YouVersion Logo
Search Icon

எரே 46

46
அத்தியாயம் 46
எகிப்தைக்குறித்த செய்தி
1அன்னிய மக்களுக்கு விரோதமாக எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்: 2எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியருகில் கர்கேமிசில் இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நான்காம் வருடத்தில் முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் படையைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்: 3கேடகங்களையும் சிறிய கேடகங்களையும் ஆயத்தம்செய்து, போர்செய்வதற்கு வாருங்கள். 4குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைக்கவசத்தை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களை அணிந்துகொள்ளுங்கள். 5அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலும் ஏற்பட்ட பயங்கரத்தினால் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் தோல்வியடைந்து, திரும்பிப்பாராமல் ஓட்டமாக ஓடிப்போகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 6வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியருகில் அவர்கள் இடறிவிழுவார்கள். 7அலைபோல புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்? 8எகிப்தியனே அலைபோல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான். 9குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து அம்பேற்றுகிற லூதீயரும் புறப்படுவார்களாக. 10ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் அழித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியருகில் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவருக்கு ஒரு பலியும் உண்டு. 11எகிப்தின் மகளாகிய கன்னிகையே, நீ கீலேயாத்திற்குப்போய், பிசின் தைலம் வாங்கு; திரளான மருந்துகளை நீ சேர்க்கிறது வீண், உனக்கு ஆரோக்கியமுண்டாகாது. 12மக்கள் உன் வெட்கத்தைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாக விழுந்தார்கள் என்றார். 13எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் யெகோவா சொன்ன வசனம்: 14ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதை எரித்துப்போடுகிறதென்று சொல்லி, எகிப்தில் அறிவித்து, மிக்தோலில் சொல்லி, நோப்பிலும் தகபானேசிலும் பிரசித்தம்செய்யுங்கள். 15உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? யெகோவா அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை. 16அநேகரை இடறச்செய்கிறார்; அவனவன் தன்னருகிலுள்ளவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்திற்குத் தப்பி நமது மகளிடத்திற்கும், நாம் பிறந்த தேசத்திற்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள். 17எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள். 18மலைகளில் தாபோரும், மத்திய தரைக் கடலின் அருகே கர்மேலும் இருக்கிறதுபோல அவன் கண்டிப்பாக வருவானென்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா தம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறார். 19எகிப்து தேசமக்களாகிய மகளே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும். 20எகிப்து மகா நேர்த்தியான கிடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான். 21அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாக ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள்மேல் வந்தது. 22அவன் பாம்பைப்போல் சீறிவருவான், படைபலத்தோடு நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல் வருவார்கள். 23எண்ணமுடியாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை. 24எகிப்தின் மகள் கலங்குவாள்; வடதிசை மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள். 25இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான மக்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தெய்வங்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து, 26அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று யெகோவா சொல்லுகிறார். 27என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்துக் காப்பாற்றுவேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியுடனும் பயமில்லாமல் இருப்பான்; அவனைத் தத்தளிக்கச்செய்வார் இல்லை. 28என் ஊழியனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லாத் தேசங்களையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் அழிக்காமல், உன்னைக் குறைவாகத் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னைத் தண்டிக்காமலிருந்தால் நான் குற்றமுள்ளவனாவேன் என்கிறார்.

Currently Selected:

எரே 46: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எரே 46