யாக்கோபு 2:14-26

யாக்கோபு 2:14-26 TCV

பிரியமானவர்களே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லிக்கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்யாதிருந்தால், அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும் அன்றாட உணவின்றியும் இருக்கும்போது, உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய்வா; குளிர்காய்ந்துகொள், திருப்தியாகச் சாப்பிடு” என்று சொல்லியும், அவனது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாவிட்டால், அதனால் பயன் என்ன? இவ்விதமாய் விசுவாசமும் அதற்கேற்ற செயலற்றதாய் வெறுமனே இருந்தால், அது செத்துப்போன விசுவாசமே. ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கிறது; என்னிடமோ, செயல்கள் இருக்கின்றது” என்று சொல்வானாகில், அதற்கு நான், “செயலில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காட்டு என்றும், நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய செயல்களின் மூலமாய் உனக்குக் காட்டுவேன்” என்றும் சொல்வேன். ஒரே ஒரு இறைவன்தான் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாய். அது நல்லதுதான். பிசாசுகளுங்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே. புத்தியில்லாத மனிதனே, செயலற்ற விசுவாசம் வீணானது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ? நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின்மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டான்? ஆபிரகாமினுடைய விசுவாசமும் அவனுடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவன் செய்த செயலினாலேயே, அவனுடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது. இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று வேதவசனம் சொல்கிறபடி நிறைவேறிற்று. ஆபிரகாம் இறைவனின் நண்பன் எனவும் அழைக்கப்பட்டான். எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று பார்க்கிறீர்கள். அவ்வாறே, வேசியாகிய ராகாபும் இஸ்ரயேல் ஒற்றர்களுக்குத் தங்குவதற்கு இடமளித்து, வேறு வழியாய் அவர்களை அனுப்பிவைத்த செயலினால் நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா? உயிரற்ற உடல் செத்துப்போன ஒன்றே; அதுபோலவே, செயலற்ற விசுவாசமும் செத்துப்போனதே.