YouVersion Logo
Search Icon

2 நாளா 9

9
அத்தியாயம் 9
சேபாவின் அரசி சாலொமோனை சந்திக்க வருதல்
1சேபாவின் அரசி, சாலொமோனின் புகழைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனை சோதிக்கிறதற்காக, திரளான கூட்டத்தினரோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்திற்கு வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் உரையாடினாள். 2அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளுக்கெல்லாம் பதில் கூறினான்; அவளுக்கு பதில் கூறமுடியாதபடி ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. 3சேபாவின் அரசி சாலொமோனுடைய பானபாத்திரக்காரர்களையும், அரண்மனையையும், 4பந்தியின் உணவு வகைகளையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் உடைகளையும், அவனுடைய பானபாத்திரக்காரர்களையும், அவர்கள் உடைகளையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமித்து, 5ராஜாவை நோக்கி: உம்முடைய செயல்களையும், உம்முடைய ஞானத்தையும்குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி உண்மைதான். 6நான் வந்து அதை என் கண்களால் பார்க்கும்வரை அவர்களுடைய வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட அதிகம் உண்டாயிருக்கிறது. 7உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரர்களும் பாக்கியவான்கள். 8உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கச் செய்ய, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்கு சிநேகிக்கிறதாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள். 9அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை. 10ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் வாசனை#9:10 சந்தன மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள். 11அந்த வாசனை மரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், இசைக்கலைஞர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை. 12சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
சாலொமோனின் மகிமை
13சிறிய மற்றும் பெரிய வியாபாரிகள் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருடத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து எடையுள்ளதாக இருந்தது. 14அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள். 15ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான். 16அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் எடை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். 17ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான். 18அந்தச் சிங்காசனத்திற்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதப்படியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கை சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கை சாய்மானங்கள் அருகே நின்றன. 19அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்ஜியத்திலும் இப்படிச் செய்யப்படவில்லை. 20ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகக் கருதப்படவில்லை. 21ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 22பூமியின் அனைத்து ராஜாக்களையும்விட சாலொமோன் ராஜா ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். 23சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள். 24வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். 25சாலொமோனுக்கு நான்காயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பனிரெண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான். 26நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான். 27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான். 28எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
சாலொமோனின் மரணம்
29சாலொமோனுடைய ஆரம்பம்முதல் கடைசிவரையுள்ள மற்ற செயல்கள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புத்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமைக்குறித்து தரிசனம் காண்கிறவனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதப்பட்டிருக்கிறது. 30சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். 31பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

Currently Selected:

2 நாளா 9: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 நாளா 9