YouVersion Logo
Search Icon

யோசு 17

17
அத்தியாயம் 17
யோசேப்பின் வம்சத்தார்களின் பங்குகள்
1மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்குத் தலைப்பிள்ளையானவன்; மனாசேயின் மூத்தமகனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனிதனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது. 2அபியேசரின் கோத்திரத்தார்களும், ஏலேக்கின் கோத்திரத்தார்களும், அஸ்ரியேலின் கோத்திரத்தார்களும், செகேமின் கோத்திரத்தார்களும், எப்பேரின் கோத்திரத்தார்களும், செமீதாவின் கோத்திரத்தார்களுமான மனாசேயினுடைய மற்ற மகன்களின் கோத்திரத்தார்களாகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தகுந்த பங்குகள் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்பின் மகனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாக இருந்தார்கள். 3மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு மகள்கள் தவிர மகன்கள் இல்லை; மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். 4அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் மகனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்களுடைய சகோதரர்கள் நடுவே எங்களுக்குப் பங்குகள் கொடுக்கும்படி யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகவே அவர்களுடைய தகப்பனுடைய சகோதரர்களின் நடுவே, யெகோவாவுடைய கட்டளையின்படி, அவர்களுக்குப் பங்குகளைக் கொடுத்தான். 5யோர்தான் நதிக்கு கிழக்கு திசையில் இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்கள் அல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாகும். 6மனாசேயின் மகள்கள் அவனுடைய மகன்களோடு பங்குகளைப் பெற்றார்கள்; மனாசேயின் மற்றக் கோத்திரத்தார்களுக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது. 7மனாசேயின் எல்லை, ஆசேர் துவங்கி சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாக என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது. 8தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடு இருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் கோத்திரத்தின் வசமானது. 9பிறகு அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவில் இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து மத்திய தரைக்கடலில் போய் முடியும். 10தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; மத்திய தரைக் கடல் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது. 11இசக்காரிலும் ஆசேரிலும் இருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் கிராமங்களும், இப்லேயாமும் அதின் கிராமங்களும், தோரின் குடிகளும் அதின் கிராமங்களும் எந்தோரின் குடிகளும் அதின் கிராமங்களும், தானாகின் குடிகளும் அதின் கிராமங்களும் மெகிதோவின் குடிகளும் அதின் கிராமங்களும் மனாசேயினுடையவைகள். 12மனாசேயின் கோத்திரத்தார்கள் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிட முடியாமல்போனது; கானானியர்கள் அந்தப் பகுதியிலே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள். 13இஸ்ரவேல் மக்கள் பலத்து பெருகினபோதும், கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல், அவர்களைக் கட்டாய வேலைக்காரர்களாக்கிக்கொண்டார்கள். 14யோசேப்பின் சந்ததியினர் யோசுவாவை நோக்கி: யெகோவா எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாக இருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சொந்தமாக ஒரே அளவையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள். 15அதற்கு யோசுவா: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாகவும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாகவும் இருந்தால், பெரிசியர்கள் ரெப்பாயீமியர்கள் குடியிருக்கிற மலைதேசத்திற்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான். 16அதற்கு யோசேப்பின் சந்ததியினர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் கிராமங்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியர்களிடமும் இரும்பு இரதங்கள் உண்டு என்றார்கள். 17யோசுவா, யோசேப்பு வம்சத்தார்களாகிய எப்பிராயீமியர்களையும் மனாசேயர்களையும் நோக்கி: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமட்டும் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும். 18அது காடாக இருக்கிறபடியினாலே, அதை வெட்டிச் சீர்படுத்துங்கள், அப்பொழுது அதின் கடைசிவரைக்கும் உங்களுடையதாக இருக்கும்; கானானியர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

Currently Selected:

யோசு 17: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for யோசு 17