YouVersion Logo
Search Icon

அப் 8

8
அத்தியாயம் 8
எருசலேம்சபை துன்புறுத்தப்படுதல்
1ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள். 2தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள். 3சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான்.
சமாரியாவில் பிலிப்பு
4சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள். 5அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான். 6பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள். 7அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள். 8அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.
சீமோன் என்னும் மாயவித்தைக்காரன்
9சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான். 10தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள். 11அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். 12தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 13அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான். 14சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். 15இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, 16அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து, 17அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள். 18அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: 19நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். 20பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது. 21உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லாதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. 22ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 23நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். 24அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். 25இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.
பிலிப்புவும் எத்தியோப்பியனும்
26பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான். 27அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; 28ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். 29ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். 30அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான். 31அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான். 32அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்:
“அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்;
மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33அவர் தம்மைத் தாழ்த்தினபோது
அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது;
அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது;
அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.
34மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
எத்தியோப்பிய மந்திரி ஞானஸ்நானம் பெறுதல்
35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான். 36இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான். 37அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி; 38இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான். 40பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.

Currently Selected:

அப் 8: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for அப் 8