இது இலகு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பரிசுத்த வேதாகமம் ஆகும். தற்காலத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் வேதாகமத்தின் செய்தியை தெளிவாகவும் இலகுவாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பு ஆலோசகர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில் உள்ள சொற்கள் அனைத்தும் வேதாகமத்தின் மூலமொழிகளான எபிரெய-கிரேக்க மொழிகளுடன் துல்லியமாய் சரிபார்க்கப்பட்டுள்ளன. அத்துடன், “வேதாகமத்தின் மூலமொழிக்கு கிட்டியதாகவும், அதேவேளை முடிந்தளவு வாசகர்களின் சமகால மொழிநடைக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்க வேண்டும்” என்ற பிப்ளிகாவின் மொழிபெயர்ப்பு கொள்கையுடன் இந்த மொழிபெயர்ப்பு ஒத்துப்போகிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மொழிபெயர்ப்பில் பல சிறப்பு அம்சங்களைக் காணலாம். குறிப்பாக பழைய ஏற்பாட்டின் எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாட்டின் கிரேக்க மொழியிலும் உள்ளதான அசல் வேதாகமப் பெயர்களைப் பயன்படுத்த முடிந்தவரை முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
எடை மற்றும் அளவீடுகளைப் பொருத்தளவில் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளுக்கு அண்ணளவான, சமகால மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம அளவீடுகளான மீற்றர், கிலோ மீற்றர், லீட்டர், தொன் போன்றவற்றைப் பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் புறஜாதியார் என்ற பாரம்பரிய சொல்லுக்குப் பதிலாக யூதர் அல்லாதோர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வாசகர்கள், சில வசனங்களுக்கான விளக்கங்களையும், ஒத்த வாக்கிய குறிப்புகளையும் அறிந்துகொள்ள வசதியாக அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
――――――
பிப்ளிகா, சர்வதேச வேதாகம சங்கம் பரிசுத்த வேதாகம மொழிபெயர்ப்பு மற்றும் பரிசுத்த வேதாகம வெளியீடுகள் ஊடாக, இறைவனின் வார்த்தையை மக்களுக்கு வழங்குகிறது. அத்துடன் ஆபிரிக்கா, ஆசியா பசிபிக், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழும் மக்கள், வேதாகம வார்த்தையைக் கற்றறிய உதவும் பணியிலும் ஈடுபடுகின்றது. உலகளாவிய ரீதியில், இறைவனின் வார்த்தையுடன் மக்களை ஈடுபடுத்தி, இயேசு கிறிஸ்துவுடனான உறவின் ஊடாக அவர்களின் வாழ்க்கை ஆசீர்வாதமானதாக மாற்றப்பட பிப்ளிகா உதவுகின்றது.