மாற்கு 12:1-40
மாற்கு 12:1-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார். இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள். அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள். அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான். இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான். ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்? மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள். மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார். வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங்கேட்கத் துணியவில்லை. இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள். பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
மாற்கு 12:1-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இயேசு அவர்களுடனே உவமைகள் மூலம் பேசினார்: “ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, ஒரு திராட்சை ஆலையைக் கட்டி, அங்கு ஒரு காவல் கோபுரத்தையும் அமைத்தான். அதற்குப் பின்பு, அவன் அந்தத் திராட்சை தோட்டத்தைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, வேறொரு இடத்திற்குச் சென்றுவிட்டான். அறுவடைக்காலம் வந்தபோது, அந்த விவசாயிகளிடமிருந்து திராட்சைத் தோட்டத்தின் பழங்களின் பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த விவசாயிகளோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது அவன், வேறொரு வேலைக்காரனையும் அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் இவனையும் அடித்து தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். அவன் மறுபடியும் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொன்றுபோட்டார்கள். அவன் இன்னும் பலரை அனுப்பினான்; அவர்களில் சிலரை அவர்கள் அடித்தார்கள். மற்றவர்களைக் கொன்றுபோட்டார்கள். “இனிமேல் அனுப்புவதற்கு, அவனுடைய அன்பு மகன் மட்டுமே இருந்தான். ‘எனது மகனுக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனை அனுப்பினான். “ஆனால் அந்த விவசாயிகளோ, ‘இவனே உரிமையாளன். வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்பொழுது இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.” அப்படியானால், “அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்?” என்று கேட்டார். “நான் சொல்கிறேன், அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான். நீங்கள் இந்த வேதவசனத்தை வாசிக்கவில்லையா: “ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’” என்றார். அப்பொழுது அவர்கள், இயேசுவைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்ததினால், அவரைவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் பிடிக்கும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? நாங்கள் அதைச் செலுத்த வேண்டுமா? செலுத்த வேண்டியதில்லையா?” என்று கேட்டார்கள். ஆனால் இயேசுவுக்கு அவர்களின் தந்திரம் தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னை சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை நான் பார்ப்பதற்கு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அந்த நாணயத்தைக் கொண்டுவந்தபோது, அவர் அவர்களிடம், “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், அப்படியானால், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று கூறுகிற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளைகள் அற்றவனாய் தனது மனைவியை விட்டு இறந்துபோனால், இறந்தவனுடைய சகோதரன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என்றும், இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியைப் பெறவேண்டும் என்றும் எங்களுக்கு மோசே எழுதிக் கொடுத்திருக்கிறார். இங்கே ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான். அந்த விதவையை இரண்டாவது சகோதரன் திருமணம் செய்தான். ஆனால் அவனும் பிள்ளைகள் இல்லாமலே இறந்துபோனான். மூன்றாவது சகோதரனுக்கும் இதுவே நடந்தது. அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் வேதவசனங்களையும், இறைவனுடைய வல்லமையையும் அறியாததினால் தவறுசெய்கிறீர்கள் அல்லவா? இறந்தவர்கள் உயிர்த்தெழும்போது, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள இறைவனுடைய தூதர்களைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிர்த்தெழுவதைக் குறித்து நீங்கள் மோசேயின் புத்தகத்தில் வாசிக்கவில்லையா? முட்புதரில் தோன்றிய இறைவன் அவனிடம், ‘நான் ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ என்று சொன்னாரே. அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கிறார். நீங்கள் இதைப்பற்றி மிகவும் தவறுசெய்கிறீர்கள்” என்றார். மோசேயின் சட்ட ஆசிரியரில் ஒருவன் வந்து, அவர்கள் விவாதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தார் என்று அவன் கண்டபோது, அவன் அவரிடம், “கட்டளைகள் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டான். அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர். உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து’ என்பதே. இரண்டாம் கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பு செலுத்துவது போலவே, உன் அயலானிடத்திலும் அன்பு செலுத்து.’ இவற்றைவிட, பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார். அதற்கு அந்த மோசேயின் சட்ட ஆசிரியன், “போதகரே, நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத்தவிர வேறு இறைவனும் இல்லை என்று நீர் சொன்னது சரி. அவரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்பு செலுத்துவதும், தன்னில் தான் அன்பாயிருப்பதுபோல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே, எல்லா தகன காணிக்கைகளையும், பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான். அவன் ஞானத்துடன் பதில் சொல்லியதை இயேசு கண்டபோது, அவர் அவனிடம், “நீ இறைவனுடைய அரசுக்குத் தூரமாக இல்லை” என்றார். அவ்வேளையிலிருந்து ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை. இயேசு ஆலய முற்றத்தில் போதித்துக் கொண்டிருக்கையில், அவர் அவர்களிடம், “கிறிஸ்துவே தாவீதின் மகன் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே, அது எப்படி? தாவீது, தான் பரிசுத்த ஆவியானவராலே பேசுகையில், அறிவித்ததாவது: “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது, “உமது பகைவர்களை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்.” ’ தாவீது தானே அவரை ‘கர்த்தர்’ என்று சொல்லுகையில், அவர் எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார். கூடியிருந்த மக்கள் அவர் சொல்வதை மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இயேசு தொடர்ந்து போதிக்கையில் அவர் அவர்களிடம், “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டு, பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
மாற்கு 12:1-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான். தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான். தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது; அது கர்த்தராலே நடந்தது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார். இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள். அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து: போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது. ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள். எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார். வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை. இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார். அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான். அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை. இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே. தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள். இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார்.
மாற்கு 12:1-40 பரிசுத்த பைபிள் (TAERV)
மக்களுக்குப் போதிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். “ஒருவன் தன் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டான். அவன் வயலைச் சுற்றி மதில்சுவர் எழுப்பினான். திராட்சை இரசம் உருவாக்க ஒரு குழியைத் தோண்டினான். பிறகு அவன் ஒரு கோபுரத்தையும் கட்டினான். அவன் அத்தோட்டத்தைச் சில விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டான். பிறகு அவன் வேறு தேசத்திற்குப் போய்விட்டான். “பின்னர், திராட்சைப் பழம் பறிப்பதற்கான காலம் வந்தது. திராட்சைத் தோட்டத்திலுள்ள பழத்தின் குத்தகைப் பங்கை வாங்கி வருமாறு தோட்டக்காரன் ஒரு வேலையாளை அனுப்பி வைத்தான். ஆனால் விவசாயிகள் அவனைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்து வெறுங்கையோடு அனுப்பினர். பின்பு வேறொரு வேலையாளைத் தோட்டக்காரன் அனுப்பினான். அந்த விவசாயிகள் அவனைத் தலையில் அடித்தனர். அவர்கள் அவனுக்கு அவமரியாதை செய்தனர். அதனால் தோட்டக்காரன் மேலும் ஒரு வேலைக்காரனை அனுப்பிவைத்தான். அந்த விவசாயிகள் அவனைக் கொன்று போட்டார்கள். அந்தத் தோட்டக்காரன் மேலும் பல வேலைக்காரர்களை விவசாயிகளிடம் அனுப்பி வைத்தான். விவசாயிகளோ அவர்களில் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டார்கள். “அந்தத் தோட்டக்காரனிடம் மேலும் ஒரே ஒரு ஆளே இருந்தான். அவன்தான் அவனது குமாரன். அவன் தன் குமாரனைப் பெரிதும் நேசித்தான். எனினும் அவன் குமாரனை விவசாயிகளிடம் அனுப்ப முடிவு செய்தான். கடைசி ஆளாகத் தன் குமாரனை மட்டுமே அனுப்ப முடியும் என்று எண்ணினான். ‘என் குமாரனையாவது விவாசாயிகள் மதிப்பார்கள்’ என்று நம்பினான். “ஆனால் விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன்தான் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரன். இந்தத் தோட்டம் இவனுக்கு உரியதாகும். இவனை நாம் கொன்றுவிட்டால் இத்தோட்டம் நம்முடையதாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். ஆகையால் அந்த விவசாயிகள் அவனது குமாரனைப் பிடித்து, கொன்று, தோட்டத்துக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டனர். “ஆகையால் தோட்டத்துச் சொந்தக்காரன் வேறு என்ன செய்வான்? அவன் தோட்டத்துக்குப் போய் அந்த விவசாயிகளை எல்லாம் கொல்வான். பிறகு அத்தோட்டத்தை வேறு விவசாயிகளுக்குக் கொடுப்பான். உறுதியாகவே நீங்கள் இந்த வாக்கியத்தை வாசித்துள்ளீர்கள். “‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாமென ஒதுக்கிய கல்லே வீட்டின் மூலைக்கல்லாயிற்று. கர்த்தர் ஒருவரே இதனைச் செய்தவர். இது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது’” இயேசு சொன்ன இந்த உவமையை யூதத் தலைவர்களும் கேட்டனர். இந்த உவமை தங்களைப் பற்றியது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் இயேசுவைக் கைது செய்ய ஒரு காரணத்தைத் தேடினர். எனினும் அவர்களுக்கு மக்களைப்பற்றிய பயம் இருந்தது. எனவே, அவர்கள் இயேசுவை விட்டுப் போய்விட்டார்கள். பிறகு யூதத்தலைவர்கள், சில பரிசேயர்களையும், ஏரோதியர்கள் என்னும் குழுவில் இருந்து சிலரையும் இயேசுவிடம் அனுப்பி வைத்தார்கள். ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் என்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது. அவர்கள் அனைவரும் உங்களுக்கு ஒரே மாதிரிதான். தேவனின் வழியைப் பற்றிய உண்மையையே நீங்கள் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர். அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார். அவர், “எதை எதையோ சொல்லி என்னை ஏன் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசைக் கொண்டு வாருங்கள். நான் பார்க்கவேண்டும்” என்றார். அவர்கள் ஒரு காசைக் கொடுத்தார்கள். அவர்களிடம் இயேசு, “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். அந்த மக்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். பிறகு சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ இயலாது என்று நம்புகிறார்கள்.) அவர்கள் இயேசுவிடம் ஒரு வினாவைக் கேட்டார்கள். “போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார். ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். முதல் சகோதரன் மணந்துகொண்டபின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. ஆகவே, இரண்டாவது சகோதரன் அவளை மணந்துகொண்டான். அவனுக்கும் குழந்தைகள் இல்லை. அவனும் இறந்துவிட்டான். இது போலவே மூன்றாவது சகோதரனுக்கும் ஏற்பட்டது. இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள். ஆனால் ஏழு சகோதரர்களும் அவளை மணந்திருக்கின்றனர். ஆகவே, மரணத்திலிருந்து மக்கள் எழும் காலத்திலே அந்தப் பெண் யாருடைய மனைவியாகக் கருதப்படுவாள்?” என்று கேட்டனர். இதற்கு இயேசு, “ஏன் இந்தத் தவறைச் செய்கிறீர்கள்? இதற்குக் காரணம் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை நீங்கள் அறிகிறதில்லை. அல்லது நீங்கள் தேவனின் வல்லமையைத் தெரிந்து கொள்ளவில்லை. மரணத்தில் இருந்து எழும் மக்கள் மத்தியில் திருமண உறவுகள் ஏதும் இராது. மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்ளமாட்டார்கள். அனைத்து மக்களும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்களைப்போல இருப்பார்கள். மக்கள் மரணத்தில் இருந்து எழுவது பற்றி தேவன் சொன்னதை நீங்கள் நிச்சயம் வாசித்திருக்கிறீர்கள். மோசே தனது நூலில் முட்செடி எரிந்ததைப்பற்றிச் சொல்லும்போது தேவன் மோசேயிடம் இவ்வாறு சொல்கிறார். ‘நான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் தேவனுமாயிருக்கிறேன்’ இவர்கள் உண்மையிலேயே மரித்தவர்கள் அல்லர். அவர் உயிரோடு இருப்பவர்களுக்கே தேவனாய் இருக்கிறார். சதுசேயர்களாகிய நீங்கள் தவறானவர்கள்” என்றார். வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர். நீங்கள் அவரிடம் அன்பாய் இருக்க வேண்டும். அவரிடம் நீங்கள் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு இதயத்தோடும் முழு பலத்தோடும், அன்பாய் இருக்க வேண்டும்.’ இது முதல் கட்டளை. ‘உங்களை நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அடுத்தவர்களையும் நேசிக்க வேண்டும்’ என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிட மிக முக்கியமான வேறு கட்டளைகள் எதுவும் இல்லை” என்றார். அதற்கு அந்த மனிதன், “போதகரே! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான். அந்த மனிதன் புத்திசாலித்தனமாகப் பதில் கூறுவதை இயேசு அறிந்து கொண்டார். எனவே அவனிடம், “நீ தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாய்” என்றார். அதற்குப் பிறகு ஒருவருக்கும் இயேசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கும் தைரியம் வரவில்லை. பின்னர், இயேசு தேவாலயத்தில் போதித்துக்கொண்டிருந்தார். “கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர்கள் ஏன் சொல்கிறார்கள்? பரிசுத்த ஆவியின் உதவியுடன் தானாக தாவீது கூறுகிறார்: “‘கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார், நீங்கள் எனது வலது பக்கத்தில் உட்காருங்கள். நான் உங்களுடைய பகைவர்களை உங்கள் ஆளுகைக்கு உட்படுத்துவேன்’ தாவீது தானாக அவரை ‘ஆண்டவர்’ என்று அழைக்கிறார். அப்படி இருக்கக் கிறிஸ்து எவ்வாறு தாவீதின் குமாரனாக இருக்க முடியும்?” என்று இயேசு கேட்டார். ஏராளமான மக்கள் இயேசு சொல்வதைக் கேட்டு மனம் மகிழ்ந்தனர். தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளைப் பெற விரும்புகின்றனர். விருந்துகளில் மிக முக்கியான இடங்களில் இருக்க விரும்புகின்றனர். விதவைகளை இழிவாக நடத்தி அவர்களது வீடுகளைத் திருடுகிறார்கள். நீண்ட பிரார்த்தனை செய்து நல்லவர்கள்போல் தோற்றம் தருகிறார்கள். இவர்களை தேவன் மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.