Лого на YouVersion
Иконка за търсене

மத்தேயு 5

5
மலைப் பிரசங்கம்
1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்போது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்டோர்
2அவர் அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கி சொன்னதாவது:
3“ஆவியில் தாழ்மையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
பரலோக அரசு அவர்களுக்கே உரியது.
4துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
5சாந்த குணமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் பூமியை சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்வார்கள்.
6நீதியை நிலைநாட்ட பசியும் தாகமும் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் திருப்தியடைவார்கள்.
7இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்களுக்கு இரக்கம் காட்டப்படும்.
8உள்ளத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் இறைவனைக் காண்பார்கள்.
9சமாதானம் செய்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள்.
10நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுகிறவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே.
11“என் பொருட்டு மக்கள் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராய்ப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள். 12சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதியுங்கள். பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப் பெரிதாய் இருக்கும்; ஏனெனில் உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் இதைப் போலவே துன்புறுத்தினார்கள்.
உப்பும் ஒளியும்
13“நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாய் இருக்கின்றீர்கள். ஆனால் உப்பு அதன் சாரத்தை இழந்து போனால், திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாமல் வெளியே வீசப்பட்டு, மனிதரால் மிதிக்கப்படும்.
14“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கின்றீர்கள். ஒரு குன்றின் மீதுள்ள பட்டணம் மறைவாயிருக்காது. 15மக்கள் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்க மாட்டார்களல்லவா? மாறாக அவர்கள் அதை விளக்குத் தண்டின் மீது உயர்த்தி வைப்பார்கள். அப்போது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். 16அதுபோலவே, உங்கள் வெளிச்சம் மனிதர்கள் முன்பாகப் பிரகாசிக்கட்டும். அப்போது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவைப் போற்றுவார்கள்.
நீதிச்சட்டம் நிறைவேறுதல்
17“நான் நீதிச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம்; நான் அவற்றை அழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தேன். 18நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், வானமும் பூமியும் மறைந்து போனாலும், நீதிச்சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும், அதில் உள்ள மிகச் சிறிய எழுத்தோ, எழுத்தின் சிறு புள்ளியோ மறைந்து போகாது. 19இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி, அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்குப் போதிக்கிறவன், பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான்; ஆனால் இந்தக் கட்டளைகளைத் தானும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் கற்பிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான். 20நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசேயர்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் இறைவனைப் பின்பற்றும் விதத்தைவிட, நீங்கள் இறைவனைப் பின்பற்றும் விதம் மிக மேலானதாய் இருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசுக்குள் செல்ல மாட்டீர்கள்.
கோபமும் கொலையும்
21“ ‘கொலை செய்யாதே, கொலை செய்கின்றவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவான்’#5:21 யாத். 20:13 என்று வெகு காலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், யாராவது தனது சகோதரனுடன்#5:22 அல்லது சகோதரியுடன் கோபமாயிருந்தால்,#5:22 கோபமாயிருந்தால் – சில பிரதிகளில் நியாயமின்றி கோபமாயிருந்தால் என்றுள்ளது. அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவான். மேலும், தனது சகோதரனை ‘ஒன்றுக்கும் உதவாத முட்டாள்!’#5:22 முட்டாள் – ஒருவரை நிந்திப்பதற்காக ராகா என்ற அரமேய சொல் பயன்படுத்தப்பட்டது. என்று நிந்திக்கிறவன், நியாயசபையில் அதற்குப் பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் ஒருவனை ‘புத்தி கெட்டவன்!’ என்று தூசிக்கிறவன், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறான்.
23“அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கு உங்கள் மீது ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், 24பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் ஒப்புரவாகுங்கள்; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள்.
