2 பேதுரு 3:1-7

2 பேதுரு 3:1-7 TCV

அன்புக்குரியவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். இந்த இரண்டு கடிதங்களையும் உங்களின் நற்சிந்தனைகளைத் தூண்டிவிடும் நினைப்பூட்டுதல்களாகவே எழுதியிருக்கிறேன். பரிசுத்த இறைவாக்கினர்களால் கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகளையும், நம்முடைய கர்த்தரும் இரட்சகரும் உங்களுடைய அப்போஸ்தலர்கள் மூலமாய் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். முதலாவதாக, கடைசி நாட்களில் ஏளனக்காரர்கள் வருவார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏளனம் பண்ணுகிறவர்களாயும், தங்கள் தீய ஆசையின்படி நடக்கிறவர்களாயும் இருப்பார்கள். “அவர் திரும்பிவருவதாக வாக்குத்தத்தம் செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் இறந்துபோன காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்ததுபோலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் வெகுகாலத்திற்கு முன்பு, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாயின என்பதையும், தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரித்து பூமி உண்டாக்கப்பட்டது என்பதையும், அவர்கள் வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள். அக்காலத்து உலகமும் இந்தத் தண்ணீரினாலேயே மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வார்த்தையினாலே தற்காலத்திலுள்ள வானங்களும் பூமியும் நெருப்பினால் எரிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும், அதாவது இறை பக்தியற்றவர்கள் அழிக்கப்படும்வரைக்கும் இவை இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன.