மாற்கு 12:41-44

மாற்கு 12:41-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டுகாசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

மாற்கு 12:41-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு காணிக்கைகள் போடும் இடத்துக்கு எதிராக உட்கார்ந்து, திரண்டிருந்த மக்கள் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியிலே பணத்தைப் போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பல செல்வந்தர்கள் அதிக பணத்தைப் போட்டார்கள். ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு சிறிய காசுகளைப் போட்டாள். அப்பொழுது இயேசு, தமது சீடர்களைத் தம்மிடம் அழைத்து அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை மற்ற எல்லோரையும்விட, அந்தக் காணிக்கைப் பெட்டியிலே அதிகமாய்ப் போட்டிருக்கிறாள். அவர்கள் அனைவரும் தங்கள் செல்வத்திலிருந்தே எடுத்துக் கொடுத்தார்கள்; ஆனால் இவளோ, தனது ஏழ்மையிலிருந்தே கொடுத்தாள், தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே அவள் போட்டிருக்கிறாள்” என்றார்.

மாற்கு 12:41-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

மாற்கு 12:41-44 பரிசுத்த பைபிள் (TAERV)

மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள். இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த ஏழை விதவை இரண்டு சிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள். அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்” என்றார்.