YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 30

30
தாவீது அமலேக்கியரை அழித்தல்
1தாவீதும் அவன் மனிதரும் மூன்றாவது நாள் சிக்லாக்கை அடைந்தார்கள். அமலேக்கியர் பெலிஸ்திய நாட்டின் நெகேப் பகுதியையும், சிக்லாகையும் சூறையாடியிருந்தார்கள். அவர்கள் சிக்லாக்கைத் தாக்கி அதை எரித்து, 2அங்குள்ள பெண்கள், சிறியவர், முதியவர் உட்பட அனைவரையும் சிறைப்பிடித்துக் கொண்டுபோயிருந்தார்கள். போகும்போது ஒருவரையும் கொலைசெய்யாமல், எல்லோரையும் தங்களுடன் கொண்டுபோய்விட்டார்கள்.
3தாவீதும் அவன் ஆட்களும் சிக்லாகுக்கு வந்தபோது, அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியரும், மகன்களும், மகள்களும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருப்பதையும் கண்டார்கள். 4எனவே தாவீதும் அவனுடனிருந்த மனிதரும் அழுவதற்குப் பெலனற்றுப் போகுமட்டும் கதறி அழுதார்கள். 5அவர்களோடு யெஸ்ரயேல் ஊராளான அகினோவாம், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையாயிருந்த அபிகாயில் ஆகிய தாவீதின் மனைவியர் இருவரும்கூட கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். 6தங்கள் மகன்களையும், மகள்களையும் இழந்த ஒவ்வொருவரும் மனங்கசந்ததினால் தாவீதைக் கல்லால் அடிக்க வேண்டுமெனப் பேசிக்கொண்டார்கள். அதை அறிந்த தாவீது மிகவும் மனவேதனையடைந்தான். தாவீதோ தன் இறைவனாகிய யெகோவாவுக்குள் பெலன் கொண்டான்.
7அதன்பின் தாவீது அகிமெலேக்கின் மகனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனிடம், “ஏபோத்தை என்னிடம் கொண்டுவா” என்றான். அபியத்தார் ஏபோத்தைத் தாவீதிடம் கொண்டுவந்தான். 8அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் அந்த கொள்ளைக்காரரை துரத்திப் போகட்டுமா? என்னால் அவர்களைப் பிடிக்க முடியுமா?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா, “அவர்களைத் துரத்திப்போ. நிச்சயமாக அவர்களைப் பிடித்து, கைதிகளைத் தப்புவிப்பாய்” என்றார்.
9எனவே தாவீதும், அவனுடனிருந்த அறுநூறு மனிதரும் பேசோர் கணவாய்க்கு வந்தபோது சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். 10ஏனெனில் இருநூறுபேர் அதிக களைப்படைந்திருந்ததால் அவர்களாலே கணவாய்க்கு கடந்துபோக முடியவில்லை. ஆனால் தாவீதும் நானூறுபேரும் அவர்களைத் தொடர்ந்து துரத்திச் சென்றார்கள்.
11இவ்வாறு அவர்கள் போகும் வழியில் எகிப்தியன் ஒருவன் வயலில் கிடப்பதைக் கண்டு அவனைத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட உணவும் கொடுத்தார்கள். 12அவனுக்கு அத்திப்பழ அடையில் ஒரு துண்டையும், இரண்டு திராட்சைப்பழ அடைகளையும் கொடுத்தார்கள். அவன் மூன்று நாட்களாக இரவும் பகலும் தண்ணீர் குடியாமலும், உணவு சாப்பிடாமலும் இருந்தான். எனவே அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டவுடன் களைப்பு நீங்கிப் பெலனடைந்தான்.
13அதன்பின் தாவீது அவனிடம், “நீ யாரைச் சேர்ந்தவன்? நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நான் ஒரு அமலேக்கியனுடைய அடிமையான எகிப்தியன். மூன்று நாட்களுக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் தலைவன் என்னை கைவிட்டுவிட்டார். 14நாங்கள் கிரேத்தியருடைய நெகேப் பகுதியையும், யூதாவுக்குச் சொந்தமான பிரதேசத்தையும், காலேப்பின் நெகேப் பகுதியையும் முற்றுகையிட்டு, சிக்லாக்கைத் தீக்கிரையாக்கினோம்” என்றான்.
15அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்களைச் சூறையாடிய கூட்டத்திடம் போக வழிகாட்டுவாயா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நீர் என்னைக் கொல்வதில்லையென்றும், என் தலைவனிடம் ஒப்படைப்பதில்லை என்றும் இறைவன் பேரில் ஆணையிட்டால், நான் உம்மை அவர்களிடம் கூட்டிக்கொண்டு போவேன்” என்றான்.
