YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 29

29
ஆகீஸ் தாவீதைச் சிக்லாக்கிற்கு அனுப்புதல்
1பெலிஸ்தியர் தங்கள் படைகளை ஆப்பெக்கிலே ஒன்றுசேர்த்தார்கள். இஸ்ரயேலர் யெஸ்ரயேலிலுள்ள நீரூற்றருகில் முகாமிட்டார்கள். 2பெலிஸ்திய ஆளுநர்கள் நூறு போர்வீரர்களையும், ஆயிரம் போர்வீரர்களையும் கொண்ட பிரிவுகளுடன் அணிவகுத்து முன்னே செல்ல, தாவீதும் அவன் போர்வீரரும் ஆகீஸின் பின்னே அணிவகுத்துச் சென்றார்கள். 3அப்பொழுது பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் ஆகீஸிடம், “இந்த எபிரெயர் ஏன் இங்கு இருக்கின்றனர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஆகீஸ், “தாவீது இஸ்ரயேலின் அரசனான சவுலின் ஒரு அதிகாரி அல்லவா? இவன் ஒரு வருடத்துக்கு மேலாக என்னுடனிருக்கிறான். இவன் என்னிடம் வந்தநாள் முதல் இன்றுவரை அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்றான்.
4ஆனால் பெலிஸ்திய தளபதிகள் கோபமடைந்து ஆகீஸிடம், “நீர் இவனுக்குக் கொடுத்த இடத்துக்கு இவனைத் திருப்பி அனுப்பும். இவன் எங்களுடன் போருக்கு வரக்கூடாது. இவன் யுத்தம் நடக்கும்போது எங்களுக்கு எதிரியாய் மாறுவான். எங்கள் சொந்த போர்வீரரின் தலைகளை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தலைவனைப் பிரியப்படுத்துவதற்கு, வேறு சிறந்த வழி அவனுக்கு உண்டோ? 5இந்தத் தாவீதைக் குறித்தல்லவா மக்கள் இப்படி ஆடிப்பாடி சொன்னார்கள்:
“ ‘சவுல் கொன்றது ஆயிரங்கள், தாவீது கொன்றது பத்தாயிரங்கள்’
என்று ஆடிப்பாடி வாழ்த்தியது இந்தத் தாவீதையல்லவா?”
6எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “யெகோவா இருப்பது நிச்சயமெனில் நீ கடமை தவறாதவன் என்பதும் நிச்சயம். நீ படையிலே என்னுடன் பணிசெய்வதை நான் விரும்புகிறேன். நீ என்னிடம் வந்துசேர்ந்த நாள் முதல் இன்றுவரை உன்னிடம் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை. ஆனாலும் என் ஆளுநர்கள் நீ என்னுடன் வருவதை விரும்பவில்லை. 7அதனால் சமாதானத்தோடே திரும்பிப்போ. பெலிஸ்திய ஆளுநர்களை கோபப்படுத்தக்கூடிய ஒன்றையும் செய்யாதே” என்றான்.
8அதற்குத் தாவீது, “நான் என்ன செய்துவிட்டேன்? நான் வந்தநாள் தொடங்கி இன்றுவரை உமது அடியவனிடம் என்ன குற்றம் கண்டீர்? நான் என் தலைவனாகிய அரசனின் பகைவருடன் யுத்தம் செய்யக்கூடாதா?” என்று கேட்டான்.
9அப்பொழுது ஆகீஸ் தாவீதிடம், “இறைவனுடைய தூதனைப்போல் எனக்குப் பிரியமானவனாய் இருந்தாய். ஆனாலும் பெலிஸ்திய படைத் தளபதிகள், ‘நீ எங்களோடு யுத்த களத்துக்கு வரக்கூடாது’ என்கிறார்கள். 10ஆகையால் நாளை அதிகாலையில் எழுந்து வெளிச்சம் வந்தவுடன், நீயும் உன்னுடன்கூட வந்த உனது தலைவனுடைய பணியாட்களும் புறப்பட்டுப் போங்கள்” என்றான்.
11எனவே தாவீதும் அவன் ஆட்களும் அதிகாலையில் பெலிஸ்தியரின் நாட்டுக்குத் திரும்பிப்போக எழுந்தார்கள். பெலிஸ்தியரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 1 சாமுயேல் 29