மத்தேயு 19
19
விவாகரத்து
1இயேசு இவற்றைச் சொல்லி முடித்த பின்பு அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்தில் உள்ள யூதேயா பகுதிகளுக்குச் சென்றார். 2மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணமாக்கினார்.
3சில பரிசேயர்கள் அவருடைய வார்த்தைகளால் அவரைச் சிக்க வைப்பதற்காக, அவரிடம் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை தான் விரும்பிய எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்துச் செய்வது நீதிச்சட்டத்திற்கு உகந்ததா?” என்று கேட்டார்கள்.
4அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பின் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’#19:4 ஆதி. 1:27 என்பதை நீங்கள் வாசித்ததில்லையா? 5‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’#19:5 ஆதி. 2:24 6எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கின்றார்கள். ஆகையால், இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
7அதற்கு அவர்கள், “அப்படியானால் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து, அவளை அனுப்பி விடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.
8இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் ஆரம்பத்திலிருந்து அப்படியிருக்கவில்லை. 9நான் உங்களுக்குச் சொல்கின்றேன், தன் மனைவி முறைகேடான பாலுறவில் ஈடுபட்டாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்துச் செய்துவிட்டு, அதன்பின் வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவன் தகாத உறவுகொள்கின்றான்” என்றார்.
10சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படிப்பட்டதென்றால், திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதே” என்றார்கள்.
11இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தை யாருக்குக் கொடுக்கப்பட்டதோ அவர்களால் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ள முடியும். 12சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கின்றார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
சிறு பிள்ளைகளும் இயேசுவும்
13அதன்பின்பு, சிறு பிள்ளைகளின் மேல் இயேசு கைகளை வைத்து, ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, சிறு பிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள்.
14இயேசு அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே சொந்தமானது” என்றார். 15பிள்ளைகள் மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அவர் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.
செல்வந்தனான வாலிபன்
16அப்போது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்ய வேண்டிய நல்ல காரியம் என்ன?” எனக் கேட்டான்.
17“நல்லதைக் குறித்து, நீ ஏன் என்னிடம் கேட்கின்றாய்? நல்லவர் ஒருவரே இருக்கின்றார். நீ நித்திய வாழ்விற்குள் செல்ல வேண்டுமானால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார்.
18“எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான்.
அதற்கு இயேசு, “கொலை செய்யாதே, தகாத உறவுகொள்ளாதே, திருடாதே, பொய்ச் சாட்சி கூறாதே, 19உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு,#19:19 யாத். 20:12-16; உபா. 5:16-20 நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலானிடமும் அன்பாய் இரு என்பவைகளே” என்றார்.#19:19 லேவி. 19:18
20அதற்கு அந்த வாலிபன், “இவை எல்லாவற்றையும் கடைப்பிடித்து வருகின்றேன், இன்னும் எனக்குள் என்ன குறைபாடு?” என்றான்.
21இயேசு அதற்குப் பதிலாக, “நீ முழு நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். அதன்பின் வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
22இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிச் சென்றான். ஏனெனில் அவனிடம் அதிக செல்வம் இருந்தது.
23அப்போது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், ஒரு பணக்காரன் பரலோக அரசுக்குள் செல்வது மிகக் கடினமானது. 24மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பணம் படைத்த ஒருவர் இறைவனின் அரசுக்குள் செல்வதைவிட, ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
25சீடர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள்.
26இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார்.
27பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான்.
28இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மனுமகன் தமது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பார். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்ப்பீர்கள். 29என்னைப் பின்பற்றுவதன் காரணமாக#19:29 கிரேக்க மொழியில் “என் பெயரால்” என்றுள்ளது. வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ#19:29 சில மொழிபெயர்ப்புகளில் “மனைவி” என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறு மடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். 30ஆனால், கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மத்தேயு 19: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.