16அவ்வாறே அவன் தாவீதைக் கூட்டிக்கொண்டு அவர்களிடம் போனான். அங்கே அவர்கள், நாட்டுப்புறமெங்கும் சிதறுண்டு சாப்பிட்டு, குடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் பெலிஸ்திய நாடுகளிலிருந்தும் யூதா நாட்டிலிருந்தும் பெருந்தொகையான பொருட்களைக் கொள்ளையடித்து வந்த மகிழ்ச்சியிலே, இப்படிச் செய்துகொண்டிருந்தார்கள். 17அப்பொழுது தாவீது அன்று இரவு நேரம் தொடங்கி மறுநாள் மாலைவரை அவர்களுடன் சண்டையிட்டான். ஒட்டகங்களில் ஏறித் தப்பி ஓடிப்போன நானூறு வாலிபரைத் தவிர வேறு ஒருவனும் தப்பவில்லை. 18தாவீது அமலேக்கியர் கொள்ளையிட்டுக் கொண்டுபோன தன் இரு மனைவியர் உட்பட அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டான். 19அவர்கள் சிறைப்பிடித்தவர்களில் வாலிபரோ, முதியவரோ, ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ ஒருவருமே தவறவில்லை. கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும், ஒன்றுமே குறையாமல் தாவீது மீட்டுக்கொண்டு போனான். 20தாவீது அங்குள்ள ஆடு மாடுகளனைத்தையும் கைப்பற்றினான். அவற்றை அவன் மனிதர் மற்ற மந்தைகளுக்கு முன்னாக ஒட்டிச்சென்று, “இது தாவீதின் கொள்ளைப்பொருள்” என்று சொன்னார்கள்.
21அதன்பின் தாவீது பேசோர் கணவாய்க்கு வந்தான். அங்கே அதிக களைப்பினால் அவனுடன் போகமுடியாமல் இருந்த இருநூறு பேரும் இருந்தார்கள். அந்த மனிதர், தாவீதையும் அவனுடன் வந்த மனிதரையும் சந்திப்பதற்காக எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அவர்களின் சுகசெய்தியை விசாரித்தான். 22அப்பொழுது தாவீதைப் பின்பற்றியவர்களில் குழப்பக்காரரும், தீய குணங்கள்#30:22 தீய குணங்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம்; 2 கொரி. 6:15. கொண்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் தாவீதிடம், “அவர்கள் எங்களுடன் வராதபடியால் நாங்கள் மீட்டுக் கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் ஒரு பங்கையேனும் அவர்களுக்குக் கொடுக்கமாட்டோம். அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் மனைவிகளையும், பிள்ளைகளையும் மட்டும் அழைத்துக் கொண்டுபோகட்டும்” என்றார்கள்.
23அதற்குத் தாவீது, “என் சகோதரரே யெகோவா நமக்குத் தந்தவற்றை அப்படிச் செய்யக்கூடாது. யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்த கூட்டத்தை எங்களிடம் ஒப்படைத்தாரே. 24நீங்கள் சொல்வதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். யுத்த களத்துக்கு வந்தவர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைக்குமோ, அதே அளவே யுத்தத்துக்குரிய பொருட்களுடன் தங்கியிருக்கிறவர்களுக்கும் கிடைக்கவேண்டும். எனவே எல்லோருக்கும் சமமான பங்கே கிடைக்கவேண்டும்” என்றான். 25தாவீது இதை ஒரு ஒழுங்குவிதியாகவும், நியமமாகவும் ஏற்படுத்தினான். இப்படியே இது இன்றுவரை இஸ்ரயேலில் நடந்து வருகிறது.
26தாவீது சிக்லாக்கிற்கு வந்தபோது, “யெகோவாவின் பகைவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களில் உங்களுக்கும் அன்பளிப்பு இங்கே இருக்கிறது” என்று சொல்லி, தான் கொள்ளையடித்த பொருட்களில் சிலவற்றைத் தன் நண்பர்களான யூதாவின் முதியவர்களுக்கு அனுப்பிவைத்தான்.
27அவற்றைத் தாவீது பெத்தேல், ராமாத் நெகேப், யாத்தீரில் இருந்தவர்களுக்கும், 28அரோயேர், சிப்மோத், எஸ்தெமோவாவில் இருந்தவர்களுக்கும், 29ராக்கா, யெராமியேலியரின் பட்டணங்களில் இருந்தவர்களுக்கும், கேனியரின் பட்டணங்கள், 30ஓர்மா, கொராசான் ஆத்தாகில் இருந்தவர்களுக்கும், 31எப்ரோனில் இருந்தவர்களுக்கும், மற்றும் தாவீதும் அவன் மனிதரும் போய்வந்த எல்லா இடங்களிலுமுள்ளவர்களுக்கும் அன்பளிப்பாக அனுப்பினான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in