25“உங்களது பகைவன் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, வழியிலேயே அவனோடு விரைவாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக் கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் போடப்படலாம். 26நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்கின்றேன், உங்கள் தண்டப் பணத்தின் கடைசி சதம்#5:26 கடைசி சதம் – கிரேக்க மொழியில், ஒரு தெனாரியத்தின் 1​64 பங்கு பெறுமதியுள்ள மிக சிறிய ரோம நாணயம் வரை செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வர மாட்டீர்கள்.
தகாத உறவுகொள்வதைப் பற்றிய போதனை
27“ ‘தகாத உறவுகொள்ளாதே’#5:27 யாத். 20:14 தகாத உறவு – இன்னொருவரின் மனைவியோடு அல்லது கணவனோடு தாம்பத்ய உறவுகொள்வது என்பதாகும் எனச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஒரு பெண் மீது ஆசைகொண்டு பார்க்கும் எவனும், அவளுடன் அப்பொழுதே தன் உள்ளத்தில் தகாத உறவு கொண்டவன் ஆகிறான். 29உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத் தோண்டி எறிந்து விடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. 30உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்து விடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது.
விவாகரத்து
31“ ‘தனது மனைவியை விவாகரத்து செய்கின்றவன், அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்க வேண்டும்’#5:31 உபா. 24:1 என்று சொல்லப்பட்டுள்ளதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 32ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எவனாவது ஒருவன், தன் மனைவி முறைகேடான பாலுறவில் ஈடுபட்டாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்துச் செய்தால், அவன் அவளை தகாத உறவுகொள்ள வைக்கிறான். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் தகாத உறவுகொள்கின்றான்.
சத்தியம் செய்தல்
33“மேலும், ‘நீங்கள் கர்த்தருக்குக் கொடுத்த வாக்கை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுங்கள்’#5:33 எண். 30:2 என்று, முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் சொல்வது உண்மை என்று ஒருபோதும், எதன் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம். பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை; 35பூமியின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில் அது அவரது பாதபீடம்; எருசலேமின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம். 36உனது தலையில் அடித்தும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில் உன்னால் ஒரு முடியைக் கூட வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ முடியாதே. 37ஆகவே, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று உண்மையான பதிலை மட்டுமே கொடுங்கள்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே#5:37 தீயவனிடமிருந்தே – கிரேக்க மொழியில், தீமையிலிருந்து என்றுள்ளது வருகின்றது.
பழிவாங்குதல்
38“ ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’#5:38 யாத். 21:24; லேவி. 24:20; உபா. 19:21 என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய மனிதனுடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். 40யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் உடையை எடுக்க விரும்பினால், உங்களது மேலாடையையும்#5:40 யாத். 22:26 மேலாடை என்பது, யூதர் வழமையாக விட்டுக்கொடுக்காத ஒரு உடை. இதைப் பறிப்பதை யூத சட்டம் தடை செய்திருந்தது. கொடுத்து விடுங்கள். 41யாராவது உங்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அவனோடு இரண்டு கிலோ மீட்டர் தூரம் போங்கள். 42உங்களிடத்தில் கேட்கின்றவனுக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன் வாங்க விரும்புகிறவனிடமிருந்து விலகிச் செல்ல வேண்டாம்.
பகைவரிடத்தில் அன்பு காட்டுதல்
43“ ‘உங்கள் அயலவனுக்கு அன்பு காட்டுங்கள்’#5:43 லேவி. 19:18 என்று சொல்லப்பட்டிருப்பதையும் ‘உங்கள் பகைவனுக்கு வெறுப்பைக் காட்டுங்கள்’ என்று கூறுவதையும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன்: உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள்.#5:44 சில பிரதிகளில், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்றும் இருக்கின்றது 45இப்படிச் செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவிற்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்கள் மீதும், நல்லவர்கள் மீதும் தனது சூரியனை உதிக்கச் செய்கின்றார். நீதியுள்ளவர்கள் மீதும், நீதியற்றவர்கள் மீதும் மழையை பெய்யப் பண்ணுகிறார். 46உங்களை அன்பு செய்வோரையே நீங்களும் அன்பு செய்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி சேகரிப்பவர்களும் அப்படிச் செய்வதில்லையா? 47நீங்கள் உங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆசி கூறுவீர்களானால் மற்றவர்களைப் பார்க்கிலும் நீங்கள் செய்யும் மேலான காரியம் என்ன? இறைவனை அறியாதவர்களும் அப்படித்தானே செய்கின்றார்கள்? 48எனவே, உங்கள் பரலோகப் பிதா நற்குணங்களில் முழுநிறைவு உடையவராய் இருப்பது போல, நீங்களும் நற்குணங்களில் முழுநிறைவு உடையவர்களாய் இருங்கள்.

Избрани в момента:

மத்தேயு 5: TRV

Маркирай стих

Споделяне

Копиране

None

Искате ли вашите акценти да бъдат запазени на всички ваши устройства? Регистрирайте се или влезте