லூக்கா 13

13
மனந்திரும்பாவிட்டால் அழிவு
1அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் இயேசுவிடம், கலிலேயர் சிலரைப் பிலாத்து கொலை செய்து, அவர்களுடைய இரத்தத்தை, அவர்கள் செலுத்திய பலிகளுடனே கலந்துவிட்ட செயலைப் பற்றிச் சொன்னார்கள். 2அதற்கு இயேசு, “அந்த கலிலேயருக்கு இவை நேர்ந்ததால், அவர்கள் மற்றெல்லா கலிலேயரைப் பார்க்கிலும் மோசமான பாவிகளாய் இருந்தார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? 3இல்லை! நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் எல்லோரும் மனந்திரும்பாவிட்டால், நீங்களும்கூட அழிந்தே போவீர்கள். 4சீலோவாமில் கோபுரம் விழுந்தபோது, அதில் பதினெட்டுப் பேர் இறந்தார்களே! எருசலேமில் வாழ்கின்ற மற்றெல்லோரையும்விட அவர்கள் அதிக குற்றவாளிகள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? 5அப்படியல்ல! நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் எல்லோரும் மனந்திரும்பாவிட்டால், நீங்களும் அழிந்து போவீர்கள்” என்றார்.
6அதன்பின்பு அவர் அவர்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தனது திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்தி மரத்தை நட்டு வைத்திருந்தான். அவன் அதிலே பழத்தைத் தேடிப் போனபோது, அதில் பழம் எதுவும் காணப்படவில்லை. 7எனவே அவன், அந்த திராட்சைத் தோட்டத்தின் பராமரிப்பாளனிடம், ‘நான் மூன்று வருடங்களாக இந்த அத்தி மரத்தில் பழங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். ஆயினும் இந்த மரத்தில் பழம் எதையுமே நான் காணவில்லை. இதை வெட்டிப் போடு. இது ஏன் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான்.
8“அதற்கு அந்த மனிதன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதை விட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். 9அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் அதை வெட்டிப் போடும்’ என்றான்.”
ஊனமுற்றிருந்த பெண் குணமடைதல்
10ஒரு சபத் ஓய்வுநாளிலே இயேசு ஜெபஆலயம் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார். 11அங்கே பதினெட்டு வருடமாய் பலவீனப்படுத்தும் ஒரு தீய ஆவி பிடித்திருந்ததால், ஊனமுற்றிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் முற்றிலும் நிமிர முடியாத அளவுக்கு கூனிப் போய் இருந்தாள். 12இயேசு அவளைக் கண்டபோது, அவளை முன்னே வரும்படி அழைத்து, “பெண்மணியே, உன் பலவீனத்திலிருந்து நீ விடுதலையாக்கப்பட்டாய்” என்றார். 13பின்பு அவர், அவள் மீது தன் கையை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்று இறைவனைத் துதித்தாள்.
14சபத் ஓய்வுநாளில் இயேசு குணமாக்கியபடியால், அங்கிருந்த ஜெபஆலயத் தலைவன் கடும் கோபமடைந்து அங்கிருந்த மக்களிடம், “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் இருக்கின்றதே. அந்த நாட்களிலே வந்து குணமடையுங்கள். சபத் ஓய்வுநாளில் அப்படிச் செய்ய வேண்டாம்” என்றான்.
15அதற்கு ஆண்டவர் அவனிடம், “வெளிவேடக்காரர்களே! ஓய்வுநாளிலே நீங்கள் ஒவ்வொருவரும், அவனவன் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்து, தண்ணீர் காட்டுவதற்குக் கொண்டுபோவதில்லையா? 16ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை, சாத்தான் இப்படியாக பதினெட்டு வருட காலமாய் கட்டி வைத்திருக்கிறானே! எனவே அவள் ஓய்வுநாளிலே, அவளுடைய கட்டிலிருந்து விடுதலை பெறக் கூடாதோ?” என்றார்.
17அவர் இதைச் சொன்னபோது, அவருடைய எதிரிகள் எல்லோரும் வெட்கத்துக்குள்ளானார்கள். ஆனால் மக்களோ, அவர் செய்த அதிசயமான காரியங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
கடுகு விதை
18பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப் போல் இருக்கின்றது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 19அது, ஒரு மனிதன் தனது தோட்டத்தில் நட்ட ஒரு கடுகு விதைக்கு ஒப்பாய் இருக்கின்றது. அது வளர்ந்து ஒரு மரமாகி, ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கின” என்றார்.
20மேலும் அவர், “இறைவனுடைய அரசை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21ஒரு பெண் மிகவும் அதிகளவான மாவிலே#13:21 அதிகளவான மாவிலே என்பது மூன்றுபடி மாவு, ஏறக்குறைய 27 கிலோ. புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும் வரை வைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது” என்றார்.
ஒடுக்கமான கதவு
22பின்பு இயேசு தாம் எருசலேமுக்குப் போகும் வழியிலே, அங்குள்ள பட்டணங்களிலும் கிராமங்களிலும் போதித்துக் கொண்டே சென்றார். 23அப்போது ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, ஒரு சிலர் மட்டும்தான் இரட்சிக்கப்படுவார்களோ?” என்று கேட்டான்.
அவர் அவர்களிடம், 24“ஒடுக்கமான கதவின் வழியாக உட்செல்வதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அநேகர் அதற்குள் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் முடியாதிருக்கும். 25வீட்டுச் சொந்தக்காரன் எழுந்து கதவை மூடிய பின், நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டி, ‘ஐயா எங்களுக்குக் கதவைத் திறவுங்கள்’ என்று கெஞ்சுவீர்கள்.
“ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கேயிருந்து வருகின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியாது’ என்று சொல்வார்.
26“அப்போது நீங்கள் அவரைப் பார்த்து, ‘நாங்கள் உம்முடன் உணவுண்டு குடித்தோமே. நீர் எங்களுடைய வீதிகளில் போதித்தீரே’ என்பீர்கள்.
27“ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. தீமை செய்கின்றவர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப் போங்கள்’ என்று பதிலளிப்பார்.
28“ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் எல்லா இறைவாக்கினரும் இறைவனுடைய அரசில் இருப்பதையும், நீங்கள் புறக்கணிக்கப்படுவதையும் காணும்போது, அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும். 29கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் மக்கள் வந்து, இறைவனுடைய அரசிலே நடைபெறும் விருந்து வைபவத்தில், அவரவர்களுக்குரிய இடங்களில் அமர்ந்துகொள்வார்கள். 30உண்மையாகவே, இப்போது கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
எருசலேமுக்கான இயேசுவின் அனுதாபம்
31அவ்வேளையில் சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்விடத்தை விட்டு வேறு எங்காவது போய்விடும். ஏனெனில், ஏரோது உம்மைக் கொலை செய்ய இருக்கின்றான்” என்றார்கள்.
32அதற்கு அவர் அவர்களிடம், “நான் இன்றும் நாளையும் பேய்களைத் துரத்தி, மக்களைக் குணமாக்குவேன். மூன்றாவது நாளிலே, நான் எனது பணியின் நோக்கத்தை செய்து முடிப்பேன் என அந்த நரிக்குப் போய் சொல்லுங்கள், 33ஆயினும் இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும், என் பயணத்தைத் தொடர்வேன். ஏனெனில், நிச்சயமாகவே இறைவாக்கினர் எவரும் எருசலேமுக்கு வெளியே மரணிக்க முடியாது.
34“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலை செய்து, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் மீது கல்லெறியும் பட்டணமே!#13:34 கல்லெறியும் பட்டணமே – கல்லெறிந்து கொல்வது என்பது இதன் பொருள். இது ஒருவித மரணதண்டனை. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் அணைத்து, சேர்த்துக்கொள்வது போல, நானும் எத்தனையோ முறை உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், நீயோ அதை விரும்பவில்லை. 35இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கின்றேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’#13:35 சங். 118:26 என்று நீ சொல்லும் வரைக்கும், இனிமேல் நீ என்னைக் காண மாட்டாய்” என்றார்.

Zur Zeit ausgewählt:

லூக்கா 13: TRV

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.