அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார். 7அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார். 8அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள். 9இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான். 10ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார். 11இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார். 12அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள். 14அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி; 15நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
இயேசு லாசருவின் சகோதரிகளை ஆறுதல்படுத்துதல்
17இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார். 18பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. 19யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். 20இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள். 21மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். 22இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். 25இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 28இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். 29அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள். 30இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். 31அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள். 32இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள். 33அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: 34அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35இயேசு கண்ணீர் விட்டார். 36அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள். 37அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல்
38அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள். 40இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். 41அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 42நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார். 43இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார். 44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
இயேசுவைக் கொல்ல சதித்திட்டம்
45அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 46அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். 47அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். 49அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது; 50மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான். 51இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும், 52அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான். 53அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள். 54ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார். 55யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். 56அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 57பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

Valgt i Øjeblikket:

யோவா 11: IRVTam

Markering

Del

Kopiér

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind