1 யோவான் 3:1-3

1 யோவான் 3:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்பட பிதா எவ்வளவு பெரிதான அன்பை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்திருக்கிறார். உண்மையாய் நாம் அவரின் பிள்ளைகளே! உலகம் நாம் யார் என்று அறியாதிருப்பதற்கான காரணம், உலகம் இறைவனை அறியாதிருப்பதே. அன்பான நண்பரே, இப்பொழுது நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனால் இனிமேல், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருப்போம் என்பது, இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருக்கின்றபடியே, நாம் அவரைக் காணப்போகிறோம். அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.

1 யோவான் 3:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

1 யோவான் 3:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)

பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.

1 யோவான் 3:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.