நீதிமொழிகள் 8:1-36

நீதிமொழிகள் 8:1-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஞானம் அழைக்கிறதில்லையோ? புரிந்துகொள்ளுதல் குரல் எழுப்புகிறதில்லையோ? அது வழியிலுள்ள மேடுகளிலும் தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது. அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில், அதின் நுழைவாசலில் நின்று, சத்தமிட்டுக் கூப்பிடுகிறது: “மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்; மனுக்குலம் எல்லாம் கேட்கும்படி என் சத்தத்தை உயர்த்துகிறேன். அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள். கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது; என் உதடுகள் நேர்மையான காரியங்களைப் பேசும். உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது. என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை; அவற்றில் கபடமோ, வஞ்சனையோ இல்லை. பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை; அறிவுடையோருக்கு அவை நேர்மையானவை. வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு. ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல. “ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது. தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு. என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள். என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள். என்னிடத்தில் செல்வமும் கனமும் நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன. என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது. நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன். என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன். “யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்; நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன், உலகம் உண்டாவதற்கு முன்பே, ஆரம்பத்திலிருந்தே நான் படைக்கப்பட்டேன். சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன், அப்பொழுது தண்ணீர் நிறைந்த ஊற்றுக்களும் இருக்கவில்லை. மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே நான் பிறந்திருந்தேன். அவர் பூமியையோ அதின் நிலங்களையோ உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன். அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும், ஆழத்தின் மேற்பரப்பில் அவர் அடிவானத்தை குறித்தபோதும் நான் அங்கிருந்தேன். அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும், ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன். கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன். அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன். நான் நாள்தோறும் அவருக்குப் பிரியமாயிருந்து, எப்பொழுதும் அவருக்கு முன்பாகக் களிகூர்ந்தேன். அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி, மனுமக்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். “ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; எனது வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனது அறிவுறுத்தலைக் கேட்டு ஞானமுள்ளவர்களாயிருங்கள்; அதை அலட்சியம் செய்யவேண்டாம். நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, என் கதவருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள். ஆனால் என்னைத் தேடிக் கண்டடையாதவர்கள் தங்களுக்கே தீமை செய்கிறார்கள்; என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தையே விரும்புகிறார்கள்.”

நீதிமொழிகள் 8:1-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாமல் இருங்கள். என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

நீதிமொழிகள் 8:1-36 பரிசுத்த பைபிள் (TAERV)

கவனியுங்கள்! ஞானமும், அறிவும் கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன. அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது. அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன. திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன. ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன். நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன். நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள். முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள். கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனது வார்த்தைகள் உண்மையானவை. நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன். நான் சொல்வதெல்லாம் சரியானவை. என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை. புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை. அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான். எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது. ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது. ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது” என்று ஞானம் கூறுகிறது. நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும். ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீயவைகளை வெறுக்கிறான். ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன். மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன். நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன். ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன். நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன். ராஜாக்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள். பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான். என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன். என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள். ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன. நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன். நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை. எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை. ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன். என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன். ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன். நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன். ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன். உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன். ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன். நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன். ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள். நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன். கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன். நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். நான் உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன். கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன். கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன். கடல்களில் தண்ணீரின் அளவை கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கியபோது நான் அங்கிருந்தேன். நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன். கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார். நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன். தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார். அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார். “குழந்தைகளே! இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் எனது வழிகளைப் பின்பற்ற வேண்டும். எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள். அதைக் கவனிக்க மறுக்காதீர்கள். என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான். அவன் என் வழியருகில் காத்திருப்பான். என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான். அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான். ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான். என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.”

நீதிமொழிகள் 8:1-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும். பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள். கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது. என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும். வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயப்பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.