ஆதியாகமம் 17

17
17 அதிகாரம்
1ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
2நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
3அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:
4நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
5இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
6உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
7உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
8நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
9பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
10எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.
11உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
12உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.
13உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
14நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
15பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
16நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
17அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
18இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான்.
19அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
20இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
21வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.
22தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.
23அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.
24ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
25அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
26ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
27வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

Markering

Del

Kopiér

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind