யோவான் 2

2
கானாவூர் திருமணம்
1இவை நடந்து மூன்றாவது நாளிலே, கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2இயேசுவும் அவருடைய சீடர்களும்கூட, அந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3விருந்தாளிகளுக்குப் பரிமாறப்படும் திராட்சை ரசம்#2:3 விருந்தாளிகளுக்குப் பரிமாறப்படும் திராட்சை ரசம் – கிரேக்க மொழியில் திராட்சை ரசம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது தீர்ந்து போனபோது இயேசுவின் தாய் அவரிடம், “திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது” என்று சொன்னாள்.
4அப்போது இயேசு, “அம்மணி, இதில் நான் தலையிடுவது அவசியமா? என் நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
5அவரது தாயோ வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு எதைச் சொல்கின்றாரோ, அதைச் செய்யுங்கள்” என்றாள்.
6அவ்விடத்தின் அருகில், தண்ணீர் சேகரித்து வைக்கும் ஆறு கற்சாடிகள் இருந்தன. இவ்விதமான கற்சாடிகளையே யூதர்கள் தமது சம்பிரதாய சுத்திகரிப்புக்காக உபயோகித்தார்கள். அந்த கற்சாடி#2:6 ஒரு கற்சாடி சுமார் 75 முதல் 115 லீட்டர் தண்ணீர் கொள்ளக் கூடியது ஒவ்வொன்றும் இருபது, முப்பது குடம்#2:6 இருபது, முப்பது குடம் – கிரேக்க மொழியில் இரண்டு அல்லது மூன்று அளவுகளிலான தண்ணீர் கொள்ளக் கூடியவை என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் கொள்ளக் கூடியவை.
7இயேசு வேலைக்காரரிடம், “அந்த கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்களும் அவை நிரம்பி வழியும் அளவிற்கு நிரப்பினார்கள்.
8அப்போது அவர் அவர்களிடம், “இதிலிருந்து அள்ளி, விருந்தின் மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்” என்றார்.
அவர்கள் அப்படியே செய்தார்கள். 9விருந்தின் மேற்பார்வையாளன், திராட்சை ரசமாய் மாறியிருந்த அந்தத் தண்ணீரைச் சுவைத்துப் பார்த்தான். அது எங்கேயிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியாது; ஆயினும் தண்ணீரை நிரப்பிய வேலைக்காரருக்கே அது தெரிந்திருந்தது. அப்போது விருந்தின் மேற்பார்வையாளன், மணமகனை ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று, 10அவனிடம், “எல்லோரும் சிறந்த திராட்சை ரசத்தையே முதலில் கொடுப்பார்கள். விருந்தாளிகள் தாராளமாகக் குடித்த பின்பு மலிவான ரசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் நீரோ, சிறந்த ரசத்தை இவ்வளவு நேரமாய் பரிமாறாமல் வைத்திருந்தீரே!” என்றான்.
11இயேசு செய்த அற்புத அடையாளங்களில் இதுவே முதலாவதாகும். அதை அவர், கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே செய்தார். இவ்விதமாய் அவர் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
12இதன்பின்பு இயேசு தம்முடைய தாயுடனும் சகோதரருடனும் தம்முடைய சீடருடனும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சில நாட்கள் தங்கினார்கள்.
இயேசு ஆலயத்தைச் சுத்திகரித்தல்
13யூதருடைய பஸ்கா#2:13 பஸ்கா – இது யூதர்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த தமது விடுதலையை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு முக்கியமான பண்டிகையாகும். என்ற பண்டிகைக் காலம் நெருங்கி வந்தபோது, இயேசு எருசலேமுக்குச் சென்றார். 14அங்கே ஆலய வளாகத்துக்குள் செம்மறியாடுகள், மாடுகள் மற்றும் புறாக்களை விற்பனை செய்கின்றவர்களைக் கண்டார். அத்துடன் நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபடுவோர் மேசை அருகே அமர்ந்திருப்பதையும் கண்டார். 15எனவே அவர் கயிறுகளினால் ஒரு சாட்டையைச் செய்து, அவர்கள் எல்லோரையும் அவர்களது செம்மறியாடு, மாடுகளுடன் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களையெல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேசைகளைப் புரட்டித் தள்ளினார். 16புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றி விடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்றுவதை இத்தோடு நிறுத்துங்கள்!” என்றார். 17அப்போது, “உம்முடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னைத் தீயாக எரித்தது”#2:17 சங். 69:9 என்று எழுதப்பட்டிருப்பது அவருடைய சீடர்களின் நினைவுக்கு வந்தது.
18பின்பு யூதர்கள் அவரிடம், “நீர் இவைகளை எந்த அதிகாரத்தோடு செய்கின்றீர் என்பதை நாங்கள் அறியத்தக்கதாக, எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைச் செய்து காட்டுவீர்?” என்று கேட்டார்கள்.
19இயேசு அவர்களுக்குப் பதிலளித்து, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். நான் அதைத் திரும்பவும் மூன்று நாட்களில் எழுப்புவேன்” என்றார்.
20அதற்கு யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நாற்பத்தாறு வருடங்கள் எடுத்ததே. நீர் இதை மூன்று நாட்களில் எழுப்புவீரோ?” என்றார்கள். 21ஆனால் இயேசு தமது உடலாகிய ஆலயத்தையே இவ்விதம் குறிப்பிட்டுச் சொன்னார். 22அவர் இப்படிச் சொன்னதை, மரணித்தவர்களிலிருந்து அவர் உயிரோடு எழுந்த பின் சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் வேதவசனத்தையும் இயேசு பேசிய வார்த்தைகளையும் விசுவாசித்தார்கள்.
23பஸ்கா பண்டிகையின்போது இயேசு எருசலேமில் இருக்கையில், அவரால் செய்யப்பட்ட அற்புத அடையாளங்களை அநேக மக்கள் கண்டு, அவருடைய பெயரிலே விசுவாசம் வைத்தார்கள். 24ஆனால் இயேசுவோ எல்லா மனிதரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி செயற்படவில்லை. 25மனிதனைக் குறித்து, அவருக்கு யாரும் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்திருந்தார்.

Märk

Dela

Kopiera

None

Vill du ha dina höjdpunkter sparade på alla dina enheter? Registrera dig eller logga in